ஊருக்குப் போய் வந்த கரடி – 8
பேயா?… அப்படின்னா… என்ன?’’ சட்டெனக் கேட்டது முயல்.
“எனக்கும் தெரியலே… அதுக்கும் அங்கே இருந்த ஒரு பெரியவரே விளக்கம் சொன்னாரு. ஏ… சும்மா இருங்கப்பா… பேயி, பிசாசுன்னு பயங்காட்டிக்கிட்டு… வந்த வேலையைப் பாருங்கன்னாரு.
“ஏப்பா… பகல்லெல்லாம் ஏன் பேய் வரப்போகுது. ராத்திரியிலே இருட்டுலதான் அது அலையும்”னு இன்னொரு ஆளு சொன்னாரு…
“ஆக… பேயி.. பிசாசு எல்லாம் பயங்காட்டுறதுக் காகச் சொல்றதுன்னு சொல்லு” என்றது கரடி. “நாம காட்டுல பல ராத்திரிகளைப் பார்த்திருக்கோம். இங்கே ராத்திரி நேரத்திலே நான்தான் அலையிறேன்…” என்றது ஆந்தை.
“உண்மைதான் நான் ராத்திரி முழுக்க அந்தச் சுடுகாட்டுலதானே இருந்தேன். அங்கே ஒண்ணும் வரலியே… சுடுகாட்டுலேயே வராத பேயி… இந்த நடுக் காட்டுலே ஏன் வரப்போகுது? இது மனிதர்களா கற்பனை செய்து வச்சுக்கிட்டு பயந்துக்கிறது… இல்லேன்னா அடுத்தவனைப் பயங்காட்டுறதுன்னு புரியுது.”
“பேய்க் கதையை விடு… அப்பறம் உனக்கு என்ன ஆச்சு?” ஆவலாய்க் கேட்டது நரி. “மனிதர்கள் ஒரு சிலர் என்னைப் பார்த்ததுமே அடுத்த அடுத்த மரத்துக்குத் தாவி அங்கிருந்து தப்பிச்சுப் போயிட்டேன்.”
“எங்கே போனே?” -_ பறக்கும் அணில் கேட்டது.
“கொஞ்ச தூரத்துலெ ஒரு மருத்துவமனை இருந்துச்சு. அதுக்குள்ள ஓடிட்டேன்.” “மருத்துவமனைன்னா… என்னது கரடி?” என்று யானைக்குட்டி பரிதாபமாகக் கேட்டது.
“மனிதர்கள் உடம்புக்குச் சரியில்லேன்னு அங்கே வர்றாங்க. அங்கே தங்க வச்சு குணப்படுத்தி அனுப்புறாங்க. அதுக்கு மருந்து மாத்திரை, ஊசி, அது இதுன்னு நிறையத் தர்றாங்க. அதுக்கும் பணம்தான் தேவை.”
“அய்யய்யோ! எல்லாமே பணந்தான் போலிருக்கே! ஆனா… நம்ம காட்டுல அப்படியெல்லாம் எதுவுமே இல்லியே நமக்கு?” என்று வியப்போடு கூறியது காட்டுப்பன்றி.
“நமக்கெதுக்கு அதெல்லாம்…? நான் சாப்பிடுற பழம் காயெல்லாம் நரி சாப்பிடுறதில்லே. நரி சாப்பிடுறதை நான் சாப்பிடுறதில்லே… இப்படி ஒவ்வொருத்தரும் வேற வேற உணவு. இதைத்தான் சாப்பிடணும். இதைச் சாப்பிடக்கூடாதுன்னு யாரையும் யாரும் கட்டாயப்படுத்துறதில்லை.
அதோட நாளைக்கு வேணும்னு ஆசை ஆசையா எதையும் பதுக்குறதும் இல்லே… அதனாலே நமக்குக் கவலையே இல்லை. அப்படி இருக்கும்போது நமக்கு மருத்துவமனை தேவையே இல்லை” என்றது குரங்கு.
“அதோட நாம உண்ணுற உணவே மருந்து… மருந்தே உணவுன்னு இயற்கையில கிடைக்கிறதை மட்டுமே சாப்பிடுறோம். ஆனா மனிதர்கள் கிடைக்கிற உணவை வறுத்து பொரிச்சு என்னென்னவோ செய்து சாப்பிடுறதுனால மருத்துவமனை அவங்களுக்குத்தான் தேவை” என்றது கரடி.
“மனிதனுக்கு மருத்துவமனை தேவைன்னு புரியுது. நீ போனதுனால அங்கே என்ன ஆச்சு?” ஆர்வமாய்க் கேட்டது பறக்கும் அணில்.
