“கொத கொத கொதக்”
விழியன்
மழை பெய்து ஊரையே நன்றாகக் கழுவியதுபோல இருந்தது. இரண்டு வாரங்களாகத் தூறலும் மழையுமாக இருந்தது. மற்ற பகுதிகளில் எல்லாம் பெருமழை. அந்தக் கால்வாயில் ஒரு பகுதி அரை வட்ட வடிவில் இருந்தது. அரை வட்டத்தைப் பார்த்துள்ளீர்கள் தானே? வட்டத்தில் பாதி. அந்த அரைவட்டப் பகுதியின் அருகே ஒரு மாந்தோப்பு இருந்தது. சிறுவர்கள் அங்கே வழக்கமாக விளையாடுவார்கள். மாந்தோப்பு யாருக்கும் சொந்தமில்லாத இடம். எல்லோரும் வந்து போவார்கள். கால்வாயில் ஏதோ விநோதமாகச் செல்வதைச் சிறுவர்கள் கவனித்தனர். விநோதமான சத்தம் வேறு. “கொத கொத கொதக்”. அதில் சூடான ஆவி பறந்தது. கமகம வாசனை வேறு.
“என்னடா அழுக்குத் தண்ணியா இருக்கு?”
“இல்லை, அழுக்கு தண்ணி மாதிரி தெரியல”
“டேய், அது சாம்பார்போல இருக்கு”
கால்வாய் முழுக்கச் சாம்பார் என்றால் எப்படி இருக்கும்! சிறுவர்களுக்குப் புரியவில்லை. என்னடா இது எனக் குழம்பினார்கள். ஒரு குச்சியைவிட்டு தொட்டு கையில் வைத்துப் பார்த்தார்கள். சாம்பார் வாசனையேதான். ஒருவன் குனிந்து, தன் கைகளில் ஒரு துளியைத் தொட்டு ருசித்துப் பார்த்தான்.
“டேய்… செம சுவையா இருக்கு!” என்று கத்தினான்.
“கொத கொத கொதக்”
அதற்குள் நான்கு அய்ந்து சிறுவர்கள் ஊருக்குள் ஓடி செய்தியைச் சொல்லிவிட்டனர். அடிச்சு புடிச்சு ஊர் மக்கள் ஓடி வந்தனர். அதிசயம்தானே! சாம்பார் ஆறு போல இருந்தது. காய்கறிக் கடைக்காரர் சந்தையிலிருந்து வாங்கி வந்த காய்களுடன் வந்திருந்தார்.
அம்மா ஒருவர் இரண்டு முருங்கைக்காயை வண்டியிலிருந்து எடுத்து கால்வாயில் வீசினார். உள்ளே போன முருங்கை அய்ந்து அடி தூரத்தில் நன்றாக வெட்டப்பட்டு வெந்து சாம்பாரில் மிதந்தது.
“கொத கொத கொதக்”
“ஆ’வென வாயைப் பிளந்தனர்.
அழுகிய தக்காளியை ஒரு சிறுவன் தூக்கி எறிந்தான், “பசக்’ என்று அவன் முகத்திலேயே திருப்பி அடிக்கப்பட்டது. நல்லதை மட்டும் எடுத்துக்கொள்கின்றது. மற்றவற்றை வீசி விடுகின்றது. காய்கறிக்காரரிடம் மொத்தக் காய்கறிகளையும் மக்கள் வாங்கினர். நன்றாகக் காய்களை வீசினர். அய்ந்து அடி தூரத்தில் சாம்பாரில் வெந்து மிதந்தது. கற்களை வீசினர். அது கரையில் ஒதுங்கியது. செய்தி ஊருக்குள் சென்றதும் ஊரே வந்துவிட்டது. சிலர் வாளிகளுடன் வந்தனர். சாம்பாரை மொண்டனர். மிகவும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருந்தது. சுவைக்குக் குறைச்சலே இல்லை. ஊரில் வீடுகளில் இருந்த அண்டாக்கள், சாமான்கள் என வந்துவிட்டன. அனைத்திலும் சாம்பார் நிரம்பி வழிந்தது.
