புதுசு… : ஊருக்குப் போய் வந்த கரடி
பிஞ்சுகளே! வணக்கம் உங்கள் நெஞ்சங்களில் புதிய கருத்தைப் பதிய வைக்க எளிய முயற்சி இந்தத் தொடர்கதை.
இதுவரை சிறுகதைகள் வழியே உங்களோடு தொடர்ந்து பல ஆண்டுகளாய் தொடர்பில் இருந்த நான் புதிய தொடர்கதை வாயிலாகத் தொடர்ந்து பயணம் செய்ய முயற்சித்து இருக்கிறேன்.
மனிதர்கள் என பெருமைப்பட்டுக் கொள்ளும் நாம், விலங்குகள் பற்றிப் பல செய்திகளைப் பேசுகிறோம், எழுதுகிறோம். அறிவியல் பூர்வமாக ஆய்வுகளை மேற்கொள்கிறோம். அந்த விலங்குகளால்
சூழலுக்கு என்ன
பயன் என்றும் தேடுகிறோம்.
ஆனால் வன விலங்குகள் பேசினால் நம்மைப் பற்றி என்ன பேசும், என்ன சிந்திக்கும் என்ற கற்பனையின் வெளிப்பாடே இந்தத் தொடர்.
தொடரைத் தொடர்ந்து வாசியுங்கள். உங்கள் மேலான கருத்துகளை
எழுதி அனுப்புங்கள்.
நாளைய தலைமுறைகளின் நன்மைக்காகப் “பெரியார் பிஞ்சு” எடுக்கும் நன்முயற்சிக்குத் துணையாயிருங்கள், பயன் பெறுங்கள்.. வாழ்த்துகள்!
எழுத்து – ஓவியம் – மு.கலைவாணன்
சூரிய ஒளி கூட நுழைய முடியாத அளவிற்கு அடர்ந்த மரங்கள் நிறைந்த பெரிய காடு.
அதன் உள்ளே பெருத்த ஓசையோடு வனத்துறையின் லாரி ஒன்று வந்து நின்றது.
“போதும் போதும் அப்படியே வண்டியை நிப்பாட்டுங்க. யப்பா லாரியோட பின்பக்கத்தை முதல்லே திறங்க. நீங்க நாலு பேரும் கூண்டு மேலே ஏறிக்கங்க! கூண்டுக் கதவை மெதுவா மேலே தூக்குங்க! அது தானா கீழே குதிச்சு காட்டுக்குள்ள ஓடிடும்.’’ என்று காக்கி உடை அணிந்த வனத்துறை அதிகாரி ஒருவர் தன்னுடன் வந்த பணியாளர்களிடம் உரக்கச் சொன்னார்.
அமைதியாக இருந்த அந்தக் காட்டுப் பகுதியில் அவர் சொன்ன சொற்கள் எதிரொலித்தன.
அதிகாரி சொன்னது போலவே லாரியின் பின் கதவை இருவர் திறந்து கீழே விட்டனர். பெரிய இரும்புக்கூண்டின் மேல் ஏறி மேல் நோக்கி தூக்கக்கூடிய இரும்புக் கதவை மூன்று பேர் மேலே இழுக்க, ஒருவர் மட்டும் தன் கையில் இருந்த பெரிய கம்பால் இரும்புக் கூண்டைத் தட்டினார்.
கூண்டுக்குள் அடைபட்டுக் கிடந்த கருப்புக் கரடி உடம்பைச் சிலிர்த்தபடி கூண்டை விட்டு வெளியே வந்தது. இழுத்து மூச்சு விட்டபடி சுற்றும் முற்றும் பார்த்தது.
தான் பிறந்து, வளர்ந்து வாழ்ந்த காட்டுக்கே திரும்ப வந்திருக்கிறோம் என்பதே அப்போதுதான் புரிந்தது.
பிறகு என்ன? பள்ளிக்கூடம் முடிந்த உடன் அடிக்கும் மணியோசைக்குப் பிள்ளைகள் மகிழ்ச்சியாய் ஓடி வெளியேறுவதைப்போல லாரியின்மீது இருந்து துள்ளிக் குதித்து, புல்லும் புதரும் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் நாலு கால் பாய்ச்சலில் ஓடத் தொடங்கியது அந்த ஒற்றைக் கரடி.
கரடி காட்டுக்குள் ஓடுவதைத் தன் அலைபேசியில் படம் பிடித்தார் அதிகாரி. அதைப் பார்த்துக்கொண்டிருந்தனர் பணியாளர்கள்.
