சிறுவர் கதைப் பாடல்
மண்ணில் பானை செய்யும் – ஒரு
மனிதர் மகனை நோக்கி,
“சின்னா இங்கே வருவாய் – நான்
செய்யும் தொழிலைப் பழகுவாய்;
வாழ இதுவே வழியாம் – இதுநம்
வழிவழிக் குலத்தொழில் ஆகும்!
பாழாய்ப் போய்வி டாதே – நீயும்
பழகிக் கொள்வதே பெருமை!”
சொன்னார் கனிவாய்த் தந்தை – சின்னான்
எடுத்த எடுப்பி லேயே
“மண்ணே கதியாய்க் கிடக்கும் – உங்கள்
வழிக்கு நான்வர மாட்டேன்!
கட்டணம் எதுவும் இன்றி – அரசு
கட்டிய பள்ளியில் பயில்கிறேன்
குட்டிக் கரணம் போட்டேனும் – நான்
பட்டம் பெற்றுக் காட்டுவேன்!”
சின்னான் சொன்னான். உடனே – தந்தை,
“என்னடா உளறு கின்றாய்;
ஒன்றா பற்பல ஆயிரம் – பெரும்பணம்
உன்னால் தேட முடியுமா?”
“அரசு நடத்தும் பள்ளியில் – அப்பா
அனைத்தும் இலவசம் தானே!
கருத்தைச் செலுத்திப் பயில்வேன் – பின்னால்
காண்போர் வியக்க உயர்வேன்!
கனவு காண்பது போல – எல்லாம்
கையில் வந்து கொட்டும் – என,
நினைத்துக் கெட்டுப் போகாதே – பலமுறை
நினைத்துப் பார்த்துத் திருந்துவாய்!”
தந்தை இப்படிக் கூறினார் – சின்னான்
தலையை நிமிர்த்தித் தந்தைமுன்
“இந்தக் காலம் வேறாம் – அப்பா
எங்கும் உரிமை முழக்கமாம்!
தாழ்வு மனம்இனி வேண்டா – பலப்பல
தலைமுறை அடிமை ஒடுங்க,
வாழ முயலும் காலம் – நாமும்
வாழ்ந்து காட்ட வேண்டும்!
நமது வீடு குடிசைதான் – கல்வி
நலத்தைப் பெற்று விட்டால்
சமமெனப் பலரும் மதிப்பர் – புதிய
தலைமுறை யாய்நாம் நிமிர்வோம்!
ஏழை என்றால் கல்வி – ஒதுங்கி
எங்கும் போய்வி டாது;
தோளை உயர்த்தி நின்றால் – எல்லாம்
தொடரும் நமது பின்னே!
தாங்கள் செய்வதும் தொழிலே – அதிலே
தாழ்வு சிறிதும் இல்லை!
தாங்கள் மெல்ல நகர்ந்து – வேறு
நாட்டம் கொள்ளத் தடைஏன்?
அப்பா விழிப்புக் கொள்வீர் – யாரும்
அடிமை இல்லை உலகில்
எப்படி யேனும் உயர்வேன் – என்னை
இனிதே வாழ்த்து வீரே!
சின்னான் என்னும் பெயரையும் – சிலபேர்
சிறுமைப் படுத்து கின்றார்;
‘மன்னன்’ எனமாற்றிக் கொள்வேன் – அப்பா
மானம் காத்து வாழ்வோம்!”
சின்னான் திறந்தான் சிந்தை – தந்தை
ஏறிட்டு அவனைப் பார்த்தே
“இன்றுதான் உண்மை புரிந்தது – மகனே
எண்ணம் போல்படி!” என்றார்!!