நினைவில் நிறுத்துவோம்! மூடநம்பிக்கைகளை முளையிலேயே கிள்ளி எறிவீர்!
குழந்தைகளாய் இருக்கும்போது உங்கள் முன்னோர்கள் பல மூடநம்பிக்கைகளைப் புகுத்துகின்றனர். பொதுவாகக் குழந்தைகள் கேள்வி எழுப்பக்கூடியவர்கள். ஏன்? எப்படி? என்று இயல்பாகவே கேள்வி எழுப்புவர். ஆனால், அப்படி வினா எழுப்பித் தெரிந்துகொள்ள விரும்பும் குழந்தைகளைப் பயமுறுத்தி தாங்கள் சொல்வதை நம்ப வேண்டும் என்று பெற்றோரும் மற்றவர்களும் வற்புறுத்துகின்றனர்.
பெரியவர்கள் தங்களுக்குள்ள மூடநம்பிக்கை களை அப்படியே பிள்ளைகள்மீது திணிக்கின்றனர். அதுவும் தொலைக்காட்சிகள் வந்தபிறகு இந்தத் திணிப்பு கதைகள் மூலமாகவும், விளம்பரம் மூலமாகவும் அதிகம் நடக்கிறது.
தீபம் ஏற்றினால் என்னென்ன நன்மை என்று பாட்டி பேரக் குழந்தைகளுக்குக் கூறுவதும், ‘இந்தத் தகடு வாங்கினால் இன்னின்ன பலன் கிடைக்கும்; இந்தக் கயிற்றைக் கட்டினால் உங்களுக்கு எல்லாம் நன்மையாக நடக்கும்; இந்தக் கடிகாரத்தை (வாட்ச்) கையில் கட்டிக்கொண்டால் உங்கள் வாழ்க்கையில் எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்’ என்றும் தொலைக்காட்சிகளில் மூடநம்பிக்கைகள் நுழைக்கப்படுவதும் நாள்தோறும் தொடர்கின்றன.
இவ்வாறே உண்மைக்கு மாறான கடவுள், விதி, பிறவி, மந்திரம், தீமிதி, அலகுக் குத்துதல், ஆணிச்செருப்பில் ஏறி நடத்தல், பிரார்த்தனை, அபிஷேகம், ஜோதிடம், இராசி என்று பல மூடநம்பிக்கைகள் உங்கள்மீது தினம் தினம் திணிக்கப்படுகின்றன.
இப்படிப்பட்டச் சூழலில் குழந்தைகள் விழிப்போடு இருந்து, வினா எழுப்பி உண்மை கண்டால் மூடநம்பிக்கைகள்தானே விலகும்.
இதற்கு நீங்கள் முதலில் சில உறுதிகளை உள்ளத்தில் கொள்ளவேண்டும்.
1. எது உண்மையோ, அறிவுக்கு ஏற்றதோ அதை ஏற்க வேண்டும்.
2. அச்சத்தின் காரணமாகவோ, பெரியவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காகவோ கண்ணை மூடிக்கொண்டு ஒன்றைச் செய்யக்கூடாது.
3. எதையும் கண்ணை மூடிக்கொண்டு ஏற்பதோ, பின்பற்றுவதோ கூடாது.
இத்தோடு திருவள்ளுவர் கூறிய
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பது அறிவு.’’
என்ற குறளையும் ஆழமாக உள்ளத்தில் கொள்ள வேண்டும்.
எடுத்துக்காட்டாக “கடவுளை வேண்டிக் கொண்டு தீமிதித்தால் நெருப்புச் சுடாது’’ என்று ஒருவர் சொன்னால்,
‘அது உண்மையா?’ என்று சிந்திக்க வேண்டும். மாறாக அதை அப்படியே நம்பக்கூடாது. தீமிக்கும் போது தவறி நெருப்பில் விழுந்து, உடல் வெந்து போன நிகழ்வுகள் நடக்கின்றன. கடவுளை வேண்டிக்கொண்டு நெருப்பில் இறங்கினால் சுடாது என்றால், இவர்களை எப்படிச் சுட்டது? இவர்கள் கடவுளை வேண்டிக்கொண்டுதானே நெருப்பில் இறங்கினார்கள்? என்று கேள்வி கேட்டால் உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும். அது என்ன தெளிவு?