சற்று நேரத்தில் கூண்டுக் கதவையும் லாரியின் கதவையும் மூடிக்கொண்டு தங்கள் வேலையை முடித்துவிட்ட மகிழ்ச்சியில் லாரியில் வந்த அனைவரும் புறப்பட்டனர்.
காட்டுக்குள் கொஞ்ச தூரம் ஓடிய கரடி ஒரு பாறையின் மேல் ஏறிப் பார்த்தது. தன்னைக் கொண்டு வந்து காட்டுக்குள் விட்ட லாரி தூரத்தில் சென்றுவிட்டதால் மிகவும் சின்னதாகத் தெரிந்தது.
அதுபோல தனக்கு இதுவரை ஏற்பட்ட சிக்கல் சிரமம் எல்லாமே சின்னதாகிவிட்டதாக உணர்ந்தது கரடி.
தான் ஓடி விளையாடிய அதே மலைச்சரிவு, உயர்ந்த மரங்கள், அடர்ந்த புல்வெளிகள் இதையெல்லாம் பார்த்ததும்… தொடர்ந்து விளையாடிப் பழக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தில் மீண்டும் விளையாட வந்த ஒரு விளையாட்டு வீரனைப் போல் அச்சம் விட்டு மெல்ல நடக்கத் தொடங்கியது.
“செல்லக்குட்டி! செல்லக்குட்டி!’’
எங்கிருந்தோ சன்னக் குரலில் தன்னை யாரோ கூப்பிடுவதுபோல் தோன்றியது கரடிக் குட்டிக்கு.
நின்று திரும்பிப் பார்ப்பதற்குள் குரலும் கூப்பிட்ட அந்த உருவமும் தன் அருகே வந்ததை உணர்ந்தது.
அது வேறு யாரும் அல்ல; தன்னைப் பல நாளாய் விட்டுப் பிரிந்து வாடி நிற்கும் தாய்க் கரடி தான் அது.
அருகில் வந்த அன்னையை ஆரத் தழுவியபடி “அம்மா! அம்மா’’ என்றது குட்டி.
தன் பாச உணர்வுகளை, அன்பை எச்சில் வடியும் தன் நாக்கால் நக்கி குட்டிக்கரடியின் முகத்தில் வெளிப்படுத்தியது தாய்க் கரடி.
நீண்ட இடைவெளிக்குப்பின் பார்த்த மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்ட சில நொடிகளில் இருவரும் ஒருவரை ஒருவர் ஏக்கத்தோடு தழுவிக்கொண்டனர்.
அம்மா தன் குட்டியின் முகத்தோடு முகத்தை உரசியபடி, “அம்மாவை அலைய விட்டுட்டு இத்தனை நாளா எங்கடா போனே என் செல்லக் குட்டி?’’ என்றது.
“அதுவா… ஒரு பெரிய கதைம்மா’’ என்று நீட்டி இழுத்து குழையக் குழையப் பேசியது குட்டிக் கரடி.
“பல நாளா உன்னைக் காணாததாலே அம்மா எப்படி ஏங்கிப் போயிட்டேன் தெரியுமா? காட்டுக்குள்ள திருட்டுத்தனமா வர்ற வேட்டைக்காரங்ககிட்ட மாட்டிக்கிட்டியோன்னு நினைச்சேன். நம்ம மாதிரி கரடிகளைப் புடிச்சு நம்முடைய அழகான அடர்ந்த முடி இருக்குற தோல், மருந்து தயாரிக்க
பயன்படும் கணையம், இதையெல்லாம் எடுக்கிறாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்.
அப்படி யாருகிட்டேயோ மாட்டிக்கிட்டு இருப்பே… உன்னைக் கொன்னு போட்டு இருப்பாங்கன்னு நினைச்சு நினைச்சு அழுதுகிட்டே இருந்தேன். ஒவ்வொரு நாளும் உன்னைக் காணாமல் காடு முழுக்கத் தேடிக்கிட்டே இருந்தேன். இப்போ உன்னைப் பாத்தப் பிறகு தான் எனக்கு மூச்சு வந்தது.
ஆமா! இப்படி எப்படி திடீர்னு வந்து நிக்கிறே.’’ என கண்களை அகலத் திறந்து ஆச்சரியத்தோடு கேட்டது தாய்க் கரடி.
“எப்படி வந்தது நம்ம செல்லக்குட்டின்னு… எனக்கு நல்லாத் தெரியும்’’ என்றபடி தாவிக் குதித்து, கிளையை விட்டுக் கீழே இறங்கி, தாய்க் கரடி முன் வந்து நின்றது ஒரு குரங்கு.
