புளிய மரத்துப் பேய்!
இப்ப நான் என்ன சொல்றது?
12 வயதிலிருந்து நான் சந்தித்த சில நிகழ்வுகள் – அதிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் – அதைப் பின்பற்றி எதையும் உண்மையா இல்லையா? என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற தணியாத ஆர்வம் உண்டாகி, அது நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருந்தது. இப்படிப்பட்ட நிகழ்வுகளில்தான் எனது சிந்தனையும் விரும்பிச் சென்றது. அதுதான் என்னை அந்த பூத கணங்களைக் காணச் செல்லும் நிலைக்குத் தள்ளியது. அதுதான் இன்னும் ஒருபடி மேலே சென்று, தனித்து ஒன்றைச் சந்திக்கத் துணியச் செய்தது!
அந்த ஒன்று என்ன தெரியுமா?
புளிய மரத்துப் பேய்!
‘குட்டிப்பேய் இல்லையென்றால், பெரிய பேயும் இல்லைதானே!’ என்ற தெளிவுக்குப் பின்னும், ஏதோவொரு பயம் மட்டும் இருந்துகொண்டே இருந்தது. அந்தப் பயத்தைத்தான் வெல்லத் துணிந்தேன்.
எப்படி?
எங்கு பேய் இருக்கிறதென்று சொல்லு கிறார்களோ, அங்கேயே சென்று பார்த்துவிட வேண்டியதுதான்!
தாஜ், அனுஷம் ஆகிய இரண்டு திரையரங்குகள் வழியே வீட்டுக்குச் செல்ல பாதைகள் இருப்பதாக ஏற்கெனவே சொன்னேன் அல்லவா? அந்த இரண்டிலுமே பாலங்கள் இல்லாத அந்த கழுத்தறுத்தான் பள்ளத்தின் வழியேதான் ஊருக்கும், வீட்டுக்கும் செல்ல வேண்டும்.
முன்னதில் ஒருங்கிணைந்த ஒரே ஓடை! பின்னதில் பழனி செல்லும் பாதையின் குறுக்கே பாலத்தின் கீழே தெற்கிலிருந்து வரும் ஓடை ஒன்று! வெட்டவெளிகளில் தொடங்கி, பரவலாகப் பொழியும் மழை நீர், தனித்தனியாகப் புறப்பட்டு, பின்னர் ஒன்றுகூடி, மேலோட்டமான சரிவுகளில் இறங்கி வரும் ஓடை மற்றொன்று! இந்த இரண்டுமே கழுத்தறுத்தான் பள்ளத்தில் வந்துதான் இணையும்! மழை பொழிந்து அரை மணி நேரத்திற்குப் பிறகுதான் இரண்டு ஓடைகளிலும் தண்ணீர் பெருகி வரும்! படிப்படியாகத் தண்ணீர் உயருவதைக் காண்பதற்குப் படபடப்பாக இருக்கும். பார்த்துக்கொண்டிருக்கும் போதே இரண்டு கரைகளையும் தொட்டபடி பேரிரைச்சலோடு ஓடும். நாங்கள் ஆ…வென்று வாயைப் பிளந்தபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போம்.
மழைவிட்டு இலேசாகத் தூரல் போட்டுக் கொண்டிருக்கும் போதே, ”டேய் டேய்” என்று அம்மா பதறிப் பதறிக் கத்த நான் வெளியில் ஓடிவிடுவேன்.
இரண்டு ஓடைகளும் ஒன்று சேரும் இடத்தில் வெள்ளம் சற்றே தேங்கி, பின்னர் மேலேறி, அப்படியே கீழிறங்கி சரேலென்று பாய்ந்து ஓடும். அதன் வேகம் நம்மையும் உள்ளே இழுத்துவிடுமோ என்று அஞ்சும் படியாக இருக்கும். இரண்டு ஓடைகளிலிருந்தும் வெள்ளம் வந்து ஒன்றாக மோதும் போது, தெறிக்கும் துளிகள் கரையோரம் நிற்பவர்கள் மீதுகூட விழுவதுண்டு. உடலும், உள்ளமும் ஒருசேரச் சிலிர்க்கும் அலாதியான அனுபவம் அது! தண்ணீரின் எழுச்சியையும், அது ஏற்படுத்தும் மிரட்சியையும் எங்களால் முழுமையாக அனுபவிக்க முடியாது. ஏனெனில் அங்கிருக்கும் பெரியவர்கள் உடனடியாக எங்களை விரட்டிவிடுவார்கள்.
