சாதனைப் பிஞ்சு : பதினொரு வயது புத்தக ஆசிரியர்!
‘குழந்தைகளை குழந்தைகளாகவே பார்க்க வேண்டும்; அவர்களை எதற்கும் கட்டாயப்படுத்திப் பழக்கக் கூடாது’ என்பது சரியே! ஆயினும் பிஞ்சு வயதிலேயே அறிவாய் வளரும் பிள்ளைகளைப் பாராட்டி மகிழத்தானே வேண்டும். தமிழ்நாட்டைச் சேர்ந்த பெரியாரியக் குடும்பங்களின் கிளைகளில் ஒன்றான, லண்டனில் வசிக்கும் மருத்துவர் மு.வெங்கடேஷ், மருத்துவர் சந்தனா ஆகியோரின் 11 வயது பெரியார் பிஞ்சு நவீனா, ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதி, ‘அடடே’… என்று வியப்படைய வைத்திருக்கிறார்! 5 வயதிலேயே நவீனா எழுதிய படைப்பு நமது “பெரியார் பிஞ்சு” இதழில் வந்துள்ளது.அதுதான் அவரின் முதல் படைப்பு!
‘The book that changed my world’ (என்னுடைய உலகை மாற்றிய புத்தகம்) என்ற நவீனாவின் புத்தகத்தை 15.7.2023 அன்று சனிக்கிழமை, சென்னையில் இருக்கும் அறிஞர் பெருமக்கள் சூழ, ஆசிரியர் தாத்தாவே வெளியிட, பேரா.சுப.வீரபாண்டியன் இந்நூலைப் பெற்றுக்கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில், ஆசிரியர் தாத்தா நவீனாவுக்கு ஒரு எழுதுகோலைப் பரிசாகக் கொடுத்து, “நவீனாவின் எழுதுகோல், அவருடைய (நவீனா) உலகை மட்டுமல்ல, மற்றவர்களின் உலகையும் மாற்றும் வல்லமை படைத்தது!” என்று பாராட்டினார். பிறகு மறக்காமல், நவீனாவின் முதல் படைப்பு பெரியார் பிஞ்சு இதழில் வந்ததைச் சொல்லி, “நாங்கள் அன்றே நவீனாவை அடையாளம் கண்டுகொண்டோம்.
அன்று மலாலா! இன்று நவீனா!” என்று பாராட்டி மகிழ்ந்தார்.
அறிஞர் பெருமக்கள் இருந்த மேடையில் நவீனா, “இது என்னுடைய வாழ்க்கையில் மிகுந்த சிறப்புக்குரிய நாள்! எனக்குள் நான் செய்த பயணமே இந்தப்புத்தகம்! எனது ஆர்வத்தை ஊக்குவித்த எனது ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும், புத்தக உருவாக்கத்தில் உதவிய அனைவருக்கும் நன்றி” என்று ஆங்கிலத்தில் ஏற்புரை வழங்கினார்.
“பெரியார் பிஞ்சு” யூடியூப் பக்கத்தில் நிகழ்ச்சியின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. பாருங்கள்! நீங்களும் எழுத முயற்சியுங்கள்! வாழ்த்துகள் பிஞ்சுகளே!<