மொட்டைமாடி கூட்டாஞ்சோறு கலாட்டா
விழியன்
“நாமும் கூட்டாஞ்சோறு கொண்டாடுவோம். அவங்க அவங்க வீட்ல இருந்து சாப்பாடு எடுத்துவந்து பகிர்ந்து சாப்பிடறதுதான் கூட்டாஞ்சோறு”
“சாம்பூ வீட்டு மொட்டை மாடியில் சாப்பிடலாம்“
“எங்க வீட்டில் இருந்து வாழைப்பழம் எடுத்துவரேன்”
“நான் சிப்ஸ்”
“நாங்க ரெண்டு பேரும் பாஸ்மதி அரிசி”
“எங்க வீட்டில் இருந்து முந்திரிப்பருப்பு கொண்டு வரேன்”
“திறந்தே வெச்சிருப்பாங்களா?”
இவை அனைத்தும் எலிகளின் உரையாடல்கள். ரிபாப்பரி துவங்கி வைத்த திட்டமே கூட்டாஞ்சோறு. ரிபாப்பரி ஒரு துடிப்பான எலிக்குட்டி. அவங்க வீடு எனச் சொன்னது அவர்கள் வசிக்கும் வீட்டினையே! அங்கே மனிதர்கள் குடும்பமாக வசிக்கின்றார்கள். எலியார் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டில் ஒரு பாதுகாப்பான இடத்தினைத் தேர்வு செய்து வசிக்கின்றார்கள். பகலில் தூக்கம் இரவில் ஆட்டம். இதுவே இவர்களின் கொள்கை. ஒவ்வொரு அமாவாசைக்கும் குறிப்பிட்ட இடத்தில் சந்திப்பார்கள். மாநாடு அல்லது கூட்டம் என வைத்துக்கொள்ளலாம். இந்தத் திட்டமும் ரிபாப்பரி முன் வைத்ததுதான். ரிபாப்பரி வசிப்பது ஒரு ஃப்ரிட்ஜுக்கு அடியில்! பக்கத்திலேயே உணவு மேஜை. அங்கே அந்த வீட்டு மனிதர்கள் கீகீபேசுவதைக் கேட்டுக் கேட்டு அதற்குப் புதுப்புது எண்ணங்கள் உதிக்கும்.
முழுநிலவ இரவில் 1:00 மணிக்குச் சந்திப்பது என ஏற்பாடு. ரிபாப்பரி இருபது முந்திரிப்பருப்புகளை எடுத்து வரும் எனத் திட்டம். ரிபாப்பரியின் வீட்டில் எல்லோரும் பத்து மணிக்கே உறங்கிவிட்டனர். தன் மறைவிடத்திலிருந்து வெளியே வந்தது. நேரத்தைப் பார்த்தது, அந்த வீட்டு அறையில் இருக்கும் கடிகாரம் அரை மணி நேரம் முன்னதாகக் காட்டும். அப்பத்தான் பள்ளிக்குச் சீக்கிரம் கிளம்புவார்களாம். அரை மணி நேரம் கூட்டிவச்சு இருக்குன்னு எல்லோருக்கும் தெரியும். ‘இந்த மனிதர்களையே புரிந்துகொள்ள முடியலை’ன்னு ரிபாப்பரி அடிக்கடி யோசிக்கும். இரவு ரோந்து முடிக்க 11 மணியானது. புதிதாக எந்த உணவும் இல்லை. சமையலறையில் பாத்திரங்களைக் கழுவி வைத்திருந்தார்கள். அப்போதுதான் அந்த வாசனை வந்தது. கருவாட்டு வாசனை. ரிபாப்பரிக்கு கருவாடு என்றால் உசிரு. எப்படி நம்முடைய ரோந்துப்பணியில் இதனைத் தவறவிட்டோம் என யோசித்தது.
