பெரியார் தேர்ந்துரைத்த பொங்கல் திருநாள்!
பைந்தமிழ் இலக்கியச் சான்றுடனே
பழம்பெரும் பண்பா டுரைக்கின்ற
தைமுதல் நாளைத் தமிழினத்தார்
தமிழ்ப்புத் தாண்டெனக் கொள்வோமே!
சங்க காலம் முதற்கொண்டே
சமத்துவ மாகப் பொங்கலிட்ட
மங்காத் தமிழின மாண்புகளை
மன்பதை அறிந்திடச் செய்வோமே!
பயன்தர உழைக்கும் எருதுகளை
பாங்குடன் போற்றி மகிழ்வோமே!
பலம்பெற நமக்குப் பால்கொடுக்கும்
பசுக்களின் உறவை மதிப்போமே!
ஆரியப் புளுகுப் பண்டிகைகள்
அனைத்தும் நமதிலை என்போமே!
சீரிய பெரியார் தேர்ந்துரைத்த
சிறப்புடைப் பொங்கலைக் கொள்வோமே!
தமிழர் திருநாள் தைமுதல் நாள்
தமிழ்ப்புத் தாண்டின் தொடக்கமென
நமதருங் கலைஞர் ஆணைதனை
நாமெலாம் ஏற்றுத் தொடர்வோமே!
இயற்கைச் சீற்றம் எதுவரினும்
இயல்பெனக் கருதி வெல்வோமே!
செயற்கைக் கற்பனைக் கடவுள்களும்
செயல்படா திருப்பதைச் சொல்வோமே!
புயல்மழை வெள்ளம் இவையெல்லாம்
புரட்டிப் போட்டன வாழ்க்கையையே!
தயவாய் நம்மைக் காத்திடவே
திராவிட மாடல் ஆட்சியுண்டே!
உலகினுக் குணவு வழங்குதற்காய்
உழைத்திடும் உழவரைப் போற்றுவமே!
விளங்கிடும் விண்மீன் ஞாயிற்றின்
விளைவுகள் நாமெனச் சாற்றுவமே! <
– கவிஞர் பெரு. இளங்கோ