உஷ்ஷ்…
மாலிவியா காட்டில் பெரிய ஆலமரம் இருந்தது. அங்கேதான் காட்டின் மாதாந்திரக் கூட்டம் வழக்கமாக நடைபெறும். ஒவ்வொரு மாதமும் கூட்டம் நடக்கும். தவறாமல் ஒவ்வொரு விலங்கினத்தின் தலைவரும் கலந்து கொள்ள வேண்டும். எல்லோருடைய பிரச்சினைகளும் அங்கே பேசப்படும். இரண்டு விலங்கினங்களுக்கு இடையே நடக்கும் சண்டைகளும் தீர்த்து வைக்கப்படும். கிட்டத்தட்ட நாட்டில் இருக்கும் அமைச்சரவை போல் தான் இருக்கும். அன்று கூட்டம் வெகு நேரம் நடந்தது. இனின் குரங்கிற்காகக் காத்திருந்தனர். “என்னப்பா இனினை இன்னும் காணோமே” என டிங்கு கரடி கேட்டது. பொறுமையாக இருக்கும்படி ரிங்கோ மான் கேட்டுக்கொண்டது. மாலை நேரமாகிவிட்டால் டிங்குவிற்கு ஆடி அசைந்து, தான் வசிக்கும் மரத்திற்குச் செல்ல நேரம் கொஞ்ச அதிகம் ஆகும். நேற்று எடுத்து வந்த தேன் வேறு மிகவும் சுவையாக இருந்தது. இன்று இரவு உணவு அதுதான்.
‘சொய்ங்…’ என்று மரத்தின் மீது இருந்து இனின் குரங்கு குதித்தது. “என் இனிய நண்பர்களே.. உங்களுக்கு ஓர் அவசரச் செய்தியைத் தெரிவிக்க வேண்டும். சில வாரங்களாக நம் காட்டிற்குள்ளும் அருகிலும் மனித நடமாட்டமே இல்லை தெரியுமா? நாட்டில் புதிதாக ஏதோ ஒரு வகை நோய் பரவுகின்றதாம். அதனால் எல்லா மனிதர்களும் வீட்டிலேயே அடைபட்டுக் கிடக்கின்றார்கள். தெருக்கள், பூங்காக்கள், அலுவலகங்கள் பள்ளிகள் எல்லாம் வெறிச்சோடிக் கிடக்கின்றன. இந்த நேரத்தில் என்னுடைய நீண்ட காலக் கோரிக்கையை நாம் நிறைவேற்றிவிடலாம்”
எல்லோருக்கும் நாட்டில் நடக்கும் செய்திகளைச் சொல்வது இனின்தான். மனிதர்கள் இப்படி அவதிப்படுகின்றார்களே என வருந்தின. “நம்மளை எவ்வளோ துன்பப்படுத்துறாங்களே… அவங்களுக்காக ஏன் வருந்தறீங்க” என்று புரியாமல் கேட்டது டிங்கு. காட்டின் மூத்த விலங்கான வெள்ளை ஒட்டகச் சிவிங்கி காசர், டிங்குவிடம், “அப்படி இல்லை டிங்கு. இந்த உலகம் எல்லோருக்குமானது தான். நமக்கு, பறவைகளுக்கு, மனிதர்களுக்கு என எல்லோருக்குமானது” என்று விளக்கியது. ஏதோ புரிந்தது போலத் தலையைத் தலையை ஆட்டியது டிங்கு. திடீரென ஞானம் பெற்றதுபோல “ஆமாம் இனின், அது என்ன உங்கள் நீண்ட நாள் கோரிக்கை?”
“காட்டிற்கு ஒரு பூங்கா”
இனின் வெகு நாட்களாகவே… இல்லை இல்லை, பல ஆண்டுகளாகவே காட்டிற்குள் ஒரு பூங்கா அமைக்க வேண்டும் என்று சொல்லி வருகின்றது. ஆனால் பூங்கா என்றால் என்ன என்று கூட மற்றவர்களுக்குப் புரியவில்லை. அதில் சறுக்குமரம், ராட்டினம் என நிறைய விளையாட்டுப் பொருட்கள் இருக்கும், குட்டி விலங்குகள் விளையாடும் இடமாக அமையும் எனச் சொல்லி வருகின்றது. ஆனால், பிரச்சனை என்னவென்றால் நாட்டுக்குள் யாரும் செல்ல முடியாது. பூங்கா எப்படி இருக்கின்றது எனப் பார்க்கவும் முடியாது. நேரில் பார்க்காமல் எப்படிப் பூங்காவைக் கட்டுவது என்பது காட்டிலுள்ள பெரியவர்களின் கருத்து.
“இப்ப எல்லாரும் வீட்டுக்குள்ளவே தான் இருக்காங்க. நாம ஒரு ஆறு ஏழு பேர் போய் பார்த்துவிட்டு வந்திடலாம்” என்றது இனின்.
