அறிஞர்கள் வாழ்வில்
மீண்டும் எழுதிவிடுவேன்
நாள் ஒன்றுக்கு 18 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்து ஆராய்ச்சியில் ஈடுபட்டவர் சர்.அய்சக் நியூட்டன். ஒரு நாள் தமது நண்பர்களுக்கு விருந்து கொடுக்க நினைத்து ஏற்பாடு செய்திருந்தார்.
பலவகையான உணவுப் பதார்த்தங்களுடன் விருந்து பரிமாறப்பட்டது. அப்போது, திராட்சை ரசம் உரிய நேரத்தில் அவரது நண்பர்களுக்குக் கொடுக்கப்படவில்லை. இதனைக் கவனித்த நியூட்டன் தாமே தமது நண்பர்களுக்குப் பரிமாற நினைத்து எடுத்துவரச் சென்றார்.
அந்த நேரத்தில் அவரது சிந்தையில் அறிவியல் ஆராய்ச்சியின் பிரச்சினை ஒன்றிற்கான தீர்வு புலப்பட்டது. நண்பர்களுக்கு விருந்து கொடுத்துக் கொண்டிருந்த சூழ்நிலையை மறந்தார்.
திராட்சை ரசம் எடுத்துச் செல்லச் சென்றதையும் மறந்து ஆராய்ச்சிக் கூடத்திற்குள் நுழைந்து ஆராய்ச்சியில் மூழ்கிவிட்டார்.
இன்னொரு நாள் இரவு சோதனைகளைச் செய்து பார்த்துக் கொண்டிருந்தார். போதிய வெளிச்சம் இல்லாததால் மெழுகுவர்த்தியினை வைத்து ஆராய்ச்சியைத் தொடர நினைத்தார்.
மெழுகுவர்த்தியினை ஏற்றி ஒரு நோட்டின் மீது வைத்தார். அந்த நோட்டு அவரது 20 வருட ஆராய்ச்சிக் குறிப்புகளை உள்ளடக் கியது.
ஆராய்ச்சியில் முழு கவனத்தையும் செலுத்தியதால் மெழுகுவர்த்தியைக் கவனிக்க வில்லை. மெழுகுவர்த்தி எரிந்து முடிந்து நோட்டும் தீப்பிடித்து எரிந்து சாம்பலாகியது. சிறிது நேரத்தில் அவருடன் அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்கள் நியூட்டனைப் பார்க்க வந்தனர். அவரது ஆராய்ச்சிக் குறிப்புகள் அழிந்து சாம்பலாகியதைப் பார்த்தனர். நியூட்டன் நிலைகுலைந்து விடுவாரே என நினைத்துப் பதற்றமடைந்தனர்.
சிறிது நேரத்தில் அவர்களைப் பார்த்த நியூட்டன் 20 ஆண்டுகளின் உழைப்பு ஒரு பிடி சாம்பலாகக் கிடந்த காட்சியைச் சிறிதுநேரம் கண் இமைக்காமல் பார்த்தார்.
பின்பு, ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை, சில ஆண்டுகள் மீண்டும் உழைத்து ஆராய்ச்சி செய்தால் இழந்த குறிப்புகளை மீண்டும் தொகுத்து எழுதிவிடுவேன் என்று பதற்றமின்றிக் கூறியுள்ளார்.