நடந்த கதை – 4: தீப்பற்றிய தினம்!
1924 ஆம் ஆண்டு மார்ச் 30
“சொல்லுங்கம்மா… அன்னிக்கு என்ன ஆச்சு?” அவசரப்படுத்தினான் செழியன்.
“ம்… சொல்றேன் செழியா… அதுக்கு முன்னால ஒன்னு நினைவில வைச்சுக்கோ… அவங்க திட்டமிட்டு இருந்தது அமைதியான முறையில நடத்தற போராட்டம்”
“ஓ!”
“ஆமா… 1924ஆம் ஆண்டு மார்ச் முப்பதாம் தேதி. அன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. ஒடுக்கப்பட்ட மக்கள் நடக்கக் கூடாதுன்னு தடை விதிச்ச தெருக்கள்ல நுழையப்போறாங்க என்ற செய்தி எல்லோருக்கும் தெரிஞ்சிடுச்சு.”
“எல்லோருக்குமா?”
“ஆமா… நாட்டோட விடுதலைப் போராட்டம் பற்றின செய்தி பரவலாப் பேசப்பட்டு வந்த காலம். அதனால அரசியல் நிலவரத்தைத் தெரிஞ்சிக்கிற ஆர்வம் மக்கள்கிட்ட இருந்துச்சு”
“மக்களும் போராட்டத்துக்கு வந்தாங்களா அம்மா?”
”எல்லோரும் சமம்னு நினைக்கிற மக்கள் எல்லாக் காலத்திலேயும் இருப்பாங்க. அதனால அப்படியான மக்களும் போராட்டத்துல கலந்துக்கிட்டாங்க. காலையில இருந்தே காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்குக் கூட்டம் வந்துக்கிட்டே இருந்துச்சு”
”அங்கே ஏன் போனாங்க?”
”அங்கே இருந்துதான் ஊர்வலம் ஆரம்பிச்சு, தடை செய்யப்பட்ட தெருக்களுக்குப் போறதாதான் திட்டம் இருந்துச்சு”
“ஓ!”
“ஆமாம். காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கே.பி.கேசவ மேனன், ஜார்ஜ் ஜோசப், வேலாயுத மேனன், ஏ.கே.பிள்ளை, டி.கே.மாதவன் உள்ளிட்டவர்கள் எல்லாம் போராட்டத்தை ஒருங்கிணைக்கிற வேலைகளை தீவிரமா செய்துகிட்டு இருந்தாங்க. நேரம் ஆக ஆக மக்கள் கூட்டம் அதிகமாயிட்டே இருந்துச்சு.
கைகலப்போ வன்முறையோ நடந்துடுமோன்னு காவல் துறை கெடுபிடிகளும் அதிகமா இருந்துச்சு. கடைத் தெருவுக்கு வரவங்க பொருள் வாங்க வாரங்களா… போராட்டத்துக்கு வந்திருக்காங்களா என்று கவனமா போலீஸ்காரங்க பார்த்துட்டு இருந்தாங்க. குறிப்பா தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மக்கள் கூட்டமாக வராங்களான்னு கவனிச்சாங்க”
“இது அமைதியான போராட்டம்னு சொன்னீங்க?”
“ஆமா. காந்தியடிகளோட அனுமதியோட நடக்கிற போராட்டம்தான். ஆனாலும் தொண்டர்கள் உணர்ச்சி வயப்பட்டு வன்முறை வெடிச்சிடுமோ எனக் கவலைப்பட்டாங்க. அதுக்காக முன்னெச்சரிக்கையோடு காவல் துறை இருந்துச்சு”
“ம்ம்ம்”
“திட்டமிட்டபடியே காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில இருந்து ஆயிரக்கணக்கான மக்களோடு தலைவர்கள் புறப்பட்டுப் போனார்கள். செல்லும் வழியில எல்லாம் தலைவர்கள் தொண்டர்களை உற்சாகப்படுத்தினாங்க. அதேநேரம் எந்த அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாது என்பதிலேயும் ரொம்பக் கவனமாக இருந்தாங்க”
“போலீஸ்காரங்க அவங்களத் தடுத்தாங்களா?”
“சொல்றேன். நடந்து வந்தவர்கள் ஓர் இடத்தில் நின்றார்கள். அங்கே இருந்து சில அடி தூரத்தில தான் ஒடுக்கப்பட்ட மக்கள் நடக்கக்கூடாது என்ற தெரு ஆரம்பிச்சிடுச்சு. “தடை செய்யப்பட்டுள்ளது” என அறிவிப்பும் இருந்துச்சு. அதுக்கு முன்னாடியே எல்லோரும் நின்றுவிட்டார்கள்”
“ஏன் நின்னாங்க.. தெருவுக்குள்ள போகலையா?”
”அதான் இல்ல… அவங்க போராட்டத்தை ரொம்பவே சரியாகத் திட்டமிட்டு நடத்தினாங்க. அதாவது ஒவ்வொரு நாளும் மூன்று நபர்கள் தடை செய்யப்பட்ட தெருவுக்குள்ள போகணும் என்பதுதான் திட்டம். ஏன்னா, ஒரே நாளில் இந்தச் சிக்கல் தீர்ந்திடாது. பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கிற வரை நீண்ட போராட்டத்தை நடத்த இதுதான் சரியான போராட்ட முறை எனத் தலைவர்கள் முடிவெடுத்தாங்க”
“ஓ! வித்தியாசமா இருக்கும்மா… அன்னிக்கு யார் யார் எல்லாம் போனாங்க?”