“மருத்துவமனைக்குள்ள நிறைய பேரு படுக்கையிலே படுத்துக் கிடந்தாங்க. நான் உள்ளே போனதும் பயந்து போயி ஆளுக்கு ஒரு பக்கமா ஓட ஆரம்பிச்சுட்டாங்க. அட நம்மலாலே நோயாளிக்கு எதுக்கு சிரமம்னு நினைச்சு… அங்கிருந்து வேகவேகமா ஓடி பக்கத்துல இருந்த பெரிய கட்டடத்துக்குள்ள போயிட்டேன். அது ஒரு பணக்காரனோட வீடு.”
“வீடா? அப்படின்னா!?” என்றது ஆந்தை.
மரப்பொந்துல நீ வசிக்கிற மாதிரி மனிதர்களுக்கானது. உனக்குப் புரியறமாதிரியே சொல்றேன். பறவைங்க கட்டுனா அது கூடு… மனிதர்கள் கட்டுனா அது வீடு. அதுலதான் மனிதர்கள் குடும்பமா வாழுறாங்க. வசிக்கிறாங்க. அந்த வீட்டுக்குள்ள ஓடிப்போயிட்டேன். கொஞ்சநேரம் சுத்திச் சுத்தி… கடைசியில மாடிமேலே போயிட்டேன். மாடின்னா என்னன்னு கேட்டுறாதீங்க… அது உயரமான கட்டடத்தின் மேல் பகுதி. ‘கரடி மாடிமேலே போயிடுச்சு. தயவு செய்து யாரும் மாடிக்குப் போயிடாதீங்க’ன்னு… அவங்க சத்தமா பேசிக்கிட்டதுனாலே அது மாடின்னு எனக்குத் தெரிஞ்சுது. நான் மறுபடி கீழே இறங்கி வரக்கூடாதுன்னு மாடிக்குப் போற வர்ற வழியெல்லாம் மூடிட்டாங்க.
நான் மாடியிலே மாட்டிக்கிட்டேன். எனக்கு ரொம்ப பயமாய்ப் போச்சு. ஒரு அறைக்குள்ள ஒரு பெட்டி மாதிரி ஒண்ணு இருந்துது. அதுலயிருந்த ஒரு அம்மா பேசுது, திடீர்திடீர்னு சிலபேரு ஆடுறாங்க, பாடுறாங்க. என்னென்னமோ நடக்குது அதை பாக்கவே ஆச்சரியமா இருந்துது. ஆனா, அவங்களால எனக்கு எந்த ஆபத்தும் இல்லே. அதுல இருந்த யாரும் என்னைக் கண்டுக்கவும் இல்லை. கவலைப்படவுமில்லே. யாரைப் பத்தியும் கவலைப்படாம ஆடிப்பாடி பேசிக்கிட்டிருந்தாங்க. அவங்க உண்மையான மனிதர்கள் இல்லே.
அவங்க படத்திலே வர்ற மனிதர்கள். அவங்களைப் பார்க்கும்போது மனிதர்கள் எல்லாருமே இப்படித்தான் இருப்பாங்களோன்னு சந்தேகம் வந்தது.
என்னாலே மேலே இருந்து சன்னல் வழியா கீழே பாக்க முடிஞ்சுது. கீழே இருந்த ஒருத்தர் காதுல எதோ ஒரு கருவிய வச்சுக்கிட்டு வள வளன்னு… பதட்டத்தோட பேசிக்கிட்டிருந்தாரு. அவரைச் சுத்தி இருந்த சிலபேரு அவரு வாயையே பார்த்துக்கிட்டிருந்தாங்க.
நானும் அவரையே பார்த்தேன். “வனத்துறை ஆளுங்க நாலு பேரை அனுப்பி அந்தக் கரடி¬6யச் சுட்டுத்தள்ளுங்க… இல்லே எதாவது செய்து வீட்டுக்குள்ள இருக்கும்போதே புடிக்கச் சொல்லுங்க. அந்தக் கரடி தப்பித் தவறி வீட்டுக்குப் பின்னாடி இருக்கிற பொம்மைக் கம்பெனிக்குள்ள போயிடப்போகுது. அங்கே போனா கரடி மாட்டுதோ இல்லியோ… நாம எல்லாரும் மாட்டிக்குவோம். சீக்கிரம் எதாவது ஏற்பாடு செய்யுங்க” என்று வேறு யாருக்கிட்டேயோ சொன்னாரு.
(பயணம் தொடரும்)