”எனக்கு மீன்களைப் பிடிக்கணும்”
”எனக்கு மீன்களைப் பிடிக்கணும்” இதனை ஒன்றின் சொல்லிக்கொண்டே இருந்தான். அவன் நண்பர்கள் இரண்டின் மற்றும் மூன்றின் இதனைக் கேட்டுக் கேட்டுச் சலித்துவிட்டனர்.
“கப்பல்ல போய் மீன் பிடிக்கலாமா?” என்பான்.
“இல்லை” என்பார்கள்.
“படகுல போய் மீன் பிடிக்கலாமா?” என்பான்.
“இல்லை” என்பார்கள்.
“கட்டுமரத்தில் போய் மீன் பிடிக்கலாமா?” என்பான்.
“இல்லை” என்பார்கள்.
தூண்டிலும் மீன்களுக்கு இரையும் இருந்தால் போதும் என முடிவிற்கு வந்தனர். அது நீண்ட ஆராய்ச்சிக்குப் பின்னர் தெரியவந்தது. தூண்டிலுக்கு எங்கே செல்வது? யாரிடமாவது கேட்டால் ”போய் படி! இதெல்லாம் வேண்டாம்” என்கிறார்கள். மூவரும் சேர்ந்து அவர்களே ஒரு தூண்டில் தயார் செய்துவிட்டனர். கொஞ்சம் மண்புழுக்களையும் சேகரித்தனர். முதலில் கடல் மணலில் புழுக்களைத் தேடி ஏமாந்தனர். கருவாடுகூட வைக்கலாம் என்றான் மூன்றின்.
எல்லாம் தயார். இரவு ஒன்பது மணிக்கு மூவரும் இரண்டின் வீட்டு வாசலில் சந்தித்தனர். கடற்கரைக்கு மெல்ல நடந்தனர். அன்று பவுர்ணமி. முழு நிலவு நன்றாகத் தெரிந்தது. ஆங்காங்கே மேகங்கள். அவை வெண்மேகமா கருமேகமா தெரியவில்லை. மேகங்கள் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தன.
“அடேய், இவ்வளவு அலை வருதே இங்கே மீன் வருமா?” என்றான் மூன்றின்.
“எனக்கு மீன்களைக் பிடிக்கணும்” – ஒன்றின்.
“அதுக்குத்தான் வந்திருக்கோம். ஆனால் மீன்கள் கரைக்கு வருமா?” என்றான் இரண்டின்
பேசிக்கொண்டே அமர்ந்து இருந்தனர். அப்போது ஓர் அதிசயக் காட்சியைப் பார்த்தனர். தூரத்தில் பெரிய பெரிய மீன்கள் கடல் மட்டத்தைவிட்டு மேலே துள்ளிக் குதித்தன. குதிப்பதோடு நிற்கவில்லை. அது மேகத்தின் மீது குதித்து மேலே மேலே தாவின. சில பெரிய மீன்கள் நிலா வரைக்குமே தாவின.
“என்னடா இது?” என மூவரும் வியந்து பார்த்தனர்.
இதே போல மீன்கள் துள்ளுவதைப் பார்த்துக்கொண்டே இருந்தனர். இப்படி அவர்கள் எப்போதும் பார்த்ததே இல்லை. நிலாவின் உயரத்திற்கு மேலேயும் மீன்கள் தாவின. திடீரென ஒரே இருட்டு.
“நிலா எங்கே போச்சு?” – என்றான் இரண்டின்.
“மேகத்துக்குப் பின்னாடி மறைந்திருக்கும்” என் நான்- மூன்றின்.
அப்போதுதான் ஒன்றினைக் கவனித்தனர். கரையில் அலை அடிக்கவே இல்லை. ஏரியில் இருப்பதைப்போல நீர் ஆடாமல் அசையாமல் இருந்தது.
மேலும், “இப்ப தூண்டில் போடலாம்டா” என்றான் ஒன்றின்.
“எனக்கு மீன்களைப் பிடிக்கணும்” என்றான் மகிழ்வாக.
மீன் ஒன்று சிக்கியது போல இருந்தது. ஒன்றின் மட்டும் தூண்டிலை இழுத்தான். அவனால் முடியவில்லை. இரண்டின் கை கொடுத்தான். இருவராலும் இழுக்க முடியவில்லை. மூன்றினும் கைகொடுத்தான். இப்போது மெல்ல ஏதோ கரைக்கு வருவது தெரிந்தது. மிகப்பெரிய மீன்.
“வா போதும். கிளம்பலாம்” என்றான் ஒன்றின்.
“என்னது போதுமா?” – ஆச்சரியமாகப் பார்த்தனர் இருவரும்.
“ஆமா, போதும். மீன்களைப் பிடிக்கணும் திரும்பிப் போகலாம். இதைக் கடலில் விட்டுடலாம்” என்றான்.
வாயிலிருந்து தூண்டிலை எடுக்க முயன்றனர். சிக்கலாக இருந்தது. “மீனே வாயைத்திற” என்றான் ஒன்றின். ‘ஆ’ எனத் திறந்ததும் ஒரே ஆச்சரியம். மீனின் வாய்க்குள் நிலா! மிக ஒளிமயமாக இருந்தது. ஒன்றின் மீனின் வாய்க்குள் கைவிட்டு நிலாவை வெளியே எடுத்தான். பலம் கொண்டு கடலில் வீசினான். உடனே அலைகள் அடிக்கத் துவங்கின. வேக வேகமாகப் பலமாக அலைகள் அடிக்க அடிக்க நிலா துள்ளியது. மீன்களைப்போலத் தாவியது. பின்னர் மேகத்தின் மீது தாவித்தாவி மீண்டும் அது முதலில் இருந்த இடத்தை அடைந்தது.
டக்கென நிலா மூவரையும் பார்த்துக் கண்ணடித்தது.