இப்ப நான் என்ன சொல்றது? என்னைத் துரத்திய கொள்ளிவாய்ப் பிசாசு
பெரியார் பிஞ்சு வாசகர்களே! பல ஆண்டுகளுக்கு முன்னால் என்னை ஒரு கொள்ளிவாய்ப் பிசாசு துரத்தியது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அன்றைக்கு நகரங்களே கிராமங்களைப் போல்தான் இருக்கும். அதையொட்டிய ஊர்கள், அதைவிட மிகவும் பின்தங்கித்தான் இருந்தன.
அதிலொரு கீகீஊரில்தான், கொள்ளி வாய்ப் பிசாசு என்னைத் துரத்தியது!
எப்படி?
ஒரு முறை ஊரையும், நகரையும் இணைக்கும் நீரோடையை, நீர் ஓடாத நேரத்தில் கடக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. மாலை நேரம் கடந்தாலே இந்த நீரோடையைக் கடப்பதில் எங்களுக்கெல்லாம் ஒரே அல்லுதான்!
இதிலென்ன பயம் என்கிறீர்களா?
அந்த ஓடையின் பெயர், “கழுத்தறுத்தான் பள்ளம்”. இப்போது கொஞ்சம் ஜெர்க் ஆகியிருப்பீர்கள். பள்ளம் இல்லை. மைல் கணக்கில் நீளும் ஓடைதான். காரணப் பெயர் அப்படி! ஆமாமாம்… ‘யாரோ ஒருவர், யாரோ ஒருவரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டார். அவரும் ஒரு பேயாக உலாவுகிறார்’ என்பதும் ஒரு கதை! அதுமட்டுமல்ல, இரண்டு பக்கம் இருந்தும் ஊருக்குள் நுழைய முடியும். ஒரு வழி அனுஷம் திரையரங்கம். அந்தப் பக்கம்தான் பெரி…ய்ய… புளியமரம்; மேலே குறிப்பிட்ட பேய்க் கதை!
மற்றொன்று, தாராபுரம் சாலையில் உள்ள தாஜ் திரையரங்கம் வழி. இங்கோ கொள்ளிவாய்ப் பிசாசு பயம்! அதனால் மாலை 6 மணிக்கு மேல் சிறுவர்கள், பெரியவர்கள் துணை இல்லாமல் இந்த இரண்டு வழிகளிலும் வரக்கூடாது என்பது எழுதப்படாத விதி!
மாலை 6 மணிக்கு முன்பே சென்றும் நான் மாட்டிக்கொண்டேன், எப்படி?
வாருங்கள், அந்தக் காலத்திற்கே செல்வோம்!
அன்றொரு நாள்… நானும் என் சகோதரியும் தாராபுரம் சாலையில் எங்கள் அப்பாவைச் சந்தித்துவிட்டு, அவர் கொடுத்த பணத்தில் சமையல் பொருட்களை வாங்கிக்கொண்டு கழுத்தறுத்தான் பள்ளம் நோக்கி வந்துகொண்டிருந்தோம். எனக்கு வயது 10; தங்கைக்கு வயது 8; மாலை 5:30 மணி; காற்று சுழன்றடித்துக்கொண்டிருந்தது; வெளிச்சம் இலேசாக மங்கிக் கொண்டிருந்தது.
“வெளிச்சம் குறைஞ்சு போச்சுண்ணா, அந்தப் பக்கமா சுத்தியே போயிடலாமே” என்றாள் தங்கை இலேசான உதறலுடன்.
எனக்கும் கொள்ளிவாய்ப் பிசாசை நினைத்தாலே கால்சட்டை நனைந்துவிடும் நிலைதான். ஏனோ, என்னையும் அறியாமல், ’சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை’ என்று அம்மா அடிக்கடி சொன்னது நினைவுக்கு வந்து தொலைத்துவிட்டது. நான் மூத்தவன் வேறு! தங்கை முன் தன் பயத்தைக் காட்டிக்கொள்ளக் கூடாது என்ற எண்ணத்தில் பதில் கூறத் தொடங்கினேன்.
“இப்பத்தானே நேரம் கேட்டோம்! 5:30 தானே ஆச்சு? சுத்திப்போனா முக்கால் மணி நேரமாகும். அதுமட்டுமில்லே, மாவு மில் பாதையில் கூடத்தான் தெருவிளக்கே இல்லை. நாம் போறதுக்குள்ள நிச்சயமா இருட்டிடும். அதுக்கு இதுவே பரவாயில்லை. 10 நிமிடத்தில் வீட்டுக்கே போயிடலாம்”
பதில் அவளுக்குத் திருப்தியைக் கொடுத்து விட்டது. ஆனாலும் தயங்கினாள்.
