தொடர் கதை – 8 : கடவுளுக்குக் கையூட்டா? வழக்குரைஞர் வாதம்!
நீதிபதி: வழக்குரைஞர் பழனிவேல் அவர்களே உங்கள் வாதத்தை நீங்கள் தொடரலாம்.
வழக்குரைஞர்: அய்யா, கடவுள் பக்தர்கள், கடவுளை நம்புகிறவர்கள் என்று சொல்லிக் கொண்டு, கடவுளுக்கு எதிரான செயல்களைத் தாம் பெருமளவுக்குச் செய்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், கடவுளை இழிவுபடுத்துகிறார்கள். கடவுளை மனிதனாக்கி, மனித ஆசாபாசங்களை அதற்கும் திணிக்கிறார்கள்.
கடவுள் உருவமற்றது, அனைத்திலும் இரண்டறக் கலந்த சக்தி என்று சொல்லிக்கொண்டே, கடவுளுக்கு உருவம் கொடுக்கின்றார்கள். நான்கு தலை, அய்ந்து தலை, ஆறு தலை என்றும், நான்கு கை, 12 கையென்றும் பல உருவங்களை, பல கடவுளை, உருவாக்குகின்றனர். இது அவர்கள் கூறும் கடவுள் கொள்கைக்கு எதிரானது அல்லவா?
அதுமட்டுமா? கடவுளுக்கு மனைவி, இரண்டு மனைவி, பிள்ளை என்று மனிதனுக்கு உள்ளதைப் போலவே கடவுளுக்கும் உருவாக்குகின்றனர்.
ஒழுக்ககேடான கதைகளை கடவுளுக்கும் கற்பித்து வைத்திருக் கின்றனர்.
அதுமட்டுமல்ல இக்காலத்தில் ஒரு காரியம் நிறைவேற இலஞ்சம் கொடுப்பதுபோல, கடவுளுக்கு இலஞ்சம் கொடுக்கின்றனர். பிரார்த்தனை, வேண்டுதல், காணிக்கை என்கிற பெயரில் கடவுளிடம் பேரம் பேசுகின்றனர்.
நீ எனக்கு இதையெல்லாம் செய், நான் உனக்கு இதெல்லாம் செய்கிறேன், தருகிறேன் என்று பிரார்த்தனை செய்கின்றனர். இதைவிட கடவுளை இழிவு செய்யும் செயல் வேறு உண்டா?
கடவுள் தனக்குக் காணிக்கை தருகின்றவர் களுக்கு நன்மை செய்கிறது என்றால் அது மனிதனைப் போல இலஞ்சம் பெறுகிறது என்றுதானே பொருள்?
“பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்,
கோலம்செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே
நீயெனக்குச் சங்கத்தமிழ் மூன்றும் தா!’’
என்பது பச்சையான பேரம் அல்லவா? நான் உனக்கு இதைத் தருகிறேன், நீ எனக்கு அதைக் கொடு என்ற கையூட்டு அல்லவா? இப்படியெல்லாம் செய்வது கடவுளுக்குப் பெருமை சேர்க்குமா? அல்லது இழிவு தருமா? கடவுளைப் பெருமைப்படுத்துகிறவர்கள் இப்படிப் பட்ட காரியங்களைச் செய்யலாமா?
மேலும், ஆயிரக்கணக்கான குழந்தைகள் பாலுக்கு அழும் நிலையில், தலையில் தடவ எண்ணெய் இல்லா நிலையில், குடியிருக்கக் குடிசைகூட இல்லாத நிலையில், தனக்குப் பாலாபிஷேகம், தேனாபிஷேகம் வேண்டும், எண்ணெய்யில் குளிப்பாட்ட வேண்டும், கோடிக் கணக்கான ரூபாயில் தனக்குக் கோயில் வேண்டும் என்று கடவுள் கேட்குமா?
கடவுள் உலகில் உள்ளவர்களுக்குத் தாய் போன்றது என்கிறோம். தன் பிள்ளை பசித்திருக்க தாய் உண்பாளா? அப்படி உண்டால் அவள் தாயாக இருக்க முடியுமா? அப்படியென்றால் தன் பிள்ளைகளான மக்கள், பாலின்றி, எண்ணெயின்றி வாழக் குடிசையின்றி இருக்கும்போது, தனக்கு அவையெல்லாம் வேண்டும் என்று கடவுள் கேட்குமா?
மக்களுக்குச் செய்வதே மகேசனுக்குப் போய்ச் சேரும் என்று கடவுள் தத்துவம் கூறிக்கொண்டே, மக்களைத் தவிக்கவிட்டுவிட்டு, கடவுளுக்கு அதைச் செய்கிறேன், இதைச் செய்கிறேன் என்று பொருளையும், பொழுதையும் வீணடிப்பது கடவுளுக்கும், மக்களுக்கும் செய்யும் துரோகம் அல்லவா?
அய்யா, பக்தர்களே கூறும் கதையொன்றைக் கூறி என் வாதத்தை நிறைவு செய்ய விரும்புகிறேன்.
ஒரு விவசாயி வாழை பயிரிட்டு, கடவுளிடம் வேண்டுதல் செய்தாராம். “கடவுளே! வாழை நல்ல முறையில் காய்த்தால், ஒரு வாழைத் தாரை உமக்குக் காணிக்கையாகத் தருகிறேன்’’ என்று வேண்டிக் கொண்டாராம்.
வாழை வளமாகக் காய்த்தபின் வேண்டுதலை நிறைவேற்ற 100 வாழைப்பழங்களை வேலைக் காரரிடம் கொடுத்து கோயிலில் படைக்க சொன்னதாகவும் பசியில் அந்த வேலைக்காரர் 3 பழங்களை எடுத்துத் தின்று விட்டு மீதிப் பழங்களை மட்டும் கோயிலில் கொடுத்தாராம். அந்த 3 பழங்கள் தான் தன்னை வந்து சேர்ந்தன என்று விவசாயியின் கனவில் கடவுள் வந்து சொன்னதாகப் பக்தர்கள் கதை சொல்வார்கள்.
இக்கதை மூலம் பக்தர்கள் சொல்வது என்ன?
மக்களுக்குச் செய்வதே உண்மையான கடவுள் தொண்டு என்பது தானே!
எனவே, அவர்களின் சொற்படியே கடவுளின் பெயரால் பொருள்களை நாசம் செய்யாது, மக்களுக்கு உதவுவதே உண்மையான கடவுள் பக்தர்களுக்கு அழகு. எனவே, கடவுளுக்கு எதிரான, பொருளை நாசமாக்கும் காரியங்களை, இந்த நீதிமன்றம் தடை செய்ய வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.’’ என்று தன் வாதத்தை நிறைவு செய்தார் வழக்குரைஞர் பழனிவேல். நீதிமன்றமே அமைதியாய் இருந்தது. வரதாச்சாரி தலை குனிந்து நின்றார்.
“தீர்ப்பு அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை வழங்கப்படும்‘‘ என நீதிபதி அறிவித்தார்.
(தொடரும்)