ஊருக்குப் போய் வந்த கரடி – 5 : டீச்சர்… கரடீ…!
“பொழுது விடிஞ்சுது.
கொஞ்ச நேரத்துல சின்ன குழந்தைங்க நிறைய பேரு முதுகுலே பெரிய பெரிய மூட்டைகளைத் துக்கிக்கிட்டு ஒரே மாதிரி உடை போட்டுக்கிட்டு அந்தக் கட்டடத்துக்கு உள்ள வந்தாங்க.’’
“எதுக்கு’’? என ஆவலாய்க் கேட்டது நரி…
“எதுக்குன்னு எனக்கும் புரியல… பொறுமையா மரத்து மேல உக்காந்துப் பார்த்துகிட்டே இருந்தேன்.
கொஞ்ச நேரத்துல பெரியவங்க ஆண் பெண் என்று சில பேரு வேக வேகமா வந்தாங்க. குழந்தைகள் எல்லாரும் அவங்களுக்கு கும்பிடு போட்டாங்க.
திடீர்னு கி…ர்…ர்…ர்…ர்…ருன்னு ஒரு மணி சத்தம் கேட்டுது.
எல்லா குழந்தைகளும் ஒருத்தர் பின்னால ஒருத்தர் வரிசையா நின்னாங்க… ஏதோ பாட்டு பாடுனாங்க… பெரியவங்க பேசினாங்க. அப்புறம் வரிசையா ஒவ்வொரு அறைக்குள்ளேயும் கொஞ்சம் கொஞ்சம் பேர் போனாங்க.’’
“அட எதுக்காக அப்படியெல்லாம் செய்றாங்க குழந்தைகள்’’ என கண்ணை உருட்டி உருட்டி கேட்டது மான்.
“அது பள்ளிக்கூடமாம்… அங்க குழந்தைங்க எல்லாரும் படிக்க வந்திருக்காங்களாம்… இதை குழந்தைகள் பேசினதை வைச்சு நான் தெரிஞ்சுகிட்டேன்.’’
“குழந்தைகள் பள்ளிக்கூடம் போய் படிச்சு என்ன செய்வாங்களாம்? எனக்குப் புரியலையே’’ என்றது பஞ்சவர்ணக்கிளி.
“எண்ணும் எழுத்தும் கத்துகிறதுக்காகத்தான் மூட்டை முட்டையா நிறைய புத்தகம் நோட்டெல்லாம் கொண்டுகிட்டு வந்திருக்காங்க… பெரியவங்களுக்கு ஆசிரியர்னு பேராம்… குழந்தைங்க ‘டீச்சர் டீச்சர்’ன்னு அவங்க பின்னாடியே போறாங்க.’’
“அந்த டீச்சர் ஏதாவது சொல்லிக் கொடுத்தா குழந்தைங்க எல்லாரும் திரும்பத் திரும்ப சத்தமா சொல்லிப் பழகுறாங்க.’’
“ஓ… ஒரு வேளை மனிதன் எப்படி மனிதனா வாழனும்னு கத்துக் கொடுக்கிறாங்களோ?’’ என்றது நரி.
“ஆனா, ஒவ்வொரு குழந்தையையும் ஆசிரியர்… நீ படிச்சி என்ன ஆகப்போறேன்னு கேள்வி கேட்டப்ப “டாக்டர் ஆவேன்…! இஞ்சினியர் ஆவேன்…! டீச்சர் ஆவேன்…! கலெக்டர் ஆவேன்…!’னு சொன்னாங்களேத் தவிர, ஒரு குழந்தை கூட ‘நல்லா படிச்சு… நல்ல மனிதனா ஆவேன்’னுச் சொல்லவே இல்லியே…’’ என வருத்தமாக சொன்னது குட்டிக் கரடி.
“அதுக்கு நீ ஏன் வருத்தப்படுறே… மனிதர்கள் தான் வருத்தப்படணும்’’ என்று ஆறுதல் சொன்னது அம்மா கரடி.
“அதுவும் சரிதான்! பள்ளிக்கூடம் போனே… படிக்கிற குழந்தைகளைப் பாத்தே அதுக்கு அபபுறம்?’’
“அதை ஏன் கேக்குறிங்க… அறைக்குள்ள டீச்சர் நடத்துன பாடத்திலே… யானை, புலி, சிங்கம், முயல், நரி கரடின்னு நம்மளைப் பத்தி தான் பாடம் படிக்கிறாங்க. அதை என் கண்ணாலே பாத்தேன்…. காதாலே கேட்டேன்.’’
