கணக்கும் இனிக்கும் : சிவகாசி வந்துட்டீங்களா?
உமாநாத் செல்வன்
மதுரையில் இருந்து சிவகாசிக்குப் பயணம் செய்கின்றோம் என வைத்துக்கொள்வோம். சிவகாசியில் இருக்கும் நண்பருக்கு எவ்ளோ நேரத்தில் வருவோம் என்று சொல்ல வேண்டும். அதற்கு என்ன தேவை? தூரம்? அது போதுமா? மதுரையிலிருந்து சிவகாசிக்குத் தூரம் 80 கிலோ மீட்டர். இதை வைத்து சிவகாசியை அடையும் நேரத்தைச் சொல்ல முடியுமா?
ஆம், சொல்லிடலாம். ஆனால் இந்தப் பாதை என்ன பாதை? சாலையா? ரயில் பாதையா? விமானப் பாதையா? ஒரு புள்ளியிலிருந்து மறு புள்ளிக்கு மிகவும் குறைந்த தூரம் என்பது ஒரு நேர்கோடுதான். இதனை நாம் ஆரம்பக் கணித வகுப்புகளில் படித்திருப்போம் அல்லவா? மதுரைக்கும் சிவகாசிக்குமான குறைந்த தொலைவு சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதில் பயணம் செய்ய வேண்டுமெனில் விமானத்திலோ ஹெலிகாப்டரிலோதான் செல்ல வேண்டும். அதுவும்கூட சாத்தியம் குறைவு; காற்றின் திசைக்கு ஏற்ப கொஞ்சம் மாறுபடும். நீல நிறத்தில் இருப்பது ரயில் பாதை. ஏன் ரயில் பாதையை நேராகப் போடமுடியவில்லை என்ற கேள்வி எழலாம். ஆனால் போக்குவரத்து என்பது ஒரு முனையிலிருந்து மறு முனைக்குச் செல்வது மட்டுமல்ல, வழியில் இருக்கும் பல கிராமங்கள், சின்ன நகரங்கள் என வாழுமிடங்களை எல்லாம் ஓரளவிற்காவது இணைப்பது. விருதுநகரை இணைக்காமல் செல்வதும் சரியல்ல.
மேலும் ரயில் பாதைகளை நேராக நோட்டில் கோடு வரைவது போலவும் போட்டுவிட முடியாது. வழியில் மலை இருக்கலாம், குடைந்து செல்வது கடினம், அல்லது அது வேறு சுற்றுப்புறச் சிக்கல்களை ஏற்படுத்தலாம், ஏரி இருக்கலாம், வசிப்பிடங்கள் இருக்கலாம், ஆனால் ஆறு இருந்தால் அதனைக் கடந்து ஆகவேண்டும், ஒரு பாலம் நிச்சயம் தேவை.
ரயில் எனில் தோராயமாக 70 நிமிடங்களில் சென்றடையலாம்.
“ஹலோ, சிவகாசி வந்துவிட்டீர்களா? இன்னும் எவ்ளோ நேரமாகும்?”
அடடா, நாம இன்னும் பயணம் செய்யவே ஆரம்பிக்கவில்லை. இன்னொன்று நாம போகப் போவது ரயில் பாதையில் அல்ல, சாலையில் தான். ஆஹா, இது வேறயா? சாலை வழி எனில் 80 கிலோமீட்டர் தூரம். சராசரியாக மணிக்கு 40 kmph வேகத்தில் சென்றால் இரண்டு மணி நேரத்தில் சிவகாசியை அடைந்துவிடலாம்.
இப்போதுதான் திறன்பேசிகள் இருக்கின்றன. நாம எங்கே இருக்கோம், இன்னும் எவ்வளவு தூரம் என்பதை எல்லாமே துல்லியமாகச் சொல்லிவிடும். இவை இல்லையெனில் எங்கே இருக்கின்றோம் என்பதை எப்படிக் கணக்கிட்டு இருப்பார்கள்? ஒவ்வொரு 200 மீட்டர் இடைவெளியிலும் ஒரு குட்டி மைல் கல் வைத்திருப்பார்கள். அதில் 2,4,6,8 என எழுதப்பட்டிருக்கும். சிவகாசி – 45 கிமீ எனப் போட்டிப்பார்கள். அடுத்த 200 மீட்டரில் 2 எனக் குட்டி மைல் கல் இருக்கும், அடுத்த 200வது மீட்டரில் 4 என்ற குட்டி மைல் கல் இருக்கும். இப்படியாக 6, 8, அடுத்து சிவகாசி – 44 கிமீ எனத் தொடரும். அடுத்தமுறை மாநில நெடுஞ்சாலையில் பயணம் செய்யும்போது இதனைக் கவனியுங்கள்.
ஒவ்வொரு ஊருக்கும் 0 கி.மீ. எங்கே இருக்கும்? ஆமால்ல! எங்கிருந்து ஆரம்பிக்கும்? ரயில் நிலையத்திலிருந்தா? பேருந்து நிலையத்தி-லிருந்தா?? இல்லை! ஒவ்வொரு ஊரின் அஞ்சல் நிலையத்தில் இருந்தே இந்தக் கணக்கு ஆரம்பிக்கும். இப்போது இந்த நடைமுறை மெல்ல மெல்ல மாறிவருகின்றது. அஞ்சல் நிலையங்கள் விரிவாக்கங்களால் இடம் மாறுதல் பெறுகின்றன.
“ஹலோ, சிவகாசி வந்துட்டீங்களா? இன்னும் எவ்ளோ நேரமாகும்?”
இப்பத்தான் சிவகாசி 40 கி.மீ. மைல் கல்லைப் பார்த்தோம். நாம பேருந்திலோ, லாரியிலோ, வேனிலோ, காரிலோ, ஸ்கூட்டரிலோ போகவில்லை, சைக்கிளில் போய்க்கொண்டு இருக்கோம். ஆஹா! அப்படின்னா மணிக்கு 15 கி.மீ. வேகமே அதிகம்.
இப்படி உள்ளூருக்கு எல்லாம் தூரத்தை எளிதாகச் சொல்லிவிடுகின்றோம். இதுவே சென்னையில் இருந்து கோலாலம்பூருக்கான தூரத்தினை எப்படிக் குறிப்பிடுவோம்? இதே கிலோ மீட்டர் தானா? சென்னைக்கும் மலேசிய நாட்டுத் தலைநகர் கோலாலம்பூருக்கும் கடல்வழி அல்லது வான்வழிப் பயணமே எளிது. கடல்வழி அல்லது வான்வழித் தூரத்தினை எந்த அலகால் குறிப்பிடுகின்றோம் என்பதை அடுத்த இதழில் விரிவாகப் பார்ப்போமா?
“ஹலோ, இதோ சிவகாசி உங்களை அன்புடன் வரவேற்கின்றது என்ற பலகையைப் பார்த்துட்டோம்”