நூல் அறிமுகம் : ‘சாந்த நாயகம் ஆணா? பெண்ணா?’
# உலக புத்தக நாள் – ஏப்ரல் 23 | # உலக சிறார் புத்தக நாள் – ஏபரல் 2
நூல் பெயர்:
‘சாந்த நாயகம் ஆணா?
பெண்ணா?’
விலை: ரூ. 50
பதிப்பாளர்: கவின்
கிடைக்குமிடம்:
இடையன் இடைச்சி நூலகம்
தொடர்புக்கு: 9841208152
Online book store:
www.tamilhaiku.com
“நீ பொண்ணு!
இப்படித்தான் முடி வளர்க்கணும்…
இப்படித்தான் நீ டிரஸ் போடணும்…
இப்படித்தான் இருக்கணும்…”
“நீ ஆண் பிள்ளை!
இப்படித்தான் நீ டிரெஸ் போடணும்…
நீ ஆம்பள சிங்கம், அழக்கூடாது…
இப்படித்தான் இருக்கணும்…”
இப்படியெல்லாம் உங்களிடம் சொல்கிறார்களா?
“ஏன் இப்படி ஆண், பெண் எனப் பிரிக்கிறாங்க?”
“இது சரியா?”
“இது நியாயமா?” என்ற கேள்விகள் உங்களுக்குத் தோன்றி இருக்கிறதா? எனக்கும் இந்தக் கேள்விகள் தோன்றியிருக்கின்றன. பலருக்கும் இந்தக் கேள்விகள் தோன்றலாம்.
“சாந்தநாயகம் ஆணா? பெண்ணா?” என்னும் இந்தக் கதைப் புத்தகம் அந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் என நம்புகிறேன்’ என்று இந்தக் கதைப் புத்தகத்தை வாசிக்கும் சிறார்களுக்குச் சொல்கிறார் நூலாசிரியர் அன்புத் தோழர் நர்மதா தேவி (Narmadha Devi).
குழந்தைப் பருவம் முதலே பாலினச் சமத்துவத்தைக் கற்றுக் கொடுப்பது அவசியம். ஆனால், சிறார்களுக்கு அவற்றைப் புரிய வைப்பது சவாலான பணி. அவர்களுக்கு நெருக்கமான சூழல்கள், கதாபாத்திரங்கள், மூலம் இணக்கமான மொழியில் கதைகளாகச் சொல்லி உணரவைக்கலாம்.
இதனை அழகாகச் செய்கிறது “சாந்தநாயகம் ஆணா? பெண்ணா?” கதைப் புத்தகம். ‘கசின் பர்ட்’ (Cousin Bert) என்ற பிரெஞ்சு குறும்படத்தை தமிழ்நாட்டுச் சூழலுக்குப் பொருத்தமாக, சிறார் படக்கதை நூல் வடிவத்திற்கு ஏற்பத் தழுவி வெளிவந்துள்ளது இந்நூல். ஓவியர் ஜீவானந்தம் அவர்களின் அழகான ஓவியங்களில், தோழர் நர்மதாவின் எழுத்தில் உருவான ஒரு பன்றிக் குடும்பத்தின் கதை, இந்தக் குட்டிப் புத்தகத்தில் வண்ணமயமாக விரிகிறது. குழந்தைகளுக்குப் புரியும் வண்ணம் பாலினச் சமத்துவத்தை எளிமையாக, சுவாரசியமாக விளக்குகிறது. நூல் வடிவமைப்பும், உருவாக்கமும் அருமை!
‘சாந்தநாயகம் ஆணா? பெண்ணா?’ கதைப் புத்தகத்தை, உங்க வீட்டுக் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, நீங்க சந்திக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் பரிசளித்து பாலின சமத்துவத்தை அறிமுகப்படுத்தலாம் தோழர்களே!