“அடடே! மனிதர்கள் நம்மளைவிட ஆற்றல் உள்ளவங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா அந்த ஆற்றலும் அடறிவும் நம்மளை மாதிரி விலங்குகளை பாடமாப் படிச்சதுனாலேதான் வந்திருக்குன்னு இப்பப் புரிஞ்சு போச்சு.’’ என்று தலையை ஆட்டியபடி சொன்னது காட்டுப்பன்றி.
“மாமரத்தை விட்டு எப்பதான் கீழே இறங்குனே? அதைச் சொல்லு…’’ என்றது முயல்.
“டீச்சர்… க… கரடின்னு சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருக்கும்போது ஒரு சின்னப்பையன் சன்னல் வழியா என்னைப் பார்த்துட்டான்.
“டீசசர்! மரத்து மேலே கரடி”ன்னு… கத்திட்டான்.
அவ்வளவுதான் அந்த அறையிலே இருந்த மொத்தக் குழந்தைகளும் அந்த சன்னல்கிட்ட நின்னு என்னை வேடிக்கை பார்க்க ஆரமபிச்சுட்டாங்க.
டீச்சர் என்னைப் பாத்ததும்… பயந்து போயி மத்த அறையிலே உள்ள எல்லாருக்கும் தகவல் சொல்லி…
“பள்ளிக்கூடத்துக்குள்ள கரடி வந்துடுச்சு… பள்ளிக்கூடத்துக்குள்ள கரடி வந்துடுச்சு” ஒரே சத்தம்.
கொஞ்ச நேரத்திலே பள்ளிக்கூடத்தைச் சுத்தி ஒரே கூட்டம். குழந்தைகளை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா பள்ளிக்கூடத்தை விட்டு வெளியே அனுப்பிட்டாங்க.
நான் இருந்த மரத்துக்கிட்டே ஒருத்தரும் வரலே. எல்லாரும் பயந்து போயி கொஞ்சம் தூரத்திலே நின்னு ஏதோ பேசிக்கிட்டாங்க.’’
“அட என்னடா இது… பாடத்திலே படிச்சாங்க… படததுலே பாத்தாங்கன்னு இப்பதான சொன்னே… நேருலே பாத்ததும் பயந்துட்டாங்கன்னு சொல்றே…? மனிதர்கள எல்லாம் வெறும் வாய்ச் சொல் வீரர்கள்னு நினைக்கிறேன்’’ என்றது நரி…
“அட நாம காட்டுக்குள்ள மனிதன் வந்தா தலை தெறிக்க ஓடி ஒளியிறோமே… அது மாதிரி தான் மனிதர்களும் பயந்திருப்பாங்க’’ என்றது
முயல்…
“சரி உனக்கு என்ன ஆச்சு…?’’ என்றது குரங்கு…
“எனனை புடிக்கிறதுக்கு ஏதோ திட்டம் போடுறாங்கன்னு மட்டும் தெரிஞ்சுது. பெரிய பெரிய ஆளுங்க. நிறை பேரு வந்துட்டாங்க. நிறைய வாகனங்கள் வந்தது. அந்த நேரத்திலே திடீர்னு வேகமா மழையும் வந்துடுச்சு.
என்னை வேடிக்கைப் பாத்தவங்க… எல்லாம் மழையிலே நனையக் கூடாதுன்னு ஓடிஒதுங்குனாங்க.
அதுதான் நல்ல வாயப்புன்னு பள்ளிக்கூட கட்டிடத்து மேலே தாவி ஏறி ஓடி அந்த இடத்தைவிட்டு தப்பிச்சுட்டேன்.’’
“நல்ல வேளை மழை வந்து உன்னை காப்பாத்திடுச்சு…’’ என்றது முள்ளம்பன்றி.
“மழை வந்து தான் உலகத்து உயிர்கள் எல்லாத்தையுமே காப்பாத்தது… இல்லேன்னா நாமும் இருக்க மாட்டோம். மனிதர்களும் இருக்க மாட்டாங்க.’’ என்றது குட்டி யானை.
“அது இருக்கட்டும்…. மழையாலே அங்கிருந்து தப்பிச்சு எங்கே போனே?’’ என ஆர்வமாய்க் கேட்டது பறக்கும் அணில்.
“அணிலு… பறக்காதே என் செல்லக்குட்டி சொல்லும்’’ என சிரித்தபடி சொனன்து அம்மா கரடி…<
(பயணம் தொடரும்)