ஓவியம் வரையலாம், வாங்க! புத்தகம் வரைவோம்!
ஓவியம் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தோடு இருக்கும் பெரியார் பிஞ்சு நண்பர்களே!
“சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்’’
என்பது பொன்மொழி.
நீங்கள் தினமும் சிறிது நேரம் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ள படத்தை கவனமாகப் பார்த்து ஒரு முறைக்கு இரண்டு முறை வரைந்து பார்த்தால் எல்லோரும் ஓவியராகலாம்.
ஓவியக் கலையின் அடிப்படையே உற்று நோக்குதல், நினைவில் வைத்தல், பொறுமை காத்தல் ஆகியவையாகும்.
இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் எல்லாத்துறையும் வளர்ந்துள்ளது போல் ஓவியத்துறையும் வளர்ந்துள்ளது. ஒரு காலத்தில் செய்யுள் வடிவில் இருந்த இலக்கியங்கள், தற்போது உரைநடை முறையிலும், பிறகு புதுக்கவிதை வடிவிலும் இப்போது ஹைக்கூ வடிவிலும், மாறியுள்ளன. அதுபோல குகைகளில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் இன்று கூகுள் வரை காட்சிப்படுத்தப்பட்டு வளர்ந்துள்ளன. இவ்வாறு சிறப்புப் பெற்ற ஓவியக் கலையில் இன்று நாம் வரையப் போகும் ஓவியம் புத்தகம்.
பெரியார் பிஞ்சுகளே! படிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றிக் கூறியவர்களின் கருத்தைப் பாருங்கள்.
* படுக்கின்ற அறையைக் கூட படிப்பகத்தின் அருகாமையில் கேட்டவர் அண்ணல் அம்பேத்கர்.
* தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லும்வரை படித்துக்கொண்டே இருந்தவர் தோழர் பகத்சிங்.
* படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை முடித்துவிட வேண்டும் என்பதற்காக தன்னுடைய அறுவை சிகிச்சையைக் கூட அடுத்த நாளைக்கு மாற்றியவர் பேரறிஞர் அண்ணா.
* தூக்கு கயிற்றை முத்தமிடும் வரை படித்துக்கொண்டே இருந்தவர் உமர் முக்தார்.
* இந்த உலகையே மாற்றக்கூடிய ஆயுதம் புத்தகம் என்றார் நெல்சன் மண்டேலா.
* நூலகத்திற்குப் போ! நீ எவ்வளவு முட்டாள் என்பதை புத்தகம் சொல்லும் என்றவர் ஜெயகாந்தன்.
* படிக்காமல் இருப்பதைவிட, மறக்காமல் இருப்பது மேல் என்றவர் பிளேட்டோ.
* படித்தால் மட்டுமே நீங்கள் அத்தனை பேரும் இந்தப் பாரை ஆளமுடியும் என்பதை படித்துப் படித்துக் கூறியவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம்.
* யாரெல்லாம் புத்தகத்தின் முன் தலைகுனிந்து படிக்கிறார்களோ அவர்களெல்லாம் நாளை தலைநிமிர்ந்து வாழ்வார்கள் என்று கூறியவர் லெனின்.
புத்தகங்கள் என்னவெல்லாம் செய்யும் தெரியுமா பிஞ்சுகளே!
பிக்காஸோவின் – ஓவியத்தைவிட,
பித்தோவானின் – செய்யுளைவிட, இசையைவிட,
ஆபிரகாம் லிங்கனின் – ஓர் உரையைவிட
புத்தகத்தின் மவுனம் இந்த உலகையே வெல்ல வழிகாட்டும் இத்தகைய பெருமை பெற்ற புத்தகத்தைப் பற்றி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். சரி, வாங்க நாம் ஆங்கில எழுத்துகளின் உதவியுடன் புத்தகம் எவ்வாறு வரையலாம் என்று பார்ப்போம்.
இதற்குத் தேவையான எழுத்துக்கள் லி மற்றும் சி மட்டுமே.