செ.நு. தொடர் – 9 – ஓட்டுநர் இல்லாத கார்கள்!
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் முதல் முறையாக ஓட்டுநர் இல்லாத கார்கள் சாலைகளில் வலம் வரத் தொடங்கியுள்ளன. நீங்கள் படிப்பது உண்மைதான். அந்தக் காரில் ஏறி நீங்கள் எங்கே போக வேண்டுமோ அந்த இடத்தைக் கூறி கட்டளையிட்டு விட்டால் போதும். ஓட்டுநர் யாரும் இல்லாமல் அந்தக் காரில் உள்ள செயற்கை நுண்ணறிவு மென்பொருளே நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கான நேரம் குறைந்த ஒரு வழியை முடிவு செய்து, தானாகவே வண்டியை ஓட்டிக்கொண்டு குறிப்பிட்ட இடத்தில் பத்திரமாக உங்களை இறக்கி விட்டு விடும்.
இப்படி கார், அது செல்லும் சாலையைப் புரிந்து கொள்ள அதனுடன் ஒரு காமிரா இணைக்கப்பட்டு இருக்கும். காமிராவிலிருந்து வரும் படங்கள் கணினிக்கு உள்ளிடப்பட்டு அந்தக் கணினியில் இயங்கும் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் அந்தப் படங்களைப் புரிந்து கொள்ளும். ஒரு வேலை எதிரே ஏதாவது வண்டி வரும் படம் தெரிந்தால் உடனடியாக பிரேக்கை அழுத்தி கார் நின்று விடும். செயற்கை நுண்ணறிவுத் துறையில் இதைக் கணினிப் பார்வை (Computer Vision) என அழைக்கிறார்கள்.
இப்படி கார் தானாக ஓடவும் கணினிக்குப் பார்வை கிடைக்கவும் நாம் முன்பு பார்த்த எந்திரக் கற்றல் துறை மிகவும் முக்கியமானது.
இன்னொரு பக்கம் ரோபோக்கள் சிறிய அளவிலான மருத்துவ அறுவைச் சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்கின்றன. இதுவும் செயற்கை நுண்ணறிவுத் துறையின் சாதனைதான்.
‘Google’ நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையுடன் சேர்ந்து ஒரு முயற்சியை மேற்கொண்டார்கள். கூகுள் நிறுவனம் உருவாக்கியுள்ள செயற்கை நுண்ணறிவு மென்பொருளுக்கு மதுரையிலிருந்து மருத்துவர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும்.
புரியும்படி சொன்னால். நீரிழிவின் (Diabetes) காரணமாக சில நோயாளிகளுக்குக் கண் பார்வை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. நீரிழிவால பாதிக்கப்பட்டோரின் கண்களை ஸ்கேன் செய்து பார்ப்பார்கள், ஒருவேளை அதில் கண் பாதிப்பிற்கான தடயங்கள் ஏதேனும் தென்பட்டால் மருத்துவர் அவர்களுக்கு கண் பார்வை சிகிச்சை கொடுப்பார். ஸ்கேன் ரிப்போர்ட்டுகளை செயற்கை நுண்ணறிவுக் கணினிகளே கணினிப் பார்வை மென்பொருள் உதவியுடன் அந்தக் குறிப்பிட்ட கண் நோய் உள்ளதா என்று கண்டுபிடித்து விட முடியுமா என கூகுள் நிறுவனம் ஒரு முயற்சியை மேற்கொண்டது. அவர்கள் உருவாக்கி இருந்த மென்பொருளுக்கு அந்த ரிப்போர்ட்டுகள் உள்ளீடாகக் கொடுக்கப்பட்டு எந்திர கற்றல் உதவியுடன் அந்த எந்திரங்களைக் கற்றுக்கொள்ள வைத்தார்கள். எந்திரங்கள் வெளியிடும் பதில்களின் சரி மற்றும் தவறுகளை கண் மருத்துவர்கள் சரி பார்த்தார்கள். இந்த முறையின் விளைவாக அந்த செயற்கை நுண்ணறிவுக் கணினி மிகத் துல்லியமாக நீரிழிவு உள்ளவர்களுக்கான கண் சிக்கல்களைக் கண்டுபிடித்து விட்டது.
கண் சம்பந்தமான பிரச்சனை மட்டுமல்ல; உலகில் பல மக்களை அச்சுறுத்தும் புற்று நோய் உண்டாவதற்குக் காரணமான அடிப்படை அறிகுறிகளைக் கொண்டு மிக ஆரம்ப காலகட்டத்திலேயே கண்டுபிடிக்கும் அளவுக்கு இன்றைய செயற்கை நுண்ணறிவுக் கணினிகளின் பயன்பாடு வளர்ந்து விட்டது.
செயற்கை நுண்ணறிவுக் கணினிகளின் உதவியுடன் மருத்துவத்துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்த முடியும். நோயாளிகளுக்கு அவர்களின் நோயிலிருந்து விடுபட உதவ முடியும். மிக முக்கியமாக மனிதனின் ஆயுள் காலத்தையே நீட்டிக்க முடியும் என்று நம்பிக்கை கொடுக்கிறது செயற்கை நுண்ணறிவு அறிவியல்.
(விரியும்)