இப்ப நான் என்ன சொல்றது? எனது வாழ்க்கையின் குறுக்கே வந்த கடவுள்?
பள்ளிக்கூடம் செல்லும் வயதில் நம்மையும் ஒரு பொருட்டாக மதிக்கின்ற பெரியவர்கள் மீது மதிப்பும், மரியாதையும் தானாகவே நமக்கும் ஏற்பட்டுவிடும். அதன்பிறகு, அவர்களது சொல்லுக்குக் கூடுதல் பலம் உண்டாகிவிடும். சில நேரங்களில் நமது வாழ்க்கையின் போக்கையேகூட அது திருப்பி விட்டுவிடக்கூடும்.
அப்படித்தான் எனக்கும்! ஒரேயொரு வாக்கியம் எனது வாழ்க்கையின் திசையையே திருப்பிவிட்டுவிட்டது.
அப்போது எனக்கு வயது 15.
அந்த வயதில், என்னை மதித்தவர், எனது பத்தாம் வகுப்பு ஆசிரியர்!
அவரது பெயர் மாணிக்கம்! ஆங்கில ஆசிரியர்!
நான் சுமாராகப் படிக்கும் மாணவன் தான். ஆங்கிலம் மட்டும் கொஞ்சம் தகராறு. ஆனாலும், எப்படியோ தேர்ச்சி பெற்றுவிடுவேன். காரணம், ஆங்கில ஆசிரியர் மாணிக்கம்தான்! சளைக்காமல் சொல்லிக் கொடுத்தார்.
அவர்தான் என் அண்ணனுக்கும் ஆசிரியராக இருந்தவர்! அப்போது எனது அண்ணன் 12ஆம் வகுப்பிற்குச் சென்றுவிட்டார். எங்களுக்குள் இருந்த உருவ ஒற்றுமையே ஆசிரியருக்கு நீண்ட நாள் பழகியது போன்ற வாய்ப்பைக் கொடுத்துவிட்டது. இப்படித்தான் தொடங்கியது எனக்கும், அவருக்குமான உறவு. அவர் கொடுத்த மதிப்பை வட்டியும், முதலுமாக நடத்தையிலும், படிப்பிலுமாக நான் திருப்பிக் கொடுத்தேன்.
என் உயரம் குறைவு. ஆகவே எல்லா வகுப்புகளிலும் முதல் வரிசையில் அமர்வது போலவே பத்தாம் வகுப்பிலும் அமர்ந்திருந்தேன். ஆசிரியர் அவரது இருக்கையிலிருந்து கீழே இறங்கினால் முதல் வரிசையிலிருக்கும் எங்களைத் தான் முதலில் எதிர்கொள்ள வேண்டும். அதனாலேயே வீட்டுப் பாடங்களை முடிந்தவரை சரியாகச் செய்துவிட முயல்வேன்.
ஒரு நாள்…
அன்றைக்குத் தமிழாசிரியர் வரவில்லை.
அதனால் முதல் வகுப்பிற்கு ஆங்கில ஆசிரியர் மாணிக்கம் வந்துவிட்டார். வகுப்பில் இலேசான சலசலப்பு! வருகைப் பதிவு தொடங்கியது. இயல்பாகவே அவர் நகைச்சுவை உணர்வு மிக்கவர். ஒவ்வொரு மாணவர் பெயரைப் படிக்கும் போதும், அந்த மாணவர் குறித்து ஏதாவது ஒன்றை சிரிக்கும்படியாகச் சொல்லிக் கொண்டே அடுத்தடுத்த பெயர்களைப் படித்தார்.
மாணவர்களுக்கும், நம்மைப் பற்றி என்ன சொல்லப்போகிறாரோ என்று ஆவலும், உற்சாகமும் ஒருங்கே சேர, வைத்த கண் வாங்காமல் ஆசிரியரையே கவனித்துக் கொண்டிருந்தனர்.
நானும் தான்!
எனது பெயரின் ஆங்கில முதலெழுத்து ‘க்ஷி’ என்பதால் பெரும்பாலும் கடைசியாகத்தான் வரும்!
வந்தது!
ஆசிரியர், எனது பெயரைச் சொன்னார்.
ஆங்கில வகுப்பு என்பதால் “எஸ் சார்” என்றேன்.
அடுத்து என்ன சொல்லப் போகிறாரோ என்று காதுகளைத் தீட்டியபடி காத்திருந்தேன். எதுவும் சொல்லவில்லை? ஏன்? என்ற கேள்வி ஒருபக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் ‘அப்பாடா?’… என்று நிம்மதியாக இருந்தது.
அந்த நிம்மதி நீடிக்கவில்லை.
“நெற்றியில் திருநீறு வச்சவங்களை நம்பவே கூடாது” என்று குறுகுறுப்பாக கடைக்கண்களால் என்னைப் பார்த்தபடியே சொல்லிவிட்டு, அடுத்த பெயருக்குச் சென்றுவிட்டார்.
முதலில் யாருக்கும், எதுவும் பிடிபடவில்லை. பிறகு, எனது நெற்றியையும், திருநீற்றையும் பார்த்தபடியே மாணவர்கள் தங்களுக்குள் கமுக்கமாகச் சிரித்துக் கொண்டனர். நடப்பது என்னவென்றே எனக்கு உண்மையாகவே புரியவில்லை.
