வா! வா! கலைஞர் நூற்றாண்டு நூலகம் போய் வரலாம்! வா!
கலைஞர் நூற்றாண்டு நூலகம் வாராது வந்த மாமணியாய் மதுரைக்குக் கிடைத்திருக்கிறது. திரும்புகிற பக்கமெல்லாம் மாணவ, மாணவிகள், வாசகர்கள் எனக் கலைஞர் நூற்றாண்டு நூலகம் நிரம்பி வழிகிறது. 2 ஆண்டுகளுக்குள் திட்டமிட்டுக் கட்டப்பட்ட குளிரூட்டப்பட்ட, நவீன வசதிகள் கொண்ட நூலகம் இது! கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் முதல் மாடியில் இருக்கும் குழந்தைகள் பிரிவு கண்ணைக் கவர்கிறது. புதுமையான தோற்றத்துடன் புத்தம்புதிய நவீன வசதிகளுடன், குழந்தைகளை ஈர்ப்பதற்காக இந்தக் குழந்தைகள் பிரிவு அமைக்கப்பட்டிருக்கிறது.
நல்ல நூல்களை அடையாளம் காட்டும் பெற்றோர்கள், சமூகப் பொறுப்புள்ள குடிமக்களாக தங்கள் குழந்தைகள் வளர்வதற்கு உதவி செய்கின்றார்கள். குழந்தைகள் விரும்பும் புத்தகங்களை அல்லது தாங்கள் விரும்பும் புத்தகங்களைக் குழந்தைகளுக்கு வாங்கித் தரமுடியாத நிலையில் இருக்கும் பெற்றோர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக மதுரையில் இந்த நூலகம் வந்திருக்கிறது.
அரசுப் பள்ளிகளில், மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் தங்கள் குழந்தைகளை கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு ஆர்வமாக அழைத்துவரும் பல பெற்றோர்களை நாம் பார்க்கமுடிகின்றது. அதுவும் சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் நிறையப் பேர் தங்கள் குழந்தைகளோடு கலைஞர் நூலகத்திற்கு வருகின்றார்கள்.
குழந்தைகளுக்கு நல்ல நண்பர்களாக நூல்களும், பெற்றோர் வேலைக்குச் சென்று விடும் இக்காலத்தில் குழந்தைகளின் தனிமைக்கு ஆக்கமான துணையாக நூலகங்களும் இருக்கின்றன. நல்ல புத்தகங்கள் குழந்தைகளுக்கு நல்ல பண்புகளைக் கற்றுத் தருகின்றன. குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோர்க்குத் துணைபுரிகின்றன. எனக்குத் தெரிந்த அய்.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற பெண்மணி ஒருவர், தன்னுடைய பெற்றோர்கள் இருவரும் மருத்துவர்கள் என்றும் தன்னுடைய பள்ளி விடுமுறை நாட்களில் அவர்கள் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் மதுரையில் இருக்கும் மய்ய நூலகத்தில் தன்னை விட்டு விட்டுச்செல்வார்கள் என்றும், அது தன்னுடைய பொது அறிவு வளர்ச்சிக்கும் போட்டித்தேர்வில் வெற்றி பெறுவதற்கும் மிகப்பெரிய பங்களிப்பு அளித்தது என்றும் சொன்னதைக் கேட்டிருக்கிறேன். இன்றைக்கு கலைஞர் நூற்றாண்டு நூலகம் அப்படி ஒரு வாய்ப்பினைப் பல குழந்தைகளுக்கும் அளிக்கும் சிறப்பைப் பெற்றிருக்கிறது.
குழந்தைகளுக்கு அறிவியல் மனப்பான்மை ஏற்படுவதற்கு அறிவியல் பற்றிய புரிதல் மிக அவசியம். இந்தப் பிரபஞ்சம் பற்றியும், கோள்கள் பற்றியும் அறிந்து கொள்ளுதல் குழந்தைகளுக்கு பெரும் விழிப்புணர்வைத் தரும். அப்படி ஒரு விழிப்புணர்வைத் தரக்கூடிய பகுதியாக கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் முதல் மாடியில் கலைஞர் அரங்கத்திற்கு அருகில் அறிவியல் அரங்கம் என்ற பகுதி இருக்கிறது. அங்கு பயிற்சி விமானம் இருக்கிறது. உள்ளே ஏறி உட்கார்ந்து விமானத்தில் பறக்கும் உணர்வைப் பெறலாம். நாம் பூமியில் இருக்கிறோம். பூமியில் ஒருவரது எடை 70 கிலோ, அவர் செவ்வாய்க் கோளுக்குச் சென்றால் அல்லது மற்ற கோள்களுக்குச் சென்றால் என்ன எடை இருப்பார் என்பதையெல்லாம் அறிவிக்கும் கருவி இருக்கிறது. உலக உருண்டை மிகப்பெரிய அளவில் இருக்கிறது. குழந்தைகள் அதை உருட்டி உருட்டி ஒவ்வொரு கண்டமாகக் கண்டு உணரலாம். மனித உடலின் உறுப்புகள் ஒவ்வொரு பகுதியாக நாம் கண்டு அறிந்துகொள்ளும் விதமாக நவீனத்துடன் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த அறிவியல் அரங்கம் பல புதிய சிந்தனைகள் குழந்தைகளிடம் விதைக்கப்பட விதையாக இருக்கிறது.
