இது புதுசு: நடந்த கதை
விஷ்ணுபுரம் சரவணன்
“தந்தின்னா என்னம்மா?”
செழியன் தன் அம்மாவிடம் கேட்டான்.
படித்துகொண்டிருந்த அம்மா, புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, தன் அருகில் இருந்த நாற்காலியில் செழியனை உட்காரச் சொன்னார். செழியன் புத்தகப் பையை முதுகில் இருந்து கழற்றிக் கீழே வைத்துவிட்டு அந்த நாற்காலியில் அமர்ந்தான்.
செழியன் அந்த ஊரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்புப் படிக்கிறான். அம்மா, தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அப்பா, அந்த ஊரின் அரசு நூலகத்தில் நூலகராக உள்ளார்.
“சொல்லுங்கம்மா, தந்தின்னா என்ன?”
“சொல்றேன் செழியா… இப்போ, மதுரையில் இருக்கிற உங்க அத்தைக்கு ஒரு செய்தியை தெரிவிக்கணும்னா என்ன பண்ணுவ”
“போன் பண்ணிச் சொல்வேன். போன் எடுக்கலன்னா, வாட்ஸ்அப்ல மெசேஜ் போடுவேன்”
“இப்போதுதான், எளிதா செய்திகளைப் பரிமாறிக்கொள்ள முடியுது. தொழில்நுட்பம் ரொம்பவே முன்னேறிடுச்சு. முன்னே எல்லாம் அப்படி இல்ல. ராஜாக்கள் காலத்துல புறாக்களைப் பழக்கி அதோட கால்கள்ல செய்தி எழுதின துணியைக் கட்டி அனுப்புவாங்க”
“நான்கூட ஒரு கதையில படிச்சிருக்கேன்”
“அடுத்தடுத்து பல மாற்றங்கள் நடந்துச்சு. அதுல ஒன்னுதான் தந்தி. வெளியூர்ல இருக்கிற ஒருத்தருக்கு செய்தியைத் தெரிவிக்கணும்னா, அதுக்கு தந்திதான் உதவினுச்சு”
“அட… அம்மா, அதுதான் என்னான்னு கேட்கிறேன்”
“ஒருத்தர் அவங்க ஊர்ல இருக்கிற அஞ்சல் நிலையத்துக்குப் போய், வெளியூர்ல இருக்கிறவங்களுக்கு அனுப்ப வேண்டிய செய்தியைக் கொடுப்பாங்க. அவங்க அங்கே இருந்து சம்பந்தப்பட்ட மனிதர் இருக்கிற அஞ்சல் நிலையத்துக்குத் தந்தி மூலமா அந்தச் செய்தியை அனுப்புவாங்க. அங்கே இருக்கிற போஸ்ட்மேன் அந்தச் செய்தியைச் சம்பந்தப்பட்டவர்கிட்ட போய் கொடுப்பாரு”
“ஓ! தந்தி எப்படி அனுப்புவாங்க”
“இங்கே.. இதைப் பற்றி விரிவா, ஒரு வீடியோ இருக்கு… பாரு” என்று தன் மொபைலில் இணையத்தில் உள்ள வீடியோவைக் காட்டினார் அம்மா.
”செய்தியைக் கொண்டு போய்ச் சேர்க்கிறதுதான் தந்தி, இல்லையாம்மா?”
“அப்படி சாதாரணமா சொல்லிட முடியாது செழியா!. ஒரு தந்திதான் பெரிய சமூகப் புரட்சியின் வெற்றிக்குக் காரணமா இருந்துச்சு”
”அப்படியா! யாருக்கு வந்த தந்தி?”
”சரியா நூறு ஆண்டுக்கு முன்னால, ஏப்ரல் 12ஆ-ம் தேதி கேரளாவில் இருந்து குரூர் நீலகண்டன் நம்பூதிரி என்பவர் பெரியாருக்கு ஒரு தந்தி அனுப்புனாரு. வைக்கம் போராட்டத்துக்கு நீங்க வந்துதான் ஆகணும். உடனே வாங்கன்னு அந்தத் தந்தியில சொல்லியிருந்தாரு”
”வைக்கம்ங்கிறது போராட்டம் பேரா? ஊர் பேரா?”
அம்மா சிரித்துக்கொண்டே செழியனின் தலையைத் தட்டிக் கொடுத்தார்.
“ஹா… ஹா…! நல்ல கேள்விதான் செழியா… வைக்கம் என்ற ஊர்ல நடந்த போராட்டம். அதனால அதை வைக்கம் போராட்டம்னு சொல்வாங்க”
“அங்கே எதுக்காகப் போராட்டம் நடந்துச்சு?”
