அச்சச்சோ…! அமேசான் அனகோண்டா!
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். நம் அனைவருக்கும் பாம்பு என்றால் ஒரு வித பயம் கண்டிப்பாக உள்ளுக்குள் ஏற்படும். இருந்தாலும் தண்ணீர் பாம்பு, நல்ல பாம்பு, கட்டுவிரியன் போன்ற சில பாம்புகளைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். சில பேர் பார்த்திருப்போம்.
அனகோண்டா பாம்பை அனைவரும் படத்தில் பார்த்திருப்போம், கேள்விப்பட்டிருப்போம், ஆனால், நேரில் பார்த்திருக்க மாட்டோம். அதேபோல பெரும் காடுகள் என்றாலே நம் நினைவுக்கு வருவது அமேசான் காடுதான். அந்தக் காட்டில் பாம்பு இனங்கள் பல வாழ்ந்தாலும் அனகோண்டா பாம்புதான் உலகிலேயே அதிகமான எடை கொண்டது. நாம் அனகோண்டா பாம்பைப் பற்றி இப்போது நாம் பார்க்கப் போகிறோம்.
உலகிலேயே மிக நீளமான அனகோண்டா பாம்பு பிரேசிலில் உள்ள அமேசான் காட்டில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய அந்த அனகோண்டா பாம்பு அண்மையில் உயிர் இழந்தது. அமேசான் காட்டில் வாழ்ந்து வந்த இந்த அனகோண்டா பாம்பை பிரயன் ப்ரை என்பவருடைய அறிவியல் ஆராய்ச்சிக் குழு அண்மையில் கண்டுபிடித்தது. இந்தப் பாம்பு பற்றிய ஆவணப்படம் ஹாட்ஸ்டார் தொலைகாட்சியில் வெளியானது. இந்த நிலையில் மர்ம நபர்களால் அந்தப் பாம்பு சுட்டுக் கொல்லப்பட்டதாக அங்கு வாழும் பழங்குடியினர் சிலர் சந்தேகம்
தெரிவித்துள்ளனர். அனா ஜூலியா என்று பெயரிடப்பட்ட 26 அடி நீளமும், 200 கிலோ எடையும் கொண்ட பச்சை அனகோண்டா தான் அண்மையில் இறந்த பாம்பாகும்.
அனகோண்டா பாம்பு தென் அமெரிக்காவிலே நீர்நிலைகளிலும், சதுப்பு நிலங்களிலும் வாழும் மிகப்பெரிய பாம்பினங்களில் ஒன்று. இது பெரும்பாலும் தென் அமெரிக்காவின் வட பகுதி நாடுகளிலேயே காணப்படுகின்றது (பெரு, கொலம்பியா, பொலிவியா, பிரேசில், வெனிசுலா). இப்பாம்பைப் பற்றி விளக்கமான அறிவு 1992 ஆம் ஆண்டு வரை ஏதும் அதிகமாய் இல்லை.
நன்றாக வளர்ந்த முழுப்பாம்பு சுமார் 8-10 மீ நீளம் இருக்கும் (20-30 அடி), எடையில் 100-200 கிலோ இருக்கும். 30 செ.மீ தடிமன் இருக்கும். உலகிலேயே அதிகமான எடை கொண்டதும் இப்பாம்புதான் (250 கிலோ இருந்ததாக கண்டு இருக்கின்றனர்). இது பெரும்பாலும் எலி, ஆடு, மான், தேப்பிர் என்னும் விலங்கு, சிறு கைமன் என்னும் முதலைகள் மற்றும் பறவைகள் முதலியவற்றைச் சுற்றி வளைத்து, நொறுக்கிக் கொன்று, விழுங்கும். போவா, மலைப்பாம்பு போன்றே இதுவும் இரையை விழுங்குகின்றது. ஆனால், நீர்நிலைக்கு இழுத்துச்சென்று நீரில் மூழ்கடித்துக் கொல்லும் என்கிறார்கள். மாட்டிக்கொண்டால் சிறுத்தைப் புலியைக்கூட விழுங்கிவிடும்.
அனகோண்டா வகையில் பச்சை நிறம் கொண்டது, மஞ்சள் நிறம் கொண்டது, (மஞ்சளும் கருப்பும் கொண்டது) பொலிவியாவில் 2002 ஆம் ஆண்டில் லுட்ஸ் டிர்க்ஸன் (Lutz Dirksen) கண்டுபிடித்த பொலிவிய அனகோண்டா, பிரேசிலில் வடகிழக்கே காணப்படும் கருப்புத் திட்டுகள் கொண்ட வகை என சில அடையாளம் காணப்பட்டுள்ளன.
பாம்பு இனங்கள் அவற்றின் தோலுக்காகவும் இறைச்சிக்காகவும் வேட்டையாடப்படுவதால் அவை அழிந்து போவதுமல்லாமல் இயற்கை உயிரினச் சமநிலையும் பாதிக்கப்படும் அல்லவா? எனவே, பாம்புகளைக் கொல்லாமல் உயிர் சமநிலையைக் காப்போம்.