அறிஞர் அண்ணா பிறந்தநாள் செப்டம்பர் 15
விளக்கு கோயிலுக்கா? மக்களுக்கா?
சென்னை மாநகராட்சி மன்றத் தேர்தலில் அண்ணா போட்டியிட்ட போது பெத்துநாயக்கன்பேட்டை வட்டாரத்தில் அப்பொழுது கோயில்களுக்கும், மெர்க்குரி விளக்குகள் போடப்பட்டு வந்தன. அந்த நேரத்தில் அண்ணாவுக்கு எதிராகக் காங்கிரஸ்காரர் கள் நோட்டீசு அடித்து வெளியிட்டார்கள். அப்பொழுது நடைபெற்ற ஜெயபாரதம் பத்திரிகையிலும் அண்ணாதுரைக்கு ஓட்டுப் போட்டால் ஆலயங்களில் விளக்கு எரியாது என்று எழுதியிருந்தார்கள்.
அதற்கு அண்ணா பதிலளிக்கையிலே, இந்த நகரத்திலுள்ள சேரிகளெல்லாம் பன்னெடுங்காலமாக இருளில் மூழ்கி இருக்கின்றன. அந்தச் சேரிகளுக்கெல்லாம் விளக்குப் போட்ட பிறகு, ஏழை எளிய மக்கள் வசிக்கின்ற பகுதிகளுக்கெல்லாம் விளக்குப்போட்ட பிறகு, பணமும், மின்சாரமும் மிச்சப்பட் டால் கோயிலுக்கு விளக்கு எரியும். சேரிப் பகுதிகளிலே இருட்டிலே மக்கள் வசிக்கிறார்கள்.
அங்கு நண்டு கடித்தாலும், நட்டுவாய்க்காலி கடித்தாலும் அந்தத் துன்பங்களை யெல்லாம் மக்கள் அனுபவிக்க வேண்டியிருக்கிறது; அவர்களுக்கு விளக்குப் போடாமல் ஆண்டவனுக்கு விளக்குப் போட்டால் ஆண்டவன் முகம் கருக்குமேயொழிய ஒளி பெறாது என்று சொன்னார். அப்படியானால் உனக்கு ஓட்டு இல்லை என்றார்கள். அப்படிப் பட்ட ஓட்டு எனக்கு வேண்டாம் என்றார் அண்ணா. அதனால் தேர்தலில் தோற்றார். ஆனாலும் அதைப்பற்றி அவர் கவலைப் படவில்லை. தன்னுடைய தேர்தல் வெற்றிக்காக அண்ணா கொள்கையை விட்டுக்கொடுக்கவில்லை. அவர் மக்களைப் பற்றியே கவலைப்பட்டார் என்பதற்கு இந்த நிகழ்ச்சியே சிறந்த உதாரணம் அல்லவா!