கோமாளி மாமா-36 : புத்தியைத் தீட்டு
விடுமுறை நாள்களில் கோமாளி மாமா சொல்லும் கதையைக் கேட்பதற்காகத் தோட்டத்திற்குச் சரியான நேரத்திற்கு வந்துவிட்டார்கள் மாணிக்கமும், மல்லிகாவும்.
கோமாளி மாமாவும் வந்துவிட்டார். ஆனால், செல்வம் சற்று காலதாமதாக தோட்டத்து வாசலில் இருந்து மூச்சு இரைக்க வந்தான்.
அவனைப் பார்த்ததும் கோமாளி மாமா “என்ன செல்வம்… வேக வேகமா மூச்சு இரைக்க வர்றியே வேற எங்கேயும் போயிட்டு வர்றியா?” என்றார்.
“இல்லே… மாமா… நான் வர்ற வழியிலே எங்க பள்ளிக்கூட காம்பவுண்டு சுவத்திலே கலர் அடிச்சு நல்ல நல்ல வாசகங்களை எழுதிக்கிட்டிருந்தாங்க. அதை கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்தேன்… அதான் நேரமாயிடுச்சு….” என்றான் செல்வம்.
“ஆமா! ஆமா… நான் கூட வரும் போது பாத்தேன். அறிஞர் அண்ணா அவங்க படத்தை வரைஞ்சுக்கிட்டிருந்தாங்க…” என்றான் மாணிக்கம்.
“அந்த அண்ணா படத்தை வரைஞ்சு முடிச்சிட்டாங்க. அதுக்குப் பக்கத்தில ‘கத்தியைத் தீட்டாதே!… உந்தன் புத்தியைத் தீட்டு’ன்னு எழுதியிருக்காங்க…’’ என இழுத்தபடி சொன்னான் செல்வம்.
மல்லிகா சிரித்தபடி “என்ன செல்வம் … உனக்கு சம்மந்தம் இல்லாததா இருக்கா?’’ என கேலியாகக் கேட்டாள்.
“அட அது இல்லே… கத்தியைத் தீட்டுறதைப் பாத்திருக்கேன். புத்தியை எப்படி தீட்ட முடியும்? கத்தியை கருங்கல்லுலேயோ, சாணைக்கல்லுலேயோ தீட்டலாம். புத்தியைத் தீட்டுன்னா எப்படி? தலையைக் கொண்டு போய் தரையில தேச்சுக்கிட்டிருக்க முடியுமா?” என்று ஒன்றும் தெரியாதவன் போல் கேட்டான் செல்வம்.
“கத்தியைத் தீட்ட வழியிருக்கு…. புத்தியைத் தீட்ட என்ன வழி? இதுதானே உன் கேள்வி! இதுக்கு ஒரு கதை சொல்றேன் வாங்க…” என்று கோமாளி மாமா மரத்தடியில் இருக்கும் பாறை மீது அமர்ந்தார். அவரைச் சுற்றி மாணிக்கம், மல்லிகா, செல்வம் மூவரும் தரையில் உட்கார்ந்தனர்.
அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன வித்தியாசம்? இது ஒரு முக்கியமான கேள்வி.
இந்தக் கேள்வியத்தான் ஒரு பெரியவர் கிட்டே ஒருத்தரு கேட்டாரு, இப்ப செல்வம் கேட்ட மாதிரி…
அதுக்கு அந்தப் பெரியவர், அந்தக் கேள்வி கேட்டவரை நிமிர்ந்து பாத்துட்டு, “அறிவுக்கும் புத்திசாலிதனத்துக்கும் என்ன வேறுபாடுன்னு நீங்க கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்றேன். அதுக்கு முன்னே… நீங்க ஒரு வேலை செய்யணும்’’னு சொன்னாரு.
“என்ன செய்யணும் சொல்லுங்க?”ன்னாரு கேள்வி கேட்டவரு.
“அதோ அங்கே ஒரு பாட்டி உக்காந் திருக்காங்களே…. அவங்ககிட்டப் போயி… ‘இங்கேயிருந்து பக்கத்திலே இருக்கிற கிராமத்துக்குப் போய்ச் சேர எவ்வளவு நேரமாகும்னு கேட்டுக்கிட்டு வாங்க’ன்னு… பெரியவர் சொன்னாரு. சரின்னு சொல்லிட்டு கேள்வி கேட்டவரு நேரா அந்தப் பாட்டிகிட்ட போனாரு.
அந்தப் பாட்டி வீட்டுத் திண்ணையில காலை நீட்டி உக்கார்ந்துக்கிட்டு வெத்திலை பாக்கைச் சின்ன உலக்கையாலே இடிச்சுக்கிட்டு இருந்தாங்க.