குழந்தைகள் பிரிவில் தமிழிலும், ஆங்கிலத்திலும் குழந்தைகளுக்கான கதைப் புத்தகங்களும், அறிவியல் புத்தகங்களும் நிறைய உள்ளன. தங்களுக்குப் பிடித்த புத்தகங்களைக் குழந்தைகள் தாங்களே தேர்ந்தெடுத்துப் படிக்கும்போது இலக்கியங்கள் மீதான அறிமுகம், புரிதல் போன்றவை கிடைக்கின்றன.
வாசிப்பு அனுபவத்தில் கிடைக்கும் மகிழ்ச்சியை இளைய வயதிலேயே குழந்தைகள் பெறும் அருமையான வாய்ப்பினை கலைஞர் நூற்றாண்டு நூலகம் கொடுக்கின்றது. குழந்தைகளுக்கு வாசிப்புப் பயிற்சியும் மொழிப்பழக்கமும் கிடைத்து சிறந்த மொழி ஆளுமை உள்ளவர்களாகக் குழந்தைகளை வார்த்தெடுக்க இந்த நூலகம் வழி அமைத்துக் கொடுக்கிறது.
பெரும் ஆளுமைகள் பலர் நூலகத்தில் தங்களைச் செதுக்கிக் கொண்டவர்கள். பெரும் ஆளுமைகள் பலரின் வாழ்க்கை வரலாறு தமிழிலும், ஆங்கிலத்திலும் இந்த நூலகத்தின் வழியாக மாணவ, மாணவிகளுக்குக் கிடைக்கிறது. குழந்தைகளின் படைப்பாற்றலை வளர்ப்பதற்கும். கற்பனைத் திறத்தைச் சரியான திசையில் மடைமாற்றவும் நூல்கள் துணைபுரிகின்றன. நூலகத்தின் அமைதியான சூழல், புத்தகங்களைப் பொறுப்பாகக் கையாள்வது, உறுப்பினராகச் சேர்ந்து சரியான தேதியில் புத்தகங்களை ஒப்படைப்பது போன்றவை குழந்தைகளிடம் சில ஒழுங்குகளை விருப்பத்துடன் உருவாக்கும்.
குழந்தைகள் நிகழ்ச்சிகளுக்கான அரங்கம், சிறார்களுக்கான திரையரங்கம் போன்ற அரங்குகள் மிகச்சிறப்பாக கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் இருக்கின்றன. குழந்தைகளுக்கான கதை சொல்லல் நிகழ்ச்சியைக் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நிகழ்த்துவதற்கான திட்டம் இருக்கிறது என அறிகின்றோம். வரவேற்கத்தக்க முன்னெடுப்பு! கதைகளை வாசிப்பது, வாசித்த கதையை மற்றவர்களுக்குப் புரியும்படி எடுத்துச்சொல்வது ஒரு கலை. அதற்கான ஓர் அரங்கம் என்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது.
குழந்தைகளுக்கான பல திட்டங்கள், விடுமுறை காலச் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு. திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக நூலக நிருவாகிகள் தெரிவிக்கின்றனர்.
குழந்தைகளுக்கான பிரிவைப் பயன்படுத்திக் கொள்ள மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அடிக்கடி கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு அழைத்து வரவேண்டும். மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருக்கும் அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளின் பாடத்திட்டத்திலேயே கலைஞர் நூற்றாண்டு நூலகம் குழந்தைகள் பிரிவுக்குச் செல்லுதல், அங்கு நேரம் செலவழித்துப் படித்தல் என்பது சேர்க்கப்படவேண்டும்.
இந்த நூலகத்தினைப் பார்வையிட்ட ‘பெரியார் பிஞ்சு’ ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் குழந்தைகள் பிரிவில் வெகு நேரம் செலவிட்டார். தமிழ் உயிர் எழுத்துகள், ஆங்கில எழுத்துகள் எல்லாம் பெரிய பெரிய வடிவங்களில் இருப்பதைப் பார்த்துப் பாராட்டினார். ஓர் ஓவியம் ஆயிரம் சொற்களுக்குச் சமம் என்பதைப் போல, குழந்தைகளுக்குப் பார்த்தவுடன் அவர்கள் மனதில் பதியும் வண்ணம் குழந்தைகள் பிரிவு வடிவமைப்பு இருக்கிறது என்று பாராட்டினார். அறிவியல் அரங்கம், குழந்தைகள் நிகழ்ச்சிகளுக்கான அரங்கம், சிறார் அரங்கம் போன்றவற்றைப் பார்வையிட்டார். மற்ற நாடுகளில் இருக்கும் குழந்தைகளுக்கான நூலகங்களோடு ஒப்பிட்டுக் கலைஞர் நூற்றாண்டு நூலகம் வடிவமைக்கப்பட்டிருக்கும் நேர்த்தியைப் பாராட்டினார். வெகுசிறப்பாக கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை, அதில் இருக்கும் குழந்தைகள் பிரிவை உருவாக்கியிருக்கும் திராவிட மாடல் அரசின் நாயகர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வோமாக!<