”எனக்கு ஏதாவது ஆச்சு… அப்புறம் இருக்கு உனக்கு” என்று ஆள்காட்டி விரலால் மிரட்டுவது போல ஆட்டியபடியே, கோபமும் அழுகையும் கலந்த முகபாவத்துடன் சொல்லிவிட்டு, என்னையே முறைத்தாள். இதைக் கண்டு எனக்குச் சிரிப்புதான் வந்தது. எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போல், தங்கைக்குக் கோபம் பொத்துக் கொண்டது. பேச்சு மூச்சு இல்லாமல் கழுத்தறுத்தான் பள்ளம் நோக்கி, விறுவிறுவென்று எட்டி நடை போட்டாள். நான் ஓடவேண்டியிருந்தது.
கழுத்தறுத்தான் பள்ளத்தில் இறங்கும் இடத்தில் ஒரு வரிசையில் சில வீடுகள் இருக்கும். அந்த வீடுகள் தாராபுரம் சாலையில் இருக்கும் பாலம் வரையில் நீண்டிருக்கும். எதிர்க்கரையில் ஒரு அலுவலகம் இருக்கும். அங்கு பகலில் ஓயாமல் தட்டச்சு செய்யும் ஓசை கேட்டுக்கொண்டே இருக்கும். அந்த ஜன்னலிலிருந்து இலேசாக வெளிச்சம் வரும். அதுவும் 5:30 மணி வரையிலும்தான்.
இதோ, வந்துவிட்டது_ கழுத்தறுத்தான் பள்ளத்தின் ஒருவர் மட்டுமே இறங்கும் அந்த ஒற்றையடிப் பாதை! ஆழம் 12 அடியாவது இருக்கும்; அதுவும் சரேலென்று சரிவுடன் இறங்கும். மழைக்காலங்களில் இந்தப் பக்கம் வரவாய்ப்பே இருக்காது. சுற்றிச் சென்று தாராபுரம் சாலையில் உள்ள பாலத்தைத் தொட்டபடி கும்மாளமிட்டுக்கொண்டு செம்மண் நிறத்தில் பாய்ந்து செல்லும் தண்ணீரை நேரம், காலம் தெரியாமல் பார்ப்போம். சில நேரம் பாலத்தின் மீதுகூட தண்ணீர் தெறிக்கும் வேகத்தில் ஓடும். பேருந்துகளே கூட தண்ணீர் வடியும் வரையிலும் வரிசை கட்டி நிற்கும். மற்ற நாட்களில் சேறெல்லாம் காய்ந்த பின்பு சரிவில் இறங்கும் போது, கால்விரல்களை நன்றாக ஊன்றி நடக்கவேண்டும். இல்லையெனில் சரிவு தானாகவே நம்மை திடுதிடுவென்று கீழே கொண்டு போய்விடும். சிலசமயம் குப்புறக்கூடத் தள்ளிவிடும். முட்டிக்கால்கள் தேய்ந்து போவது எங்களைப் போலுள்ளவர்களுக்கு அன்றைக்கு வழக்கம்தான்! இதற்காக அம்மாக்களிடம் அனுதாபம் கிடைக்காது! புளியமிளாறு சாத்துப்படிதான் கிடைக்கும்! இரட்டைத் துன்பம்!
தங்கைக்கு அப்படி ஏதாவது நடந்துவிடப் போகிறதே என்ற எச்சரிக்கையில் ஓடினேன். ஒரு வழியாக சரிவில் இறங்குவதற்கு முன் அவளது இடது கையைப் பிடித்துவிட்டேன்.
இதோ! சரிவு தொடங்கிவிட்டது!
நிதானமாக இறங்கியுமாகிவிட்டது. மலைப் பாம்பு போல் நீளும் அந்த ஓடையின் கரைகளில் இருக்கும் அடர்ந்த மரங்களும், மனம் போல் பின்னிப்பிணைந்து அடர்ந்திருக்கும் செடி, கொடிகளும், அடித்த காற்றில் மரங்கள் ஆடிய ஆட்டமும், அவற்றால் எழுந்த ஓசையும் சேர்ந்து ஒரு மிரட்சியைத் தந்துவிட்டது எனக்கு! தங்கைக்கும் அந்த மிரட்சி வந்துவிடாமல் இருக்க பேச்சுக் கொடுத்தபடியே 10 நிமிடத்திற்குள் இதைத் தாண்டிவிட வேண்டும் என்று எண்ணினேன்.
பாதுகாப்பாக இறங்கியதும் அதே கோபத்துடன் என் கையை வெடுக்கென்று உதறிவிட்டுக்கொண்டு வேகமாக முன்னால் சென்றாள். அவளைச் சமாதானப்படுத்த ஏதோ பேச முனைந்தேன். அதற்குள்… பின்புறமிருந்து தூ…ரத்தில்… படபடவென்று ஏதோவொரு ஓசை… அதுவும் நெருங்கி எங்கள் பக்கம்தான் வந்துகொண்டிருந்தது. திரும்பிப் பார்க்க எள்ளளவும் துணிச்சல் இல்லை எனக்கு!
அவ்வளவுதான்.