போனவரு, “பாட்டியம்மா! பாட்டியம்மா!”ன்னு கூப்பிட்டாரு. பாட்டியம்மா வெத்தலை இடிக்கிறதை நிறுத்திப்புட்டு அவரைப் பார்த்தாங்க.
“ஏங்க பாட்டியம்மா….. ‘இங்கே இருந்து பக்கத்திலே இருக்கிற கிராமத்துக்குப் போய்ச் சேர எவ்வளவு நேரம் ஆகும்?’ அப்படின்னு கேட்டாரு.
பாட்டியம்மா அவரை ஏற இறங்கப் பாத்தாங்க. ஆனா பதில் எதுவும் சொல்லலே.
போனவரு மறுபடியும் “பாட்டியம்மா, இங்கே இருந்து பக்கத்தில இருக்கிற கிராமத்துக்குப் போய்ச்சேர எவ்வளவு நேரம் ஆகும்?” அப்படின்னு சத்தம் போட்டுக் கேட்டாரு.
பாட்டியம்மா அவரைப் பார்த்துக்கிட்டே இருந்ததே தவிர பதில் எதுவும் சொல்லவே இல்லை.
இந்த பாட்டியம்மாவுக்கு சரியா காது கேக்காது போல இருக்கு… இல்லே புத்தி சுவாதீனம் இல்லாததா இருக்கும்… இவங்ககிட்டே எதுக்கு கத்தணும் அப்படின்னு நினைச்சுக்கிட்டு வந்த வழியே திரும்பி நடந்தார்.
கொஞ்ச தூரம் நடந்து வந்தவரை பாட்டியம்மா “ஏ… தம்பி …. இங்கே வாப்பான்னு கூப்பிட்டாங்க.” ‘என்னடா இது இவ்வளவு நேரம் கேட்டும் எந்தப் பதிலும் சொல்லாத பாட்டி இப்ப எதுக்கு கூப்பிடுது’ன்னு திரும்பிப் போனாரு.
“யப்பா…. நீ இங்கேயிருந்து பக்கத்து கிராமத்துக்குப் போய்ச் சேர பதினைஞ்சு நிமிஷம் ஆகும்” அப்படின்னு சொல்லுச்சு பாட்டியம்மா.
இப்ப ஒரு மாதிரியா பார்த்தாரு கேட்டவரு. “ஏன் பாட்டியம்மா.. இந்த பதிலை நான் பக்கத்திலே நின்று காட்டுக் கத்தா கத்தினப்பவே சொல்லி இருக்கலாமே…. அதை ஏன் என்னைப் போகவிட்டு, அப்புறம் திரும்ப கூப்பிட்டுச் சொல்றிங்களே….” அப்படின்னாரு.
பாட்டியம்மா… சின்ன உலக்கையில் இருந்த இடிச்ச வெத்தலையை வாயில அள்ளிப் போட்டுக்கிட்டே சிரிச்சாங்க. அதுக்குப் பிறகு…
“தம்பி! நீ எவ்வளவு வேகமாக நடக்கிறேங் கிறதைப் பார்க்காம எப்படியப்பா… நீ கிராமத்துக்குப் போய்ச் சேர்ற நேரத்தைச் சொல்ல முடியும்? அதனாலதான் உன்னை நடக்கவுட்டுப் பார்த்து அதுக்-குப் பிறகு நேரத்தைச் சொன்னேன்.” அப்படின்னாங்க பாட்டியம்மா.
போனவரு பதில் எதுவும் சொல்ல முடியல. திரும்பி பெரியவர்கிட்ட வந்து நடந்ததைச் சொன்னாரு.
“அதுக்குப் பேருதான் தம்பி புத்திசாலித்தனம்” அப்படின்னு சொன்னாரு பெரியவரு.
இந்தப் புத்திசாலித்தனம் எல்லோருக்கும் வரணும்ங்கிறதுக்காகத்தான் “கத்தியைத் தீட்டாதே; புத்தியை தீட்டு’ன்னு எழுதிப் போட்டிருக்காங்க.
மாணவர்களான நீங்க பள்ளிக்கூடம் போயி நல்லா படிக்கிறதும்….. நூலகங்களுக்குப் போயி நல்ல புத்தகங்களைத் தேடிப் படிக்கிறதும் புத்தியைத் தீட்டிக்கத்தான். இப்பப் புரியுதா?’’ என்றார் கோமாளி.
பள்ளிக் கூடமும், நூலகமும்தான் புத்தியைத் தீட்டுற இடம்னு தெளிவாப் புரிஞ்சுது என்றான் செல்வம்.
சரி…… சரி…. வாங்க…. பள்ளிக்கூடத்துக்கு மகிழ்ச்சியாப் போவோம் என்றாள் மல்லிகா.
(மீண்டும் வருவார் கோமாளி)