இரண்டு ஓடைகள் சேரும் இடத்தில் மக்கள் நடக்கும் பாதை, யானைப்பாதை போல 200 அடிக்கும் மேலாக நீளும்! பாதையின் அகலமென்னவோ 2 அடிதான்! வெள்ளப்பெருக்கின் போது இந்தப் பாதையும் மூழ்கிவிடும். தண்ணீர் வடிந்தபிறகுதான் பயன்படுத்துவார்கள். அப்படி வரும்போதும் பாதை இளகி, ‘என்ன தம்பி வழுக்கிவிடட்டுமா?’ என்று கேட்பது போல்தான் இருக்கும்! சறுக்கினால், 15 அடிப் பள்ளத்தில் கணுக்கால் அளவு தண்ணீரில் விழுந்து முரட்டு அடி வாங்கவேண்டியதுதான்.
அங்குதான் அந்தப் புளிய மரம் இருந்தது!
அதில்தான் அந்தப் பேயும் இருந்தது!
புளியமரத்தின் வேர்கள் கீழிருந்தே வெளிப்படையாகத் தெரியும்! மரத்தின் பருமனோ நான்கு ஆள் கட்டிப்பிடிக்க வேண்டும்! அண்ணாந்து பார்த்தால் கழுத்து வலிக்கும்! ஓடையின் இரண்டு பக்கமும் தோட்டம், துரவு என்று தனித்தனி வரப்புகள், முள்வேலித் தடுப்புகள் உண்டு. இவையும், இருளுடன் இந்தப் பேயும் சேர்ந்து நடந்து செல்பவர்களின் குருத்தெலும்பில், ’ச்சிலீர்’ என்றொரு நடுக்கத்தை ஏற்படுத்திவிடும்.
அந்த மரத்தில்தான் என்றோ ஒருநாள் இரவில் ஒரு பெண் தூக்கிட்டுக்கொண்டார். இன்னொரு நாளில் பட்டப்பகலில் மரத்தின் வேரில் சாய்ந்து அமர்ந்தவாக்கில் ஓர் ஆண் இறந்துகிடந்தார்.
அந்த இருவரும்தான் பேயாக உலவுகிறார் களாம்.
இதுபோன்ற இன்னபிற காரணங்களால்தான் சிறுவர்கள் அந்தப் பாதையில் மாலை 6 மணிக்கு மேல் துணையில்லாமல் வரக்கூடாது என்ற எழுதாத சட்டம் அமலுக்கு வந்தது.
யாரும் அந்தச் சட்டத்தை மீறியதாக எனக்குத் தெரியவில்லை.
அதை நான் மீறத் துணிந்தேன்! அதுவும் தனியாக!
அதைப் பற்றித்தான் இதில் சொல்லப் போகிறேன்!
மாலை 6 மணிக்கு மேல் ஆகிவிட்டது.
அப்போதும் எனக்கு வயது 15 தான்.
நான் சுற்றும் முற்றும் பார்த்தபடியே திடமான ஒரு முடிவுடன் நடந்துகொண்டிருந்தேன். கால்களின் வேகத்தைவிட இதயம் ‘படக் படக்’ என்று வேகமாக அடித்துக்கொண்டது. பள்ளத்திற்கும் எனக்குமான தூ…ரம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துக் கொண்டே வந்தது. நெருங்க நெருங்க எனக்குள் இலேசான பதற்றமும், பீதியும் தொற்றிகொண்டது. ஆனாலும் நடப்பதை நிறுத்தவில்லை. ’என்னவானாலும் சரி, அந்தப் பள்ளத்தைக் கடந்து விடவேண்டும். எக்காரணத்தைக்கொண்டும் திரும்பி வந்துவிடக் கூடாது’ என்பதில் உறுதியாக இருந்தேன்.
இதோ! கழுத்தறுத்தாம் பள்ளம் நெருங்கி விட்டது.