”தினமும் போற மூணு பேரில் ஒடுக்கப்பட்ட மக்கள்ல இருந்து இரண்டு பேரும் உயர்ஜாதியில் இருந்து ஒருத்தரும் இருக்கணும்னு தலைவர்கள் முடிவெடுத்தாங்க. முதல்நாள், சப்பா என்ற புலையர் பிரிவைச் சேர்ந்தவரும், பாஹுலயன் என்ற ஈழவர் பிரிவைச் சேர்ந்தவரும் கோவிந்த பணிக்கர் என்ற நாயர் பிரிவைச் சேர்ந்தவரும் உள்ளே போனாங்க”
“அப்பறம்?”
”அப்படி மூணு பேரும் போறதுக்கு ஒத்துகிட்டதே பெரிய விஷயம் இல்லையா? ஏன்னா, பல்லாண்டுகளா விதிச்சிருந்த தடையை மீறணும். நீதிமன்றத்திலும் வழக்கு இருக்கு, காவல் துறை எப்படி வேணுமானாலும் நடந்துக்கலாம். உயர்ஜாதி இந்துக்கள் இவங்களத் தாக்கக்கூட செய்யலாம். என்ன வேணாலும் நடக்கலாம். ஆனாலும் மூணு பேரும் துணிச்சலோடு தடை விதிக்கப்பட்ட பகுதிக்குள்ள போகத் தயாராக இருந்தாங்க”
“ம்ம்”
“தலைவர்கள் வழிகாட்டலோட தடை செய்யப்பட்ட பகுதியை நோக்கி மூணு பேரும் நடந்தாங்க. பூக்களைத் தூவி அவங்கள வாழ்த்தி அனுப்பினாங்க எல்லோரும். ஏராளமான போலீஸ்காரர்கள் அங்கே நின்னுட்டு இருந்தாங்க. அவங்களப் பார்த்து மூணு பேரும் கொஞ்சம் கூட பயப்படல. துணிச்சலோடு நடந்து முன்னேறினாங்க. வரலாற்றுச் சிறப்பு மிக்க நடை அது”
”ஆமாம்! ஆமாம்!”
”அங்கே போலீஸ் சூப்பிரிண்டெண்ட், மாவட்ட நீதிபதி என முக்கியமானவங்க எல்லாம் நின்னாங்க. யாரைப் பார்த்தும் அந்த மூணு பேருக்கும் பயம் வரல. பொதுவீதியில நடந்தே தீருவோம்னு உறுதியோட முன்னேறிப் போனாங்க”
“யாரும் தடுக்கலையா?”
“தடுக்கறதுக்குதானே அவ்வளவு போலீஸ் நிக்கிறாங்க. மூணு பேரு கிட்டேயும் வந்து பொது வீதியில போறதுக்கு உள்ள தடையை எடுத்துச் சொன்னது போலீஸ். ஆனா, இவங்க அந்தத் தடையை மீறுவதில் ரொம்ப ரொம்ப உறுதியாக இருந்தாங்க. ஏன்னா, அந்தத் தெருவில ஆடு, மாடுங்க எல்லாம் போறப்ப, மனுஷங்க போகக்கூடாதா என்ற அவங்க கேள்வியில நியாயம் இருக்கத்தானே செய்யுது”
“கண்டிப்பா அம்மா… ஜாதியைச் சொல்லி ஒருத்தவங்கள தடுக்கிறது தப்புதான்”
“ஆமா.. செழியா… அந்த உறுதியோட அவங்க நின்னாங்க. காவல் துறை இவங்களோட உறுதியைப் பார்த்து அசந்துட்டாங்க. ஏன்னா, அந்த மூணு பேரு கிட்டேயும் வன்முறை வார்த்தைகள் வரல…. உரிமையைக் கேட்கிற உறுதியான குரல்தான் வெளிப்பட்டுச்சு. என்ன சொல்லியும் தங்களோட முடிவுல பின் வாங்கப் போறது இல்லேன்னு தெளிவாச் சொன்னாங்க”
”அப்பறம்?”
”சத்தியாகிரகப் போராட்டம் என்பதால எந்த ஆயுதமும் இல்லாமல் நிராயுதபாணியாக அவங்க இருந்தாங்க. பேசி சோர்ந்து போன காவல் அதிகாரிங்க ‘திரும்பிப் போகலன்னா.. கைது செய்வோம்’னு மிரட்டுற விதமாகச் சொன்னுது”
“அய்யோ..”
“இதெல்லாம் எதிர்பார்த்துதானே அவங்க இருந்தாங்க.. அதனால, கைது வேணா செஞ்சுக்கோங்க. போராட்டத்தில இருந்து பின்வாங்க மாட்டோம்னு ஒரே குரலில் உறுதியோட சொன்னாங்க.“
“சூப்பர்ம்மா”
“மூணு பேரையும் காவல்துறை கைது செய்தது. வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்தப் போராட்டம் அன்னிக்குதான் ரொம்பத் தீவிரமாகத் தொடங்குனுச்சு”
”அன்னிக்கு மாலை நடந்த கூட்டத்துல ஜார்ஜ் ஜோசப் பேசறப்ப, “பொதுச்சாலைகள்ல இந்துக்கள்ல ஒரு பகுதியினரை உள்ளே விடாதது அநீதி”ன்னு அழுத்தமாகப் பேசி போராட்டத்தில் நடந்ததை மக்கள்கிட்ட கொண்டு போய்ச் சேர்த்தார். அதோட மிக முக்கியமான ஒரு செய்தியையும் சொன்னார். அதைக் கேட்டு மக்கள் கைதட்டிப் பாராட்டினாங்க”
“என்ன சொன்னார் அம்மா?” <
(தொடரும்)