நான் நல்…ல கருப்பு நிறம். பள்ளிக்கு என்னைத் தயார் படுத்துவதில் எனது அம்மா பெரிதாக மெனக்கெட மாட்டார். காரணம் நாந்தான் 10 ஆம் வகுப்பு வந்துவிட்டேனே! சீருடையை நானே அணிந்துகொள்வேன். தலைக்கு எண்ணெய் வைத்து நானே தலைவாரிக் கொள்வேன். 9 ஆம் வகுப்பு வரை இவற்றையும் அம்மாதான் செய்துவந்தார். 10 ஆம் வகுப்புக்கு வந்தபிறகு, அம்மாவின் பங்கு என்னவென்றால்… நான் தயாரானபிறகு, தனது உள்ளங்கையில் கொஞ்சம் தண்ணீர் விட்டு, அதில் சிறிது திருநீற்றைப் போட்டு நன்றாகக் குழைத்து, சுட்டுவிரலில் தொட்டெடுத்து, ஆசையுடன் நெற்றியின் மய்யத்தில் ஒரு சிறு கோடு போல் தீட்டிவிடுவார் அவ்வளவுதான்!.
அதனால் ‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்பது போல் நான் தெரிவதற்குள், என் நெற்றியில் உள்ள ’திருநீறு’ பளிச்சென்று தெரிந்துவிடும்.
“நெற்றியில் திருநீறு வச்சவங்களை நம்பவே கூடாது”
இந்தச் சொற்றொடர் எனது செவிப்பறைகளில் மோதிக் கொண்டே… இருந்தது.
ஏன் அப்படிச் சொன்னார்?
இப்படிப்பட்ட குழப்பத்துடனேயே அன்றைய பொழுது முடிந்தது.
கடைசி வகுப்பு முடிந்து மணி அடித்தவுடன், முதல் ஆளாக வகுப்பை விட்டு வெளியேறி, முகத்தை நன்றாகக் கழுவிக் கொண்டேன்.
சில மாணவர்கள் அதற்கும் சிரித்தனர். அப்போது எதுவும் தெரியவில்லை. இப்போது, அவமானமாக இருந்தது. விட்டால் அழுகையே வந்துவிடும் போலிருந்தது.
ஏன் அம்மாவும், அப்பாவும் கூட இப்படித்தான் திருநீற்றைப் பூசிக் கொண்டிருக்கிறார்கள்? ஊரில் பலபேரும் இப்படித்தான் இருக்கிறார்கள். இன்னும் சிலர் குங்குமம் கூட வைத்திருக்கிறார்கள். கோயில்களில் உள்ள கடவுள் சிலைகளிலும் இப்படித்தான் இருக்கின்றன. ஏன், பக்தர்கள் எல்லாருமே இப்படித்தானே இருக்கின்றனர்?
அப்படியிருந்தும் மாணிக்கம் ஆசிரியர் ஏன் இப்படிச் சொன்னார்?
அவரும், நானும் ஒருவர் மீது ஒருவர் எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறோம். இருந்துமா இப்படிச் சொன்னார்? ஏன் அப்படிச் சொன்னார்?
கேள்விகளை நிறுத்தத் தெரியவில்லை எனக்கு!
இறுதியில் இப்படியொரு கேள்வியில் வந்து நின்றுவிட்டேன்.
அதாவது, ‘திருநீறு என்பது மதிப்பிற்குரியதா? கிண்டலுக்குரியதா?’
இரண்டில் எது சரி?
அம்மா சொல்வது சரியா? ஆசிரியர் சொல்வது சரியா?
சற்று நிதானப்பட்ட போது, சற்றும் எதிர்பாராத ஒன்று நினைவுக்கு வந்தது. அந்த நினைவு சுர்…ரென்று உறைத்துவிட்டது.
ஆங்கில ஆசிரியர் மாணிக்கம் நெற்றியில் திருநீறு உண்டா?
சிறிது நேரக் காத்திருப்புக்குப் பின், ‘இல்லை’ என்பதுதான் பதிலாய்க் கிடைத்தது.
அப்படியென்றால்? உணமையாகவே ஆசிரியருக்கு திருநீறு மீது மதிப்பு இல்லையா? அதனால்தான் ‘திருநீறு வைத்தவனை நம்பாதே’ என்றாரா?
அப்படியென்றால் திருநீற்றில்தான் ஏதோ பிரச்சனை இருக்கிறது!
அது என்ன?
ஒருவழியாக வீட்டுக்கு வந்துவிட்டேன். வந்தபிறகு இன்னும் நிதானமாகச் சிந்திக்க முடிந்தது.
திருநீறு என்பது கடவுளை வணங்கிவிட்டுத்தான் பக்தியின் அடையாளமாக வைத்துக் கொள்கிறார்கள்; வைத்தும் விடுகிறார்கள்.
அப்படியிருக்கையில்…
திருநீறு தவறென்றால்…
கடவுள்…?
உள்ளுக்குள் இனம் தெரியாத ஏதோ ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது.
இதுதான் கடவுள் பற்றி எனக்குள் எழுந்த அய்யத்தின் முதல் விதை!
அந்த விதை எப்போது மண்ணைப் பிளந்துகொண்டு வெளியேறியது?
அடுத்த இதழில்…