இதயத்துடிப்பு தாறுமாறாக எகிறியது!
மாலை நேரக் குளிர் காற்று சில்லென்று வீசிக்கொண்டிருந்தாலும்… எனக்கு வியர்த்தது!
கால்களை வீசி நடக்க முடியவில்லை. அளந்து வைத்தேன். அன்றைக்கு என்னமோ எனக்கு முன்னும் பின்னுமாக யாருமே இல்லை!
இதோ! சரிவில் கால் வைத்துவிட்டேன்!
புளியமரத்தை மட்டும் பார்க்கவே கூடாது என்றிருந்தேன். முடியவில்லை. மெதுவாகத் திரும்பிப் பார்த்தேன். அப்….பாடி! ஒன்றும் ஆகவில்லை! முதல் பயம் விலகியது! அடுத்த நொடியே எதிரில் ஏதோ ஒன்று மின்னியபடி அருகில் வந்துகொண்டிருந்தது. திக்கென்றாகிவிட்டது. உடல் இலேசாக உதறியது. இதென்னவாக இருக்கும்? திரும்பி விடலாமா? போன்ற எண்ணங்கள் முகிழ்ப்பதற்குள் புரிந்துவிட்டது. அவை மின்மினிப்பூச்சிகள்! ச்சே! இதற்குப் போயா? என்று உடனடியாக நிம்மதி ஏற்பட்டது. இரண்டாவது பயமும் அகன்றது! ஆனால், அந்த நிம்மதி நீடிக்கவில்லை. பின்னால் ஏதோவொன்று துரத்துவது போல் இருந்தது. உடல் வெடவெடத்தது. ’இல்லையில்லை… அது காற்று, ஏதோவொன்றை உருட்டிக்கொண்டு வருகிறது’ என்ற முந்தைய அனுபவம் உடனே துணைக்கு வந்தது! அட! என்று என்னை நானே மெச்சிக்கொண்டேன். அச்சம் மெ…ல்ல விடைபெற்றுக் கொண்டிருந்தது. அடுத்து, மெலிதாக விசிலடிப்பது போலிருந்தது. இப்போது அச்சம் ஏற்படவில்லை. நிதானமாகச் சிந்தித்து அதுவும் காற்றுதான் என்பதை உறுதி செய்ய முடிந்தது.
ஒருவழியாக சரிவுப் பாதை முடிவடைந்து, கரடுமுரடான பள்ளத்தில் சுமார் 30 அடிதூரம் சென்று எதிரில் செங்குத்தாக இருந்த சரிவில் ஒரே மூச்சில் ஏறிவிட்டேன். கரையிலிருந்தே ஊர் தொடங்குகிறது!
அப்பாடா… வெற்றிகரமாகக் கடந்துவிட்டேன்.
இது எப்படி இருக்கு?
எனக்கு நானே வைத்த தேர்வில் வெற்றி பெற்றுவிட்டேன்! இதனால் பேய் பற்றி இருந்த கொஞ்ச நஞ்ச அச்சமும் அய்யமும் அகன்றுவிட்டன!
மிகுந்த உற்சாகத்துடன் திரும்பிப் பார்த்தேன். மங்கிய வெளிச்சத்தில் முழுமையாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது அடர்ந்து உயர்ந்தோங்கிய அந்தப் புளிய மரம்! பள்ளத்தில் நுழைந்து விநோதமான ஓசையுடன் எழுந்து வந்துகொண்டிருந்தது மாலை நேரக் காற்று! இன்னும் அதிகமான மின்மினிப் பூச்சிகளின் வண்ணமயமான கண் சிமிட்டல்கள்!
அடடா!… கண்ணுக்குத் தெரியாமல் எனக்குள் இறுகியிருந்த அந்த மாயக்கட்டுகள் மெதுவாகத் தளர்ந்தது போன்றதொரு பரவசமான மனக்கிளர்ச்சி ஏற்பட்டது! அதை யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியவில்லை.
அப்படிப்பட்ட சூழலில் தான், எனது வாழ்வில் “கடவுள்” குறுக்கே வந்தார்.
“வந்தாரா?”.<
அடுத்த இதழில்…