இப்ப நான் என்ன சொல்றது? காளியம்மாவா? சூரிக் கத்தியா?
பெரிய பூசணிக்காயிலிருந்து சின்ன எலுமிச்சம்பழம் வரை, ‘சுத்திப் போடுதலில்’ பலவகைகள் உண்டு.
ஒரு தட்டில் மஞ்சள், சுண்ணாம்பு கலந்த நீரில் வெற்றிலையையும், அதன் மீது சூடத்தையும் வைத்துக் கொளுத்தி, திருஷ்டி கழிப்பதாகக் கூறிச் சுத்திப்போட்டு, முச்சந்தியில் ஊற்றுவார்கள். அதில் நாணயம் ஒன்றும் கிடக்கும். இதுவும் ஒரு முறை.
வெறும் காலில்தான் விளையாடுவோம். அதனால் திருஷ்டிக் கரைசலை மிதிப்பதும், திருஷ்டி சுற்றி உடைத்த பூசணிக்காயில் இருந்து நாணயத்தை எடுப்பதும் அவ்வப்போது நடப்பதுதான்.
என்னுடைய அம்மா சுத்திப்போடும் முறையே வேறு. வலது கையில் உப்பையும், காய்ந்த மிளகாயையும் வைத்துக்கொண்டு, எங்களை கிழக்குப் பார்த்து நிற்க வைப்பார். கையை இடம் வலமாக சுற்றிக்கொண்டே, “ஊருக் கண்ணு, உலகுக் கண்ணு; நாய்க் கண்ணு நரிக் கண்ணுஞ்” என்று சொல்லி, இறுதியாக, “எல்லாம் கண்ணும் பட்டுப்போகணும்” என்று முடித்து, சுற்றிய கையைக் காட்டி துப்பச் சொல்வார். பின்னர், கையில் உள்ளதை அடுப்பினுள் போட்டுவிடுவார்.
உப்பும், மிளகாயும் தீயில் பொரிந்து சடசடவென வெடிக்கும்.
அம்மா, “ஆத்தாடி… எம் பிள்ளைகளுக்கு எவ்வளவு திருஷ்டி பட்டிருக்கு?” என்று நெட்டி முறித்தபடியே அங்கலாய்த்துக் கொள்வார்.
மேலே குறிப்பிட்டிருக்கும் முச்சந்திக் கரைசலை எக்காரணத்தைக் கொண்டும் யாரும் மிதித்துவிடக்கூடாது. ஆசிட்டைப் போல கருதிக் கொள்வார்கள் ஊரில் இது எழுதப்படாத சட்டம்.
அந்தக் கரைசலைத் தான் நான் மிதித்து விட்டேன்.
அப்போது எனக்கு வயது 16.
அம்மாவுக்கு எப்படியும் தெரிந்துவிடும்.
“எதைப் பண்ணக்கூடாதுன்னு சொல்றமோ அதையே பண்ணிட்டு வந்து நிற்குது பார்” என்று தாளாத ஆத்திரத்துடன் ’பொத்’ தென்று முதுகில் ஒன்று போட்டார்.
அடுத்த நாள் மாலையில்…
வலது காலால் நொண்டியபடி வீட்டிற்கு வந்து கொண்டிருந்தேன். அம்மா பதறிப்போய் காலைப் பார்த்தார். அவர் முகத்தில் திகில் அப்பிக்கொண்டது. பாதத்தின் நடுவே ஒரு பைசா அளவில் கருஞ்சிவப்பில் கொப்பளம் ஒன்று கனன்று கொண்டிருந்தது. ‘சுத்திப்போட்டதை மிதித்ததால் தான் இந்தக் கொப்புளம் வந்திருக்கிறது, என்று அம்மா சுலபமாக முடிவு செய்துவிட்டார்.
“கல்லுப் போல இருக்கே? நான் என்ன செய்வேன்” என்று அரற்றியபடியே கலங்கிய கண்களுடன் என்னை கைத்தாங்கலாக வீட்டிற்குள் அழைத்துச் சென்று வசதியாகப் படுக்கச் செய்தார் அம்மா.