“செத்தேன், அம்மா…”
என்று அலறியபடியே தங்கை தலைதெறிக்க ஓடினாள். காரணமே தெரியாமல் நானும் தலைதெறிக்க தங்கையைப் பின் தொடர்ந்து ஓடினேன். கால்களை விட இதயம் வேகமாக ஓடியது. அதுவும் எங்களைவிட வேகமாகத் துரத்திக் கொண்டு வந்தது. இருவருக்குமே எங்களைத் துரத்துவது கொள்ளிவாய்ப் பிசாசுதான் என்பது உறுதியாகிவிட்டது. வீடு போய்ச் சேர்வோமா என்று எண்ணுவதற்குள், அது… என்னை நெருங்கிவிட்டது.
இதோ தொட்டுவிடப்போகிறது… பிடரியைப் பிடித்து நம்மைத் தூக்கப்போகிறது என்ற எண்ணங்களால், நாய் துரத்தும் போது ஓடும் வேகத்தைவிட, பேய் துரத்தும் போது ஓடும் வேகம் அதிகம் என்பது போல், பிடரியில் கால்பட ஓடினேன். ஆனாலும், தங்கையை என்னால் தொடமுடியவில்லை. அதற்குள் அது என்னைத் தொட்டுவிட்டது.
”அய்யோ” என்று கத்திவிட்டேன்.
ஆனால்… இதென்ன?… அது… என்னையும் கடந்து ஓடுகிறதே? சட்டென்று என் கால்கள் தாமாக நின்றுவிட்டன. அட… ச்சே… ஓடுவது ஒரு காக்கி நிறக் காகிதம்! புத்தகங்களுக்கு அட்டை போடுவோமே அந்தக் காகிதம்! காற்றின் வேகம் அந்தக் காகிதத்தைத் தரையில் அடித்தும், சில அடி உயரத்தில் பறக்க வைத்தும் இழுத்துச் சென்று கொண்டிருந்தது. தரையில் பட்டு உருண்டு எழும் போது ஏற்பட்ட சரசர ஓசைதான் அது!
இப்போது துணிச்சலுடன் திரும்பிப் பார்த்தேன். வழமையான நீரோடைதான்!
அப்போதுதான் நாங்கள் ஏமாந்தது புரிந்தது. ’இப்படித்தான் யாரோ ஒருவர் ஏமாந்து, அது என்னவென்று தெரியாமலேயே கொள்ளிவாய்ப் பிசாசு என்று கதை கட்டிவிட்டிருப்பார்களோ’ என்று எண்ணியபடியே, தங்கையை இனி சுலபமாகச் சமாதானப்படுத்திவிடலாம் என்று திரும்பிப் பார்த்தேன். அவள் கழுத்தறுத்தான் பள்ளத்திலிருந்து எப்போதோ மேலேறிச் சென்றுவிட்டிருந்தாள். அவளைப் பொறுத்தவரை, அது… கொள்ளிவாய்ப் பிசாசு என்ற எண்ணத்துடனேயே ஓடிவிட்டாள் என்று புரிந்தது. இனி நான் என்ன சொன்னாலும் அவள் ஏற்கமாட்டாள்.
அதைவிட முக்கியம், அம்மாவிடம் இந்தப் பிரச்சனையில் என்ன சொல்லிச் கோள் மூட்டப்போகிறாள் என்பது தெரியாது; எனக்கும் என்ன தண்டனை காத்திருக்கிறது என்பது தெரியாது; இப்போது வீட்டுக்குச் செல்வதா? கூடாதா? என்பதே எனக்குத் தடுமாற்றமாகிப் போனது.
மொத்தம் மூன்று சோகங்கள் எனக்கு ஏற்பட்டுவிட்டது. ஒன்று, அப்பா கொடுத்த பணத்தில் வாங்கிவந்த அன்றைய சமையல் பொருட்கள் சிதறிய இடத்தைக்கூட என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை!
இரண்டாவது, நான் கொள்ளி வாய்ப் பிசாசு என்பது புரளி என்று கண்டுபிடித்திருந்தேன். அதை வெளியில் சொல்லக்கூட முடியவில்லை! ஏனென்றால், ’இப்படித்தான் கொள்ளிவாய்ப் பிசாசு தங்களைத் துரத்தியது என்று பலரும் சொல்லக் கேள்வி.’
மூன்றாவது, என் தங்கைக்குக் கடுமையான காய்ச்சல்! யாரோ ஒருவர், எங்கள் உறவினர்தான்_ – பெயர் மறந்துவிட்டது. வந்து தங்கைக்காக மந்திரித்தார்கள். மந்திரிப்பதால் காய்ச்சல் போகுமா? பயத்தால் வந்த காய்ச்சல்! ரெண்டு நாளில் தானாகப் போய்விட்டது. வெகு காலம் கழித்து என் தங்கைக்கும் பிசாசு கதையைச் சொல்லி தெளிய வைத்தேன். 10 வயதிலேயே கொள்ளிவாய்ப் பிசாசு இல்லை என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன். நீங்கள்?….