“நாட்டுக்குள்ள போறதா?” என்று எல்லோருக்கும் அதிர்ச்சி. “மனுஷங்க நம்மளைப் புடிச்சி அடைச்சிடுவாங்க இனின்” என எச்சரித்தது காசர். இனின் எல்லோருக்கும் நம்பிக்கை கொடுத்தது. “மனித நடமாட்டம் நிச்சயம் இருக்காது. பத்திரமாகப் போய்ப் பார்த்துவிட்டு வந்திடலாம். பகலிலாவது சில மனிதர்கள் நடமாடுவார்கள்; இருட்டும் போது போகலாம் எப்படியும் வரமாட்டார்கள்” என்றது. எல்லோருக்கும் இந்த யோசனை சரி எனப்பட்டது.
மறு நாள் ஏழுபேர் கொண்ட குழு நாட்டில் இருக்கும் பூங்காவைப் பார்க்கக் கிளம்பியது. இனின் வழி நடத்த ரிங்கோ மான், காசர் ஒட்டகச்சிவிங்கி, டிங்கு கரடி, சிலோ சிங்கம், மக்கே ஆமை மற்றும் ஒரு பெயர் வைக்கப்படாத சிறுத்தை ஒன்று எனப் பின் தொடர்ந்தன. குரங்கு வேகமாகச் செல்ல மக்கே ஆமையால் பின் தொடர முடியவில்லை. அதனால் ஒட்டகச்சிவிங்கியின் பின்புறம் ஏறிக்கொண்டது. நாட்டுக்குள் நுழைந்துவிட்டனர். வழக்கமாக ஊரே தெருவில் இருக்கும் சமயம் அது. ஆனா, அந்த நோய்த் தொற்று காரணமாக வெறிச்சோடிக் கிடந்தது. இனினின் நோக்கம் ஊரைச் சுற்றிக்காட்டுவது அல்ல, பூங்காவை மட்டும் பார்த்துவிட்டுக் கிளம்பிவிட வேண்டும் என்பதுதான்.
பதுங்கிப் பதுங்கி பூங்காவை அடைந்தார்கள். நல்லவேளையாகக் கொஞ்சம் வெளிச்சம் இருந்தது. முதலில் ஒவ்வொரு விளையாட்டுப் பொருளாகப் பார்க்க ஆரம்பித்தனர். சறுக்குமரத்தில் எப்படிச் சறுக்க வேண்டும் என்று குரங்கு ஏறி சறுக்கிக் காட்டியது. அதன் பின்னர்தான் உற்சாகம் கிளம்பியது. சிங்கமும் சிறுத்தையும் யார் முதலில் சறுக்குவது எனச் சண்டையிட்டுக் கொண்டன. காசரால் எதிலும் கலந்துகொள்ள முடியவில்லை. ஆனால் சண்டை நடந்தால் விலக்கி விட்டது. ஊஞ்சலில் தன்னை ஏற்றி விடச்சொல்லி டிங்கு ஒரே அட்டகாசம் செய்து அடம்பிடித்தது. ஒருவழியாக ஏற்றியும் விட்டார்கள். ஊ… ஊ… ஊ… எனக் கத்தி உற்சாகமடைந்தது.
விளையாட்டின் இடையில் சிங்கமும், சிறுத்தையும் இனினும் கூடிப்பேசினர். “நாம் ஏன் இந்தப் பூங்காவில் இருக்கும் பொருட்களையே காட்டுக்குத் தூக்கிக் கொண்டு போகக்கூடாது?” என்றது இனின். “நாளைக்குச் சில யானை நண்பர்களை அழைத்து வந்து எடுத்துட்டுப் போயிடுவோம்” என்றது சிலோ சிங்கம்.” நல்ல யோசனை… நல்ல யோசனை என அனைவரும் ‘ஊங்’ கொட்டினார்கள். டிங்கு பூங்காவை விட்டு வருவது போல தெரியவில்லை.
அப்போது திடீரென ஒரு விளக்கு எரிந்தது. அது பூங்காவை ஒட்டி இருந்த வீட்டின் அறையிலுள்ள விளக்கு. சன்னல் திறக்கும் சத்தம் கேட்டது. சில விநாடியில் ஒரு சிறுவனின் கை வெளியே நீண்டது. எல்லா விலங்குகளும் அதையே பார்த்துக்கொண்டிருந்தன. “உஷ்ஷ்…. அமைதியா விளையாடுங்க” என்ற குரல் கேட்டது. அது அந்தச் சிறுவனின் குரல் தான். பின்னர் சன்னல் மூடப்பட்டு விளக்கும் அணைக்கப்பட்டது.
ஒரு மணி நேரம் விளையாடிய பின்னர் எல்லோரும் காட்டுக்குக் கிளம்பின. டிங்குதான் அழுதுகொண்டே கிளம்பியது. காட்டை அடையும்போது சிலோ சிங்கம் சொன்னது.
“இல்லை இனின்…. காட்டில் நாமே ஒரு பூங்காவை உருவாக்குவோம். நாளைக்கே அந்தக் குட்டிப் பையன் விளையாட வந்தா அவனுக்குப் பூங்கா இருக்கணும் இல்ல”
உஷ்ஷ்…..