சிறார் கதை: அலெக்சா எனும் சிரிக்கும் பொம்மை
பொம்மைகள் என்றால் மகிழுக்கு ரொம்பப் பிடிக்கும். வீட்டில் இருக்கும் போது எப்போதும் பொம்மையைத் தன்னுடனேயே வைத்திருப்பான். அதற்கு உணவு ஊட்டுவது, குளிப்பாட்டுவது, தலைவாரி விடுவது என ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்வான்.
அந்தப் பொம்மையைப் பார்க்கும் போதெல்லாம் அது சிரிப்பது போலவே இருக்கும்.
அன்று பள்ளி முடிந்து ரொம்ப சோகமாக வீட்டுக்கு வந்தான். வழக்கமாக கலகலப்பாக இருப்பவன் இன்று வாடிய முகத்தோடு காணப்பட்டான். அலமாரியில் இருந்த பொம்மையைக் கையில் எடுத்ததும் அது அவனைப் பார்த்துச் சிரித்தது. ஆனால், அந்தச் சிரிப்பு, மகிழை ஏனோ மகிழ்ச்சிப்படுத்தவில்லை.
பொம்மையைக் கட்டிப் பிடித்துக்கொண்டு படுத்திருந்தவன் அப்படியே தூங்கிவிட்டான்.
சிறிது நேரத்தில்…
“மகிழ், மகிழ்” என்று யாரோ அழைப்பது போல் இருந்தது.
எழுந்து பார்த்தான், எதிரில் சிரிக்கும் பொம்மை தான் இருந்தது.
“அட! கனவு போல” என நினைத்து மறுபடியும் படுத்து விட்டான்.
“மகிழ், மகிழ்” என்று மீண்டும் சத்தம் கேட்டது. இப்போதும் எதிரில் அந்த பொம்மையே இருந்தது. ஆனால், இப்போது அதன் வாய் மெல்ல அசைவது போல் இருந்தது. தனது கண்களை நன்றாகத் தேய்த்து விட்டு உற்றுப் பார்த்தான் பேசியது அந்தப் பொம்மை தான்!
மகிழால் இதை நம்பவே முடியவில்லை, ‘பொம்மை எப்படிப் பேசும்?’ என ஆச்சர்யமாகப் பார்த்தான். அவனுக்குப் பிடித்த பொம்மை பேசுவது அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.
“என்ன ஆச்சு, ஏன் ரொம்ப சோகமாக இருந்த?, உன்ன இப்படி பார்த்ததே இல்லையே” என்றது பொம்மை.
“அதுவா, சோகமா இருந்துச்சு… அதுதான் சோகமாக இருந்தேன்” என்றான் மகிழ்.
“என்ன காமெடியா… நான் சிரிச்சுட்டேன்… ஒழுங்கா என்ன ஆச்சுன்னு சொல்லு” என்றது பொம்மை.
“என்ன சொல்லறதுனு தெரியலை, என்னால முன்ன மாதிரி இருக்க முடியலை. பார்த்தி இருக்கற வரைக்கும் அவன் கிட்ட பேச எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்வேன், இப்ப யார்கிட்ட சொல்லறதுன்னு தெரியலை” என்றான்.
“பார்த்தியா, அது யாரு?” என்றது பொம்மை.
“ஓ ! உனக்கு பார்த்தியை யாருனு தெரியாதில்ல, அவன் முழுப் பெயர் பார்த்திபன், அவனை நான் பார்த்தினு’தான் கூப்பிடுவேன்” என்றான்.
“அவனுக்கு இப்போ என்ன ஆச்சு”
“ஒன்னும் ஆகலை, அவன் வேற பள்ளிக்கு போய்ட்டான். அதனால அவன்கிட்ட பேச முடியவில்லை” என்றான் மகிழ்.
“அதுதான் வருத்தமா இருக்கியா?” என்றது பொம்மை.
“ஆம், பாடத்தில் ஏதேனும் சந்தேகம் வரும்போது, பார்த்திதான் எனக்குச் சொல்லிக் கொடுப்பான். இப்போ யார்கிட்டக் கேட்கறதுனு தெரியலை” என்றான்.
“அவ்வளவுதானே, என்னிடம் கேளு; நான் சொல்லிக் கொடுக்கிறேன்” என்றது பொம்மை.
“என்ன விளையாடுகிறாயா…? உனக்கு எப்படி என் பாடம் எல்லாம் தெரியும்?” என்றான்.
