மனிதர்களை ஆளப்போகும் மனிதன்
அனைத்துத் துறைகளிலும் ஆட்சி செய்யும் கணினி 2029ஆம் ஆண்டில் மனிதர்களுக்கு முன்னின்று மனிதர்களை வழிநடத்திச் செல்லும் என்று கூறியுள்ளார் அமெரிக்க நாட்டின் பியூச்சராலஜி (எதிர்காலவியல்) ஆராய்ச்சியாளர் கர்ஸ்வெல்.
கணினி, எந்திர மனிதன் வருகையால் ஏற்படும் மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு நடத்தியதில் கிடைத்த முடிவினை கர்ஸ்வெல் வெளியிட்டுள்ளார்.
ஒவ்வொரு நாளும் புதுப்புது பரிணாமங் களைச் சந்திக்கும் புதிய தொழில்நுட்பங் களினால் கணினித்துறை எதிர்பாராத வளர்ச் சியை அடையும் சூழ்நிலை உருவாகும். தற்போது மனிதர்களால் கணினி உருவாக்கப்படுகிறது. இனி, புதிய கணினியை உருவாக்குவதில் கணினியே ஈடுபடும் வாய்ப்பு உருவாகலாம்.
அதன்பின்பு மனிதர்களின் உதவியின்றி, கணினிகள் தங்களைத் தாங்களே இயக்கிக் கொள்வதோடு, பிற ஆராய்ச்சிகளிலும் ஈடுபடலாம்.
அனைத்து ஆய்வுகளிலும் கணினியே ஈடுபட்டால் அதன் முடிவுகள் மிகவும் துல்லியமாக இருக்கும். சரியான மருத்துவச் சிகிச்சைகள் மூலம் அனைத்து நோய்களையும் எளிதில் குணப்படுத்தலாம். இதன்மூலம் மனிதனின் வாழ்நாளையும் அதிகரிக்கச் செய்யும் வாய்ப்பு உள்ளது.
உலகமே கணினியின் கட்டுப்பாட்டில் வருவதுடன், மனிதனின் செயல்பாடு, சிந்தனைகளிலும் கணினி குறுக்கிட்டு அறிவுரை வழங்கும். இந்த அதிரடி மாற்றங்களின் தொடர்பான கணினி அறிவை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் நடப்பவை அனைத்துமே நமக்குக் குழப்பமாக இருக்கும் என்று ஆய்வு முடிவுகள் கூறப்பட்டுள்ளன.