மே 1 – உழைப்பாளர் நாள்: உழைப்பே உயர்வு!
அடுக்க ளைக்குள் உழைக்கின்ற
பெற்றோ ரால்உன் பசியாறும்;
கடுமை யாக உழைத்துன்னைக்
காப்பாற் றிடுவர் பெற்றோரே!
அறிவை உனக்கே ஊட்டுதற்காய்
ஆசா னும்தான் உழைத்திடுவார்;
கறிகாய் அரிசி நீ உண்ண
கழனி உழவர் உழைத்திடுவர்;
இரவும் பகலும் பாராமல்
எறும்பும் இங்கே உழைப்பதைப்பார்;
திரளாய் உணவைச் சேமிக்க
திட்டமிட்டே உழைப்பதைப் பார்;
பூப்பூ வாக அலைந்தபடி
பொட்டுப் பொட்டாய் நறுந்தேனைக்
காப்போ டிங்கே சேமிக்கும்
கடின உழைப்பின் தேனீ பார்;
அனைத்து உயிர்கள் உழைப்பதனால்
அகிலம் இங்கே சுழல்கிறது;
நினைத் தவாறு நீ உயர
நித்தம் உழைத்தல் உன் கடமை;
உழைப்புக் கான மரியாதை
உலகில் என்றும் உயர்வாகும்;
உழைப்போ ருக்கே வெற்றியெலாம்;
உண்மை இதனை உணர்ந்திடுக!
– கே.பி.பத்மநாபன்,
சிங்காநல்லூர்.