கடவுளை வேண்டிக்கொண்டு நெருப்பில் இறங்கினால் சுடாது என்று கூறப்படுவது தப்பு. கடவுள் சக்தியால் நெருப்பு சுடாது என்பதும் தப்பு என்ற தெளிவு ஏற்படும்.
அடுத்து இன்னொரு கேள்வியை நீங்கள் கேட்க வேண்டும்.
அப்படியென்றால் பரப்பப்பட்ட நெருப்பில் நடந்துசெல்லும்போது சுடாமல் இருப்பது எப்படி?
இந்தக் கேள்விக்குப் பதில் தேடினால், காரணம் அறிந்தால், உண்மை விளங்கும்.
தீமிதிக்கும்போது நெருப்புச் சுடாமல் இருப்பதற்கு மூன்று காரணங்கள் உள்ளன.
1. நெருப்பு சமமாகப் பரப்பப்பட்டிருக்கும்.
2. நெருப்பின்மீது படிந்துள்ள சாம்பல் அறவே முறத்தால் விசிறி நீக்கப்பட்டிருக்கும்.
3. ஒரே இடத்தில் நிற்காமல் விரைந்து நடப்பர்.
கடவுளை வேண்டிக்கொண்டு மேடு பள்ளமுள்ள நெருப்பில், சாம்பல் படிந்த நெருப்பில், ஒரே இடத்தில் நின்று தீ மிதிக்க முடியாது. கடவுளை வேண்டிக்கொண்டே அந்நெருப்பில் ஓரிரு நிமிடங்கள் நிலையாக நின்றால் நெருப்புச் சுட்டு கால் வெந்துவிடும்.
ஆக, மேற்கண்ட காரணங்களால்தான் நெருப்பு சுடவில்லையே தவிர, கடவுள் சக்தியால் அல்ல என்ற உண்மை உங்களுக்கு விளங்கும்.
இப்படி ஒவ்வொரு மூடநம்பிக்கை பற்றியும் கேள்வி எழுப்பி, உண்மை அறிந்தால் மூடநம்பிக்கை உங்களை விட்டு அகலும்.
இளம் வயதில் எது பதிகிறதோ அது ஆழமாக நிற்கும். எனவே, இளம் வயதில் எது அறிவுக்கு உகந்ததோ அதை ஆழமாகப் பதிய வைத்துக்கொள்ள வேண்டும். எது அறிவுக்கு எதிரானதோ அதை அறவே விலக்க வேண்டும்.
அடுத்து, கூறுவது யாராய் இருந்தாலும் அவர் எவ்வளவு உயர்ந்த மனிதராய் இருந்தாலும் அவர் கூறுவதை அப்படியே ஏற்காமல், வினா எழுப்ப வேண்டும். அவரிடமே துணிந்து கேட்க வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் உங்கள் ஆய்வுத்திறன் வளரும், அறிவு கூர்மையாகும், உங்களுக்கு உண்மை கிடைக்கும்.
இவ்வளவு பெரிய மனிதர் கூறுகிறார். எனவே, அது சரியாகத்தானிருக்கும் என்று எண்ணுவது, நம்புவது கூடாது. அதனால் தான் வள்ளுவர் ‘யார் யார்வாய்க் கேட்பினும் மெய்ப்பொருள் காணவேண்டும்’ என்றார்.
ஒரு காலத்தில் நிலவு சிவன் தலையில் உள்ளது என்று நம்பினர். ஆய்வு செய்து உண்மை கண்டதன் விளைவாய் நிலவு ஒரு துணைக் கோள். அது சிவன் தலையிலும் இல்லை, சிவனும் இல்லையென்று உறுதியானது. நிலவுக்கே சந்திராயன் அனுப்பி, ‘தண்ணீர் உள்ளதா?’ என்று ஆய்வு செய்வதை அண்மையில் கண்டோம்.
எனவே, ஒரு நம்பிக்கை உங்களிடம் ஊட்டப்படும் போதே, அது சரியா என்று வினா எழுப்பி உண்மை கண்டு, உண்மை என்றால் மட்டுமே ஏற்கவேண்டும். இல்லையென்றால் தள்ளிவிட வேண்டும். இப்படிச் செய்தால் மூடநம்பிக்கையை முளையிலேயே கிள்ளி எறிய முடியும்; எறிய வேண்டும்.