சந்திராயன் 3 : அது எதுக்குத் தங்கக் காகிதம் ?
அபி
எந்தப் பக்கம் பார்த்தாலும், இந்தியாவின் சந்திரயான் 3 மற்றும் ரஷ்யாவின் லூனா 25 பற்றிய செய்திகளே கண்ணுல படுது. அந்தச் செய்திகள் கூடவே, அதனுடைய ஒளிப்படங்களும் கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கு. இந்த விண்கலன்களின் மேல, தங்க நிறக் காகிதம் போல ஒன்று இருந்தது, அதை நீங்களும் கவனீச்சீங்களா?
அந்தப் பொன் நிறத்தில் இருக்கும் மென்தகட்டின் (Foil) பெயர் பல்-அடுக்கு வெப்பக் காப்பு (Multi layer insulation). பொதுவா, விண்வெளியில் சூரியனின் கதிர்வீச்சு காரணமா, வெப்பநிலை அதிகமா இருக்கும். அதே சமயத்துல, குளிர்நிலை சுமார் – 270.45 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். இவ்வளவு கடுமையான வெப்பநிலையில விண்கலத்தில் இருக்கும் பொருள்கள் பழுதடஞ்சு செயலிழக்கும் வாய்ப்புகள் அதிகம். அப்படி ஆகாம இருக்க, இந்த வெப்பநிலை விண்கலத்தில் இருக்கும் பொருள்களைத் தாக்காமப் பார்த்துக்கணும். அதற்குப் பயன்படுவது தான் இந்த பல்-அடுக்கு வெப்பக் காப்பு. இது Aluminized mylar/KaptonAluminized mylar/Kapton மற்றும் Polyester/ Polyimide ஆல் செய்யப்பட்டது. இந்த பல் – அடுக்கு வெப்பக் காப்பு, சூரியனில் இருந்து வரும் கதிர்வீச்சை எதிரியக்கும் (Reflect the radiation).
அது சரி, ஏன் பல அடுக்குகளைப் பயன்படுத்துறாங்க? அதற்குக் காரணம், ஒரு படலத்தைத் தாண்டி அடுத்த படலத்துக்குக் கதிர்வீச்சு போனாலும், அதை அந்தப் படலம் எதிரியக்கும். இப்படி ஒன்னு மாத்தி இன்னொன்னு எதிரியக்கிக்கிட்டே இருக்கும். அதனால், பல அடுக்குகள் இருக்கும் போது, சூரியக் கதிர்வீச்சு, விண்கலத்தின் உள்ளே போகாது. இந்தியாவில பகல்னா, அமெரிக்காவில் இரவு அல்லவா? இப்போ, இது ஏன் இங்க வந்துச்சு? இருங்கப்பா சொல்றேன். பூமியில இந்தியா இருக்கும் பக்கம் சூரியனை நோக்கி இருந்தா, இந்தியாவில பகலா இருக்கும். ஆனா, அமெரிக்கா பக்கம் சூரியஒளி படாததால அங்கே இரவு நேரம் வருது. அதுபோல, ஏதோ ஒரு கோளின் சூரியஒளி படாத பகுதியில விண்கலம் இருந்தா, குளிர்நிலை அதிகமா இருக்கும். அப்போ, குளிர் அதிகமாகியும் விண்கலத்தின் பொருள்கள் சேதமடையவும் வாய்ப்பு இருக்கு. நாம, ரொம்ப நேரம் கைப்பேசியைப் பயன்படுத்துனா, கைப்பேசி சூடாகுதுல்ல, அதுபோலதான் விண்கலத்தில றுறுஇருக்கும் பொருள்களும். அப்படி விண்கலத்தின் பொருள்கள் வெளியிடும் வெப்பம் வெளிய போகாம, அந்தக் கதிர்வீச்சையும் எதிரியக்கி, விண்கலத்தைக் குளிரிலிருந்து காப்பாத்தவும் நம்ம பல் – அடுக்கு வெப்பக் காப்பு பயன்படுது. அது சரி, பல் – அடுக்கு வெப்பக் காப்பு ஏன் தங்க நிறத்தில் அல்லது வெள்ளி நிறத்தில் இருக்கு? யோசிங்க, விடை தெரிஞ்சா, சொல்லுங்க ப்ளீச்… இதோட, சந்திரயான் 3 மற்றும் லூனா 25இன் ஆராய்ச்சியாளர்களுக்கு வாழ்த்துகள்! அது தான் விழுந்திருச்சே! லூனா-வுக்கு எதுக்கு வாழ்த்துகள்னு கேக்கிறீங்களா? அது நிறைய பாடங்களைக் கத்துக் கொடுத்திருக்கு! அதுக்குத்தான்.