மாடத்தில் இருந்த அகல் விளக்கைப் பற்றவைத்து அதற்கு முன்பாக சிறிது நேரம் கண்கள் கலங்க, கைகூப்பி நின்றார். பின்னர் அவசர அவரசமாகச் சமையலை முடித்துக் கொண்டு, “வீட்டிலேயே இரு சாமி, காளியம்மாள் கோயிலுக்கு போயிட்டு வந்திடறேன்” என்று முந்தானையை இழுத்துச் செருகிக்கொண்டு விறுவிறுவென்று சென்று விட்டார்.
கடந்த சில நாட்களாகவே காலில் அந்த இடத்தில் எனக்கு இலேசாக வலி இருந்தது. ஆனால், அதை நான் பொருட்படுத்தாமல் செருப்பு இல்லாமல் விளையாடிக் கொண்டிருந்து விட்டேன்.
ஆனால், அந்த வலி இப்படியொரு பெரிய கொப்பளமாக மாறும் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இதைச் சொன்னால் அப்போதைக்கு யாரும் நம்பமாட்டார்கள்.
நீண்டநேரத்திற்குப் பிறகு அம்மா திரும்பினார். நடந்ததைச் சொல்லிவிட வேண்டும் என்று எழ முயற்சித்தேன்.
அதற்குள் அம்மா, “அப்படியே இரு சாமி” என்றபடியே என்னைப் பேசவிடாமல், கீழே அமர்ந்து, கொப்பளத்தைச் சுற்றி பட்டும் படாமல் திருநீற்றைப் பூசிவிட்டார். அம்மாவின் அன்பும், பரிதவிப்பும் சேர்ந்து என்னைப் பேசவிடாமல் செய்துவிட்டது.
அடுத்த நாள் மாலையில்…
அப்பா, அம்மா இருவரின் பேச்சிலிருந்து யாரோ ஒருவர், வீட்டிற்கு வரப்போகிறார் என்பது மட்டும் எனக்குப் புரிந்தது.
சிறிது நேரத்தில் ஒருவர், “வரலாமா” எனக் கேட்டுக் கொண்டே தலையைக் குனிந்தபடி வீட்டினுள்ளே வந்தார்.
தலையில் உருமாலும், இடுப்பில் வேட்டியும் கட்டியிருந்தார். வேட்டி மீது கனத்த தோல் வார் அணிந்திருந்தார். அதில் சின்ன சூரிக் கத்தி ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. ஏதோவொன்று நடக்கப் போகிறது என்ற உள்ளுணர்வு காரணமாக எழுந்து உட்கார்ந்து விட்டேன். உருமால்காரர் உரிமையுடன் எனது கால் பக்கத்தில் சம்மனமிட்டு அமர்ந்தே விட்டார்.
என்னுடைய பதற்றத்தைப் பார்த்த அப்பா, “ஒன்னுமில்ல சாமி, கால் கொப்புளத்தைப் பார்த்துட்டுப் போக வந்திருக்கிறார், அவ்வளவு தான்” என்றார்.
உருமால்காரரும், “அவ்வளவே தான்” என்று சிரித்தபடியே, எனது இடது காலை எடுத்து அவருடைய கால் மீது வைத்தபடி, அந்த கொப்பளத்தைக் கூர்ந்து கவனித்தார்.
நானோ செய்வதறியாது பரிதாபத்துடன் அம்மாவைத் திரும்பிப் பார்த்தேன். அவரோ, எனது பார்வையை வேண்டுமென்றே தவிர்த்துவிட்டு, “வெள்ளையாக இருப்பது காளியம்மாள் கோயில் திருநீறு” என்று உருமால்காரரிடம், அவர் கேட்காமலேயே பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.
“ஓ…” என்றார் வந்தவர்.
பின்னர் என்னைப் பார்த்து, “ஏம்பா, இதுக்குப் போயா ஆஸ்பத்திரிக்குப் போறது? நான் கை வைக்கிற இடத்தில் வலிக்குதான்னு சொல்லுப்பா” என்று என் அனுமதியின்றியே, கொப்புளத்தின் பக்கவாட்டில் இலேசாகக் கை வைத்தார். நான், “ஸ்… ஆ…” என்று ஒற்றை எழுத்திலேயே அவருக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன்.
