ஓவியம் வரையலாம், வாங்க!
அன்பு பெரியார் பிஞ்சுகளே! நண்பர்களே!
இந்த முறை நாம் என்ன வரையப் போகிறோம் தெரியுமா?
“அதிகாலையில் சேவலை எழுப்பி – அதைக் கூவென்று சொல்லுகிறேன்’’ என்ற பா.விஜய் அவர்களின் வைர வரிகளில் இருக்கும் சேவலைத்தான் வரையப் போகிறோம்.
கோழி என்பது ஆண், பெண் என இரண்டிற்குமான பொதுப்பெயர். சேவல் என்பது கோழி இனத்தில் ஆணினத்தைக் குறிப்பதாகும்.
சேவலை அடையாளப்படுத்துவது அதனுடைய சிவந்த கொண்டையும், அழகிய வால்பகுதியும், கம்பீரமான தோற்றமும்தான்.
சேவல் கூவும் ஆற்றலும் கொண்டது. சேவல் கூவும் சத்தம் கிட்டதட்ட 2 கிலோ மீட்டர் தூரம் வரை கேட்குமாம்.
மக்களை காலையில் எழுப்பிடும் சேவகனாகவும், ஒன்றாம் சாமம், இரண்டாம் சாமம், மூன்றாம் சாமம் எனக் காலத்தைக் கணிக்கக் கூவிடும் கடிகை போன்றும் செயல்புரிகிறது.
சேவல் சண்டை, தமிழ்நாட்டில் நடத்தப்படுகின்ற ஒரு விளையாட்டு ஆகும். கி.பி. அய்ந்தாம் நூற்றாண்டில் சேவல் சண்டை நடைபெற்றதாகச் சான்றுள்ளது.
பழந்தமிழ் நூல்களில் சேவல் சண்டை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகைய பெருமைகொண்ட சேவலை வரைவதற்குத் தேவையான ஆங்கில எழுத்துக்கள் D, V, U, M, O மற்றும் W.
1. ‘‘D’’ எழுத்தை சற்றே வலதுபுறம் சாய்வாக இருக்கும்படி எழுதவும்.
2.‘D’’ இன் மேற்பகுதியில் ‘ ‘V’’ எழுத்தைத் தலைகீழாக எழுதவும்.
3.D இன் உட்பகுதியில் ‘U’ எழுத்தை இடதுபுறம் சாய்வாக எழுதவும். பின்னர் ‘U’ இன் உட்பகுதியில் உள்ள தேவையற்ற கோடுகளை அழித்துவிடவும்.
அதனைத் தொடர்ந்து ‘V’ இன் முன்பகுதியில் படத்தில் காண்பது போல் சிறிய அளவில் ‘U’ எழுத்தை எழுதவும்.
4. தேவையற்ற கோட்டை அழித்துவிட்டு ‘U’இன் நடுப்பகுதியில் ‘M’ எழுத்தை படுக்கை வசமாக எழுதவும்.
பின்னர் வளை கோட்டின் உதவியுடன் பெரிய ‘U’ன் மேற்பகுதியை இணைக்கவும்.
5. O, W எழுத்தின் உதவியுடன் படத்தில் காண்பதுபோல் கண்ணையும், கால் பகுதியையும் வரையவும்.
6. வளை கோடு கொண்டு சேவலின் வால் பகுதியை வரையவும்.
7. படத்தில் காண்பதுபோல் கால்களையும், கொண்டையையும், வால்பகுதியையும் வளை கோடு கொண்டு இணைத்துக்கொண்டால் அழகிய சேவல் கிடைத்துவிடும்.
வண்ணம் தீட்டி மகிழுங்கள்.<