பயனுறு நிகழ்வு : கல்வி உளவியல் பற்றி அமெரிக்கப் பேராசிரியருடன் கலந்துரையாடல்
மிச்சிகன் பல்கலைக்கழகம் உளவியல்துறை பேராசிரியர் ராம் மகாலிங்கம் அவர்களுடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆசிரியர்கள் சிலர் கலந்துரையாடல் செய்யும் நிகழ்வு ஒன்றை 18.11.2023 அன்று பெரியார் பிஞ்சு இதழும் மற்றும் பல்லாங்குழி அமைப்பு இணைந்து ஒருகிணைப்புச் செய்திருந்தன.
பேராசிரியர் ராம் மகாலிங்கம் தமிழ்நாடு தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் ஆகஸ்ட் மாதம் 1959ஆம் ஆண்டு பிறந்தவர். கட்டிடப் பொறியியல் துறையில் பட்டம் பெற்று குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரியாக ஆனார்.
பணியில் இருக்கும்போதே திரைக்கதை ஆசிரியர், கவிஞர், குழந்தைகளுக்கான நாடக நடிகர் மற்றும் இயக்குநர், எழுத்தாளர் எனப் பன்முகங்களில் இயங்கிக் கொண்டிருந்தார்.
தனது மேற்படிப்பு மற்றும் பணிகளுக்காக அமெரிக்கா சென்றவர் அங்கேயும் துவக்கப் பள்ளி ஆசிரியர், இரவு நேரப் பாதுகாவலர், பாத்திரம் துலக்குபவர், சமையல் செய்பவர், புத்தகக் கணக்காளர், கணித ஆசிரியர், என்றெல்லாம் பல்வேறு பணிகள் செய்துகொண்டே தான் விரும்பிய உளவியல்துறையில் பட்டம் பெற்றார்.
உளவியல் ஆய்வாளராகவும் மாறினார். இவர் தற்போது மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் ஆளுமை மற்றும் சமூகச் சூழல்கள் திட்டத்தில் உளவியல் பேராசிரியராக இருக்கிறார்.
உலகில் உள்ள பல நாடுகளின் ஆசிரியர்கள், பேராசிரியர்களுடன் என பலதரப்பட்டவர்களுடன் கலந்துரையாடல் செய்தும், ஆலோசனைகளும் செய்து வருகிறார்.
அவருடன் 18.11.2023 சனிக்கிழமை அன்று சென்னை பெரியார் திடலில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார்.
பன்னாட்டு கல்விமுறை என்னும் தலைப்பில் பேராசிரியர் ராம் மகாலிங்கம் அவர்கள் உரையாற்றினார். இதில், உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் கல்வி முறை, வகுப்பறைகள், ஆசிரியர்களின் வாழ்வியல் முறை, மாணவர்களின் கல்வித் தரம் மற்றும் சமூக ஒப்பீடுகள், கல்வி குறித்த அரசின் பார்வைகள் மற்றும் செயல்பாடுகள், செயல் திட்டங்கள், பாடத் திட்டங்கள், பயிற்றுவிக்கும் முறைகள், மதிப்பெண் சான்றுகள், குழந்தைகள் உரிமைகள் சார்ந்த கல்விகள், தற்காலக் கல்வி முறையில் கருணையின் அவசியத்தை, குறிப்பாக நம் குறைபாடுகளை தற்கருணையுடணும் மற்றவர் குறைபாடுகளை கருணையுடனும் அணுக வேண்டியதன் அவசியம் என பல்வேறு செயல்பாடுகளை மய்யப்படுத்தி உரையாற்றியபின் வந்திருந்த ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் நடைபெற்றது.
அக்கலந்துரையாடலில் தமிழ்நாடு மற்றும் இந்திய ஒன்றிய அளவிலான கல்விமுறைகள், ஆசிரியர்களின் பணிகள், கல்வி இயங்கும் முறைகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டு சிக்கல்களுக்குத் தீர்வுகளும் விவாதிக்கபட்டன.
பின்னர் கல்வி உளவியல் என்னும் தலைப்பில் பேராசிரியர் உரையாற்றினார்.
அடுத்ததாக வழக்குரைஞர் சுந்தர்ராசன் அவர்கள் ஆசிரியர்களுடன் இந்திய ஒன்றியத்தின் சட்ட வரையறைகளை எவ்வாறு தெரிந்துகொள்வது, எவ்வாறு அவற்றை வாசிப்பது, அடிப்படையான சட்ட அறிவுகள் ஒவ்வொரு குடிமகன்களுக்கும் ஏன் அவசியம், அவற்றை குழந்தைகளுக்கு எவ்வாறெல்லாம் ஆசிரியர்கள் எடுத்துச் செல்லலாம் என்னும் பரந்துபட்ட பார்வையில் சிற்றுரை ஒன்று நிகழ்த்தினார். அது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் வியப்பையும், புரிதல்களையும் ஏற்படுத்தியது.