அவர், காலை அங்கும், இங்கும் தடவிக்கொண்டே “காளியம்மன் கோயில் எங்கே இருக்குன்னு தெரியுமாப்பா?” என்று கேட்டார்.
பதில் சொல்வதற்குள், “கல்பனா தியேட்டர் காளியம்மாவுக்கு நல்ல சக்தியாமே, அப்படியாப்பா” என்று அவரே தொடர்ந்து பேசினார்.
‘தானே கேள்வி கேட்டு, நாம் பதில் சொல்வதற்குள் பதிலையும் அவரே சொல்கிறாரே, ஏன்?’ என்று நான் குழப்பத்தில் ஆழ்ந்து விட்டேன்.
திடீரென்று காலில் ‘சரக்’ கென்று எதுவோ கீறியதைப் போலிருந்தது.
என்ன அது? யாருமே கவனிக்கவில்லை போலிருந்தது. அது மின்னல் வேகத்தில் நடந்து முடிந்துவிட்டிருந்தது.
பிறகுதான் தெரிந்தது. உருமால்காரர் தான், பேச்சுக் கொடுத்துக்கொண்டே தன் இடுப்புத் தோல் வாரிலிருந்த சூரிக் கத்தியை, மின்னல் வேகத்தில் எடுத்து, “சரக்”கென்று கொப்பளத்தில் ஒரு கீறு கீறியிருக்கிறார் என்று. எனக்கு கத்தக்கூட தோன்றவில்லை. கண்கள் விரிய காலைப் பார்த்தேன். ரத்தமும், சீழும் வழிந்து கொண்டிருந்தது.
அதற்குப் பிறகுதான் “ஆ” வென்று கதறினேன்.
நான் அலறுவதைப் பற்றி கொஞ்சம் அக்கறையில்லாமல்,
“அவ்வளவு தான், காயத்தைக் கழுவி விட்டிருங்க”
என்று நிதானமாகக் கூறியவாறே அந்த உருமால்காரர் எழுந்து வெளியேற, அப்பாவும் அவரைப் பின் தொடர்ந்தார். ரத்தத்தைப் பார்த்துப் பதறிப்போயிருந்த அம்மாவும், அவரின் உத்தரவைச் செயல்படுத்த வேகமாக எழுந்து சென்றார்.
நான் எங்கே போவது?
மூவரையும் கலங்கிய கண்களுடன் வெறுமனே வேடிக்கை பார்க்கத்தான் முடிந்தது
பிறகு, இரண்டு நாளில் எல்லாமே சரியாகிவிட்டது. சுத்திப்போட்டதை மிதிப் பதற்கு நான்கைந்து நாட்களுக்கு முன்பே கொப்பளத்திற்கான வலி தொடங்கிவிட்டது. ஆகவே, எனக்கு உறுதியாகத் தெரியும் அதற்கும் இதற்கும் தொடர்பே இல்லையென்று!
இந்த உண்மையை அம்மாவிடம் சொல்ல முடியவில்லையே எனும் தவிப்பு உருமால்காரர் வரும் வரையிலும் இருந்தது. வந்த பிறகு அந்தத் தவிப்பை, கால் கொப்பளத்தைச் சரி செய்தது காளியம்மாவா? சூரிக் கத்தியா? உருமால்காரரா? என்ற மூன்று கேள்விகள் ஆக்ரமித்துக்கொண்டன.
ஆங்கில ஆசிரியர் மாணிக்கம், ’நெற்றியில் திருநீறு வச்சவங்களை நம்பவே கூடாது’ என்று கூறியிருந்தாரல்லவா? அதனால் எனக்குள் ஏற்கனவே கடவுள் மீதே சந்தேக விதை விழுந்திருந்ததும் பற்றிச் சொன்னேன்0 அல்லவா?
அந்த விதை… முளைவிட்டு, மண்ணுக் குள்ளிருந்து மெ…ல்ல எட்டிப் பார்த்தது!
(தொடரும்)