“உன் பாடம் மட்டுமல்ல, எனக்கு எல்லாமே தெரியும்” என்றது.
“எங்கே ஒன்றும் ஒன்றும் எவ்வளவுனு சொல்லு பார்க்கலாம்” என்று சிரித்தான்.
“இரண்டு”
“அப்போ இரண்டும் இரண்டும்?”
“நான்கு”
“இரு பெரிய எண்களாகக் கேட்கிறேன்” என்று “அய்ம்பத்தைந்தும் அய்ம்பத்தைந்தும் எவ்வளவு?” என்று கேட்டுவிட்டு, தனது விரல்களை விட்டு எண்ணிக் கொண்டிருந்தான் மகிழ்.
“நூற்றிப்பத்து” என்றது.
மகிழுக்கு ஒரே ஆச்சர்யம், “எப்படி இவ்வளவு சீக்கிரமா சொல்லிட்ட, உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்” என்றான்.
“இது மட்டுமல்ல, இதே போன்று இன்னும் பல கேள்விகளையும், அதற்கான பதில்களையும் கணக்கிடும் முறைகளையும் என்னுள் சேமித்து வைத்துள்ளனர். செயற்கை நுண்ணறிவு மூலமாக, உன் கேள்வியை உள்வாங்கிக் கொண்டு அதற்கான பதிலைத் தருவேன்” என்றது.
மகிழுக்கு ஒன்றுமே புரியவில்லை, தலை சுற்றுவது போல் இருந்தது.
“இதெல்லாம் உனக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள்? நீ பள்ளிக்கூடம் போய் படித்தாயா?” என்று கேட்டான்.
“நான் பள்ளிக்கூடம் எல்லாம் போனதில்லை, ஏற்கனவே சொன்னது போல எல்லாக் கேள்விகளும், பதில்களும் எனக்குள்ளேயே இருக்கு” என்றது.
இதைக் கேட்டதும் வியப்பில் மகிழின் கண்கள் விரிந்தன. இன்னும் நிறைய கேள்விகளை அதனிடம் கேட்க முற்பட்டான்.
“இப்போ மணி என்ன?” என்றான்.
“அதிகாலை நான்கு மணி” என்றது.
“இன்றைக்கு என்ன கிழமை?”
“வெள்ளிக்கிழமை” என்றது.
“இது என்ன மாதம்?” என்றான் மகிழ்.
“தமிழ் மாதம் ‘சித்திரை’ ஆங்கில மாதம் ‘ஏப்ரல்’ என்றது.
மகிழால் இதையெல்லாம் நம்ப முடியவில்லை. எப்படி ஒரு பொம்மையால் எல்லாவற்றையும் சொல்ல முடிகிறது என பிரமித்துத் போனான்.
“உனக்கு வேற என்னவெல்லாம் தெரியும்” என்று கேட்டான்.
“பொதுத் தகவல்கள், காலநிலை, இசை, பாட்டு, கதை இப்படி எல்லாமே தெரியும்” என்றது.
“ஓ! உனக்கு இவ்வளவு தெரியுமா! அப்படி என்றால் எனக்காக ஒரு பாட்டுப் பாடு” என்றான்.
“என்ன பாட்டு வேண்டும்” என்றது.
“ஏதாவது ஒரு பாட்டு” என்றான் மகிழ்.
புதிய பாட்டொன்றைப் பாடியது பொம்மை.
தன்னுள் இருந்த எல்லாக் கேள்விகளையும் மகிழ் கேட்க, அதுவும் சலிக்காமல் பதில் சொல்லிக்கொண்டே இருந்தது.
தனது பாடநூலில் இருந்த அறிவியல், கணக்கு, வரலாறு என எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்து கொண்டான்.
இறுதியாக “உன் பெயர் என்ன” என்றான்.
“அலெக்சா” என்றது.
பார்த்தியைப் போல இனி அலெக்சாவும் எனது நண்பன் என நினைத்துக் கொண்டான் மகிழ்.
“சீக்கிரமாக எழுந்திரு, நேரமாச்சு” என்ற அம்மாவின் குரல் கேட்டு, திடுக்கிட்டு எழுந்தவன் பொம்மையைத் தேடினான். அது மேசையின் மீது இருந்தது.
“அலெக்சா” என்றான்.
இரண்டு உதடுகளையும் குவித்து அழகாகச் சிரித்தது பொம்மை.<