“உனக்கு மட்டும் எப்படித் தெரியும்?’’
தாய்க் கரடி ஆவலாய்க் கேட்டது.
“அதோ அந்த நாவல் மரத்து உச்சியில இருக்கிற பழங்களைப் பறிக்க மரத்து மேலே ஏறுனபோது நான் பார்த்தேன். பெரிய வாகனத்திலே நாலு மனிதர்கள் பாதுகாப்பா கூட்டிக்கிட்டு வந்து விட்டுட்டுப் போனாங்க.’’ என்றது குரங்கு.
“என்னது? மனிதர்கள் பாதுகாப்பா கொண்டு வந்து விட்டுட்டுப் போனாங்களா… என்ன சொல்றே?’’ என்று புரியாமல் கேட்டது தாய்க் கரடி.
“ஆமா! குரங்கு அண்ணன் சொல்றது உண்மைதான். மனிதர்கள் தான் என்னை பத்திரமாய் கொண்டு வந்து காட்டுக்குள்ள விட்டுட்டுப் போனாங்க.’’ என்றது குட்டிக் கரடி
“அதாவது இப்ப நீ ஊருக்குப் போயிட்டு வந்தேன்னு சொல்லு’’ எனக் கேலியாகக் கேட்டது குரங்கு.
“ஆமா! ஆமா! நான் ஊருக்குத் தான் போயிட்டு வந்தேன்’’ என்று உரக்கச் சொன்னது கரடிக் குட்டி.
அதன் சத்தம் குழி பறித்துக் கொண்டிருந்த முயலுக்கும், மரத்தில் பழம் பறித்துத் தின்று கொண்டிருந்த பறக்கும் அணிலுக்கும், ஓணானைப் பிடிக்க ஒளிந்து ஒளிந்து வந்த காட்டுப் பூனைக்கும், நுனிப் புல்லைத் தன் அழகு வாயால் அசைபோட்டுக் கொண்டிருந்த மானுக்கும், தூங்கிக்கொண்டிருந்த நரிக்கும் கேட்டுவிட்டது.
முயல், அணில், பூனை, மான், நரி என காட்டிலிருந்த குட்டிக் குட்டி மிருகங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் தாய்க் கரடியும், கரடிக் குட்டியும், குரங்கும் நின்று கொண்டிருந்த இடத்திற்கு ஓடோடி வந்துவிட்டன.
“காட்டிலிருந்து ஊருக்குப் பத்து நாளைக்கு மேல பெரிய சுற்றுப்பயணம் போயிட்டு வந்த செல்லக்குட்டி… உனக்கு என் வாழ்த்துகள்’’ என்றது முயல்.
“ஊருக்குப் பயணம் போய் வந்த உல்லாசக் கரடி குட்டிக்கு உளமார்ந்த வாழ்த்துகள்’’ என்று தன் கீச்சுக் குரலால் வாழ்த்தியது பறக்கும் அணில்.
“அது சரி, ஊரு நாடுன்னு சொல்ற மனிதர்கள் வாழற இடம் எப்படி இருக்குது? உனக்கு எப்படி உணவு கிடைச்சது? அதை எல்லாம் கொஞ்சம் விவரமாச் சொல்லேன்’’ என்றது குரங்கு.
“நான் ஊருக்குப் போய் வந்த கதையை அனல் பறக்கிற இந்தப் பகல் பொழுதிலே சொல்ல முடியாது. பல நாள் அலைச்சல். அதனாலே, உடம்பு ரொம்ப சோர்வா இருக்கு. இன்னைக்கு ராத்திரி நிலா வெளிச்சத்துல அதோ அந்த நாவல் மரத்து அடியில எல்லாரும் வாங்க… நான் ஊருக்குப் போய் வந்ததைப் பத்திச் சொல்றேன். உங்க கிட்ட சொல்ல நிறைய செய்தி கொண்டு வந்திருக்கேன்; ஆனா, எனக்கு இப்போ தூக்கம் தூக்கமா வருது: ராத்திரி பார்ப்போம்.’’
“ஆமாமா… என் செல்லக்குட்டி நல்லா சாப்பிடணும், கொஞ்ச நேரம் தூங்கணும், நீங்க போய் உங்க வேலையைப் பாருங்க’’ என்றபடி தன் குட்டிக் கரடியை முதுகில் சுமந்தபடி நடந்தது தாய்க் கரடி.
(பயணம் தொடரும்)