குறுந்தொடர் – 2 : அம்முக்கு வயது 11
வயலுக்குச் சென்று கொண்டிருக்கும் போது அம்மு, ”ஏன் தாத்தா, அப்பாவுக்கு எல்லாரும் வணக்கம் வெச்சாங்க? நீங்க ஏன் சட்டை போட மாட்டிக்கிறீங்க? அந்தத் தண்ணீர்ல விளையாடுறாங்களே அவங்களுக்கு எதுவும் ஆவாதா?” எனக் கேள்விகள் கேட்டுக் கொண்டே வந்தாள்.
தாத்தா சிரித்தார். “இரு… ஒண்ணு ஒண்ணாப் பதில் சொல்றேன்” என்றார்.
“அந்தப் பசங்க எல்லாம் பள்ளி விடுமுறை என்றால் இப்படித்தான் விளையாடுவாங்க. அவங்களுக்கு இதெல்லாம் ஒண்ணும் பண்ணாது… பழகிடுச்சி” எனச் சொல்லி விட்டு வயலுக்குப் போகும் வரை அமைதியாகவே இருந்தார் தாத்தா.
மற்ற கேள்விகளுக்கு எப்போது தாத்தா பதில் சொல்வார் என ஆவலாகக் காத்திருந்தாள் அம்மு.
வயலுக்குச் சென்றதும், “இங்கே சுத்தியிருக்கிற அய்ந்து ஊருக்கும் சேர்த்து உன் அப்பாதான் முதல் இஞ்ஜினியர். முதல்முறையாகக் கல்லூரி போய் படிச்சதும் உன் அப்பாதான்.. நாங்களெல்லாம் பள்ளிக்கூடத்துக்கே போகாதவங்க. இப்போ இங்கே இந்த வயலில் நிக்கிறோம்ல, இதே வயலில் தான் நான், உன் பாட்டி எல்லாம் வேலை செய்வோம்.
எனக்கு ஏதோ ஒரு வைராக்கியம். உன் அப்பாவை எப்படியாவது படிக்க வெச்சிடணும்ன்னு. அவனும் சிரமப்பட்டு படிச்சான். அதுவும் முன்னெல்லாம் பக்கத்துக்கு ஊருக்குள்ளே எல்லாம் நாமெல்லாம் போக முடியாது, வர முடியாது, வயல் எல்லாம் வாங்க முடியாது. ஆனால், உங்கப்பா படிச்சி மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் எடுத்து முதல் ஆளா நின்னப் பிறகுதான் கொஞ்சம்கொஞ்சமா மாற்றம் வந்துச்சி. எல்லாரும் சட்டை கூடப் போட ஆரம்பிச்சாங்க. எங்க வயசில் இருக்கிறவங்களுக்கு சட்டை போடறதுக்கு இன்னும் முழுசா பழகல. பண்டிகை அன்னிக்கு மட்டும் போடுவோம்” என்று சொல்லிவிட்டுப் பெருமூச்சு விட்டார் தாத்தா.
சிறிதுநேரம் ஏதும் பேசாமல் இருந்த தாத்தா, தொண்டையைக் கனைத்துக்கொண்டு பேச்சைத் தொடர்ந்தார். ”உங்க அப்பா படிச்சி வெளிநாடு எல்லாம் போன பிறகுதான், இப்போ நீங்க தங்கி இருக்கீங்கல… கட்டிமுடிச்சிருக்கும் புது வீடு, இந்த வயல் எல்லாம். அதுமட்டுமா வீட்டுக்கு மாடியில் உங்க அப்பா ஏதோ நூலகம் வேற வைக்கப் போறானாம். அடுத்த வாரம் உன் பிறந்த நாள் வருதுல அன்னைக்குத் தான் வீடு, நூலகம் எல்லாம் திறக்கப் போறோம்” என்றார் தாத்தா.
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அம்முவுக்குச் சில தகவல்கள் புரிந்தும், சில புரியாமலும் இருந்தன. இருந்தும் இதையெல்லாம் சொல்லும்போது தாத்தா கண்களிலிருந்து கண்ணீர் வழிந்ததைக் கவனித்தாள்.
தாத்தாவும் அம்முவும் வீட்டுக்கு வந்தனர். வரும் வழியில் தாத்தா சொன்னார். “என்னிடம் பேசியது போல் வீட்டில் பாட்டி கிட்டேயும் நல்லா பேசு அம்மு; பாட்டி சந்தோசப்படுவாங்க” என்றார் தாத்தா.
‘சரி தாத்தா’ எனச் சொல்லிய அம்மு, வீட்டுக்குள் நுழையும்போதே பாட்டீ… என்று கத்திக்கொண்டே ஓடினாள். பாட்டியின் மடியில் உட்கார்ந்துகொண்டு ஏரி, வயல் பார்த்தது, தாத்தா அழுதது என்று எல்லாத்தையும் சொன்னாள்.
‘கோலி’ நண்பர்கள்
அன்று மாலை அம்முவின் அப்பா, அம்மா இருவரும் டவுனுக்குச் சென்று விட்டார்கள். மீண்டும் தாத்தாவோட கிளம்பிய அம்மு, வீதியில் அவளைப் போன்ற சிறுவர்கள் கோலி விளையாடியதைப் பார்த்து, அவர்களுடன் சேர்ந்து கோலி விளையாட ஆசைப்பட்டாள். எப்படி கோலி விளையாடுவது என்று அம்முவுக்குக் கற்றுக் கொடுத்தார் தாத்தா.
நேரம் போவதுகூடத் தெரியாமல் விளையாடிக் கொண்டே இருந்தாள் அம்மு. விளையாட்டால் கருப்பசாமி, ரகீம், கந்தன், அமுதா, தமிழ்க்கொடி, பரீதா, மேரி சோபியா, ராபர்ட் என நிறைய நண்பர்கள் அவளுக்குக் கிடைத்தார்கள்.
தாத்தாவும் அம்முவும் நன்கு இருட்டிய பிறகுதான் வீட்டுக்கு வந்தார்கள். டவுனுக்குச் சென்ற அப்பாவும் அம்மாவும் இரவில்தான் வந்தார்கள்.
இரவு உணவுக்குப் பிறகு, அம்முவைப் படுக்கைக்கு அழைத்த அம்மாவிடம், நான் தாத்தா பாட்டி கிட்டேயே படுத்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டாள்.
அனைவருக்கும் ஆச்சரியம் தான். அம்மா விடமும், அப்பாவிடமும் கதைகள் கேட்காமல் தூங்க மாட்டாள். அதுவும், அம்மாவைக் கட்டிப் பிடித்தபடிதான் தூங்குவாள் அம்மு. இன்று இப்படி மாறிவிட்டாளே என்று வியப்பாகப் பார்த்தார்கள்.
சரி என்று அம்மா சொன்னதும், அனைவரும் தூங்கத் தயாரானார்கள். படுக்கையில், “தாத்தா இன்னைக்கு நான் ரொம்ப மகிழ்ச்சியா இருந்தேன். நிறையக் கத்துக்கிட்டேன் உங்க கிட்டேயிருந்து. இப்போ நான் ஒங்க ரெண்டு பேருக்கும் ஒரு விஷயம் கத்துத்தரப் போறேன்” எனச் சொல்லி அவளது இரவு உடை பாக்கெட்டில் இருந்து செல்போனை எடுத்தாள்.
செல்போனில் எப்படி வீடியோ கால் செய்யலாம், கேமராவை எப்படிப் பயன்படுத்தலாம் என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும் போதே தூங்கிப் போனாள்.
(தொடரும்)