”சொல்றேன். ஆனா, நான் அவசரமா ஒரு மெயில் அனுப்பணும். அதுக்கு எப்படியும் அரை மணிநேரம் ஆயிடும். அதுக்குள்ள, நீ போய் உடை மாத்திட்டு, கை கால் கழுவிவிட்டு வந்திடு” என்றார்.
செழியனும் சரி என்று சொல்லிவிட்டு அறைக்குள் சென்றான். அரைமணி நேரம் எப்போது முடியும் என்று இருந்தது செழியனுக்கு.
“செழியா!”… என்று அம்மா அழைக்கும் சத்தம் கேட்டது.
“வந்துட்டேன்ம்மா” என்ற சொல்லியவாறே, செழியன் இரண்டு கோப்பைகளில் சூடான தேநீர் எடுத்து வந்தான். அம்மாவுக்கு செழியன் தயாரிக்கும் தேநீர் என்றால் மிகவும் பிடிக்கும்.
“ஆஹா! டீ குடிச்சா நல்லா இருக்குமேன்னு நினைச்சேன்…” என்றவாறு ஒரு கோப்பையை வாங்கி கொண்டார்.
“சரிம்மா, டீ குடிச்சிகிட்டே, வைக்கம் பற்றிச் சொல்ல ஆரம்பிங்க”
“அதுக்கு முன்னாடி… இந்த ஓவியத்தைப் பாரு” என்று சொல்லி அம்மா ஓர் ஓவியத்தைக் காட்டினார்.
நெரிசல் மிகுந்த கடைத் தெருவில் பல மனிதர்கள் இரு திசைகளிலும் வேக வேகமாகச் சென்றுகொண்டிருந்தார்கள். ஒருவர் மற்றவரை இடித்துக்கொண்டு முன்னே செல்வதும் இருந்தது. சில வியாபாரிகள் பொருள்களை விற்பனை செய்துகொண்டிருந்தனர். இந்தக் காட்சியை நேரில் பார்ப்பது போல இருந்தது. அந்தளவுக்கு அற்புதமாக ஓவியர் வரைந்திருந்தார்.
”ஓவியத்தில் என்ன இருக்கிறது செழியா?”
“எல்லோரும் ஏதோ வாங்குவதற்காக அல்லது வேறு வேலைக்காக அவசரமாப் போற மாதிரி இருக்கு”
“ஆமாம்… ரொம்ப சரியாச் சொன்னே. இந்தத் தெருவுல சில பேரு உள்ளே நுழையக் கூடாதுன்னு சொல்றது சரியா?”
“அதெப்படி சரியா இருக்கும்மா… அவங்களுக்கும் ஏதாச்சும் வேலை இருக்கும் இல்லையா?”
“வேலை இருக்கு – இல்லை! ஆனா, ஒருத்தர ஓர் இடத்துல நுழையக் கூடாதுன்னு சொல்றது அவரோட உரிமைக்குத் தடை போடுற மாதிரி தானே செழியா?”
“ஆமாம்மா… நிச்சயமா”
”அப்படித்தான் வைக்கத்துல சொன்னாங்க”
“வைக்கம் எங்கே இருக்கு? அதைச் சொல்லுங்க முதல்ல”
“கேரளாவின் கோட்டயம் மாவட்டத்துல இருக்குற ஒரு ஊர்தான் வைக்கம். அங்க, மகாதேவன் கோவிலைச் சுற்றியுள்ள தெருக்கள்ல சில குறிப்பிட்ட ஜாதிகளைச் சேர்ந்தவங்க நடக்கக் கூடாதுன்னு தடை இருந்துச்சு… அதை மீறி நடந்ததுதான் வைக்கம் போராட்டம். அதுல கலந்துகொள்ளச் சொல்லித்தான் பெரியாருக்குத் தந்தி அனுப்பியிருந்தாரு நீலகண்டன் நம்பூதிரி”
“ஓ! இப்பதான் கொஞ்சம் கொஞ்சமாகப் புரியுது… அம்மா, எல்லாத்தையும் அழகா கதை மாதிரி சொல்வீங்க… அதேபோல, இதையும்… சொல்லுங்களேன்” என்று கதை கேட்க வசதியாக உட்கார்ந்தான் செழியன்.
ஓவிய நோட்டு ஒன்றை எடுத்து முதல் பக்கத்தில் ஏதோ வரைந்தார் அம்மா. அதைக் காட்டியபடியே வைக்கம் கதையைச் சொல்லத் தொடங்கினார்.
(தொடரும்)