“கொத கொத கொதக்”
ஒரு குழுவினர் எங்கிருந்து சாம்பார் உருவாகின்றது, எப்படிச் சூடாக இருக்கின்றது, எதுவரை செல்கின்றது என ஆராய்ந்தனர். அரை வட்டம் துவங்கும் இடத்தில் துவங்கி, அரை வட்டம் முடியும் இடத்தில் சாம்பார் பயணம் முடிகின்றது. அங்கிருந்து ஓர் ஊற்றுக்குள் சென்று மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கு வருகின்றது.
“கொத கொத கொதக்”
மக்கள் அதற்குள் துவரம்பருப்பு, தக்காளி, வெங்காயம், பூண்டு, விதவித காய்கள் எனப் போட ஆரம்பித்தனர். இன்னும் இன்னும் மணம் வீசியது. பக்கத்தில் நடந்த திருமணம், விசேஷங்களுக்கு எல்லாம் இங்கிருந்து சாம்பார் சென்றது. வீடுகளில் எல்லாம் சாம்பார் நிரம்பியது. ஆனால், இதனை எப்படி நிறுத்துவது என்று புரியவே இல்லை. பக்கத்துக் கிராமங்களில் இருந்தும் வந்து எடுத்துச் சென்றனர். எடுக்க எடுக்க கால்வாயில் இன்னும் நிறைய சாம்பார் நீந்தியது.
“என்னப்பா இது தலைவலியாக இருக்கு” எனப் பெரியவர்கள் வருந்தினர்.
நிறைய உரையாடல். ஒரு சிறுவன் கை உயர்த்தி, “நான் ஒரு கதை படிச்சேன். அதில் நிறைய பூரிகள் இப்படி உருவாகும். கடைசியில் ஒரு பறவை வந்து சாப்பிட்டதும் பூரி தயாராவது நின்றுவிடும்” என்றான். எந்தப் பறவைக்குச் சூடான சாம்பார் வைப்பது?
பெரும் குழப்பம்.
“கொத கொத கொதக்”
மாலையே நெருங்கிவிட்டது. ஊரே அங்கு கூடி இருந்தது.
சாம்பார் கொதிக்கக் கொதிக்க சுற்றிக்கொண்டு இருந்தது. அந்தச் சமயம் முதன்மைச் சாலையில் சத்தமிட்டபடி ஒரு லாரி. சாம்பார் ஏற்றிச்செல்ல வருகின்றது என நினைத்தனர். வண்டி முழுக்க சாமான்கள், பொருள்கள், உணவுப் பொருள்கள்.
“சாம்பார் வேண்டாமா?”
“இடமில்லை. எல்லாமே பொருள்கள்தான்”
“எங்கே போகுது?”
“அண்மையில் பெய்த பெருமழையால் பல கிராமங்களில் நிலைமை சீராக இல்லை. அங்கே கொடுப்பதற்காக நிவாரணப் பொருட்கள் போகுது” என்றனர்.
உடனே முடிவெடுத்தனர். “எங்க ஊரில் இருந்து ஒரு லாரி முழுக்க சாம்பார் அனுப்பறோம் சுடச்சுட…” என்றனர்.
தண்ணீர் லாரி இரண்டு பிடித்து முழுக்க சாம்பாராக நிரப்பினார்கள். இருங்க… இருங்க… ஊர்ச் சிறுவர்கள் சும்மா இருப்பார்களா? கிராமத்தின் சார்பாக நிவாரணப் பொருள்களைத் திரட்டினர். இரண்டு சாம்பார் லாரிகள். மூன்றாவது லாரியில் நிவாரணப் பொருள்கள். பயன்படுத்திய பின் வேண்டாம் எனப் போட்ட பொருள்கள் அல்ல, புத்தம் புதிய ஆடைகள், வீட்டுக்குத் தேவையான பொருள்கள், மளிகை சாமான்கள், காய்கறிகள் என லாரி நிரம்பியது.
கொத கொத கொதக் சத்தம் அடங்கியது. மறுநாள் காலை வழக்கமான கால்வாயாக ஓடியது. நீர் சல சல சலவென ஓடியது.