பார்த்தால்… அந்தக் கருவாடு எலிப்பொறிக்குள் இருந்தது. எலிப்பொறிக்குள் போய் உணவினை எடுத்துவருவது ரிபாப்பரிக்குக் கை வந்த கலை. எலிப்பொறி என்பது எலியைச் சிக்கவைக்கும் ஓர் எளிய கருவி. உள்ளே உணவுப் பொருளினை வைத்துச் சாப்பிட ஆசை காட்டி, அதனை சாப்பிட வரும்போது தடுப்பு போட்டு சிக்க வைக்கும் ஏற்பாடு. இதுதான் காலம்காலமாக எலியைப் பிடிக்க உதவும் உத்தி. ஆனால் தற்போது எலிகளுக்கு அதில் தேர்ந்த பயிற்சி வந்தாச்சு. ரிபாப்பரி இதற்காகப் பயிற்சி எடுத்துவிட்டது. சர்ர்ன்னு உள்ளே போய் சாப்பிடும் பொருளைக் கடித்து சர்ர்ன்னு இழுத்துக்கொண்டு வரவேண்டும். சுற்றும் முற்றும் பார்த்தது ரிபாப்பரி. யாரும் இல்லை. மனசுக்குள்ளே 10இல் இருந்து ஒன்று வரை எண்ணியது. 1 எனச் சொன்னதும் உள்ளே புகுந்து கருவாட்டை எடுத்து வரவேண்டும். இரவு கூட்டாஞ்சோற்றில் அனைவருக்கும் இது கூடுதல் உணவாக அமையும். பொறிக்குள் போய் கருவாட்டை எடுத்துக்கொண்டு திரும்பியது. அப்போதுதான் அது புதிய எலிப்பொறி என்பதைக் கவனித்தது. வெளியேறும் முன்னர் வாலின் நுனி பொறியில் சிக்கிக்கொண்டது. அவ்ளோதான் கதை முடிந்தது.
வாலை வெளியே எடுக்க எவ்வளவோ முயன்றது. வரவில்லை. ஒரு மணி நேரம் போராடியது. கூட்டாஞ்சோறு சந்திப்பு நேரம் நெருங்கியது. தாண்டியும் விட்டது. ரிபாப்பரியின் நண்பரான எலிகா அங்கே வந்தது. 12:00 மணிக்குத் தனது வீட்டிற்கு வரேன்னு சொன்னதால் எலிகா ரிபாப்பரியைத் தேடி வந்தது.
“ரிபாப்… ரிபாப்” என்று மெல்லக் கூப்பிட்டது.
எலிப்பொறிக்குள் இருந்த ரிபாப்பிற்கு மகிழ்ச்சி. “நண்பா, நான் இந்த எலிப்பொறிக்குள் சிக்கி இருக்கேன்” எனக் கத்தியது.
நிலைமையைப் பார்த்தது எலிகா. கண்ணீர் விட்டது.
“எலிகா, அழாதே! இந்த வீட்டு ஆளுங்க ரொம்ப நல்லவங்க. நான் சிக்கினாலும் கொல்லமாட்டாங்க. மாடியில இருந்து தூக்கிப் போட்டுடுவாங்க. நான் பொறுமையா இரண்டு நாள் கழித்து இங்க வந்திடுவேன்.”
“அப்பாடி”
“ஆனா, நம்ம கூட்டாஞ்சோறு சந்திப்பைத் தவறவிட்டுடுவேன்னு கவலையா இருக்கு”
எலிகா அந்தப் பொறியில் இருந்து ரிபாப்பை விடுவிக்க முயற்சி செய்தது. எலிகா பெரிய எலியாக இருந்தது. தன் முழுப் பலத்தையும் கொண்டு எலிப்பொறிக்கு மேலே இருந்த கொக்கியைத் தூக்கவே ரிபாப்பின் வால் விடுவிக்கப்பட்டது..
இருவரும் மகிழ்ச்சியாக மொட்டைமாடிக்கு விரைந்தனர். மறைவில் இருந்துகொண்டு என்ன நடக்கின்றது என ரிபாப்பும் எலிகாவும் கவனித்தார்கள். இருவரையும் காணவில்லை என நண்பர்கள் வருந்தி, சாப்பிடாமல் இருப்பார்கள் என நினைத்தனர். ஆனால் அப்படி யாரும் அங்கே கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. எலிகாவிற்குப் பயங்கர கோபம் வந்தது. “அட, நம்ம நண்பர்கள் தானே” என்றது ரிபாப். “இல்லை, என் கோபம் அடங்கவில்லை” என்றது எலிகா. “சரி, பொறு; உன் கோபத்தை பொடிப்பொடியாக மாற்றுகின்றேன்” என்றது ரிபாப்.
அவர்கள் அருகே சென்று மறைந்திருந்து “மியாவ்” என்று குரலை மாற்றிக் கத்திய அடுத்த மில்லிநொடியில் எல்லோரும் சிட்டாகப் பறந்துவிட்டனர். ஒரு கிலோமீட்டர் தாண்டிப் போய் நின்றனர். ரிபாப் கத்திக்கொண்டே “அடேய் நான் தான், சும்மா விளையாடினேன்” என்று ஓடிக்கொண்டே சொல்லியும் யாரும் நிற்கவே இல்லை. அங்கே இருந்த மொத்த உணவினையும் ரிபாப்பரியும் எலிகாவும் விடியும் வரையில் பொறுமையாக உண்டனர்.
விடியற்காலையில் உடற்பயிற்சி செய்ய, பாட்டி பம்பாரம்மா வந்ததும் இருவரும் சத்தமில்லாமல் உறங்கச் சென்றனர்.