பறவைகள் அறிவோம் – 4 : மரங்களின் டாக்டர் மரங்கொத்தி
ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, மடகாஸ்கர் தவிர உலகமெங்கும் காணப்படும் ஓர் அழகிய பறவைதான் மரங்கொத்தி. இப்பறவை இனத்தில் சுமார் 200 சிற்றினங்கள் உள்ளன. இதில் 95 சதவிகிதம் மரவாழ் பறவையாகும். 5 சதவிகிதம் பாறைப் பகுதியிலும், பாலை நிலத்திலும் வாழ்கின்றன.
பொன்முதுகு மரங்கொத்திப் பறவை சுமார் 26 முதல் 29 செ.மீ நீளம் கொண்டது. பொன்னிற மஞ்சள் இறக்கைகள் இதன் தனித்துவமான நிறமாகும். முதுகுப்பகுதியும், பிட்டமும் கருப்பு நிறத்தில் இருக்கும். இதன் உணவு முறைக்கேற்ப அலகு அமைந்துள்ளது. இப்பறவைக்கு உளி போன்ற உறுதியும், கூர்மையும் கொண்ட அலகு உள்ளது. மரத்தில் செங்குத்தாக அமர்ந்துகொண்டு ஒரு நொடிகள் 20 முறை மரத்தைக் கொத்துகின்றது. ஒரு நாளைக்கு 8000 முதல் 12000 முறை மரத்தை தன் அலகால் தட்டி ஒலி எழுப்பும். மரத்தைக் கொத்தும்போது அதன் மூளையில் அதிர்வு ஏற்படாமல் இருக்க இயற்கையாகவே அதன் நாக்கு நீளமாக அமைந்துள்ளது.
மேலும் மூளை, கனமான மண்டை ஓட்டுக்குள் இருக்கிறது. அதனைச் சுற்றி மெத்தைபோல திசுக்களும் உள்ளதால் இது மரத்தைக் கொத்தும்போது ஏற்படும் அதிர்வை இவை தாங்கிப்பிடிக்கின்றன. அதைப்போல கண்களையும், கழுத்துப் பகுதியையும் சுற்றிக் கூட பலமான திசுக்கள் உள்ளன. இப் பறவையின் நாக்கில் பசைத்தன்மை உள்ளதால் தனது அலகு செல்லமுடியாத இடங்களில் நாக்கைக் கொண்டு பூச்சிகளைப் பிடித்து உண்ணும் மேலும் பழங்கள், பருப்புகள், தேன் முதலியவற்றையும் விரும்பி உண்ணும். அது பறந்துவரும் அழகே தனித்துவமானதுதான். மற்ற பறவைகளைப்போல் அல்லாமல் மேலும் கீழுமாக அலை அடிப்பதுபோல் பறக்க ஆரம்பிக்கின்றன.
மரங்கொத்தி மரத்தில் துளையிட்டு அதில் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து அவற்றை வளர்க்கும். மரத்தைக் கொத்தும்போது ஏற்படும் ஒலியைத் தவிர தன் இனத்தைச் சேர்ந்த இணைப் பறவைகளுடன் தொடர்புகொள்ள மரத்தைத் தன் அலகால் தட்டித் தட்டி ஒலி எழுப்பக்கூடியது. குறிப்பாக இனப்பெருக்கக் காலத்தில் இணையை ஈர்ப்பதற்காகவும் ஒலி எழுப்பும்.
இனப்பெருக்கக் காலங்களில் மரங்களில் தன்னுடைய உளி போன்ற அலகால் துளையை ஏற்படுத்தி அதில் மூன்று அல்லது அய்ந்து முட்டைகளையிட்டுப் பாதுகாக்கிறது.
சுமார் இரண்டு வாரங்களில் குஞ்சுகளைப் பொரித்துவிடுகின்றது. தாய் அல்லது தந்தை பறவை மரத்திலேயே காவல் இருக்கும். சுமார் 30 நாட்களில் அந்தக் குஞ்சுகளுக்கு இறக்கை முளைத்து பறக்கும்.
வெளிக் கண்களுக்குத் தெரியாமல் மரத்தண்டின் உட்பகுதியில் இருந்துகொண்டு அந்த மரத்தை கொஞ்சம், கொஞ்சமாக அரித்துக்கொண்டிருக்கும் பூச்சிகளை மரத்தின் மேற்பகுதியில் டொக், டொக் என்ற சத்தத்தை எழுப்பி பூச்சிகள் உள்ளதா, இல்லையா என்பதை எளிதில் அடையாளம் கண்டு பூச்சிகளை அழித்து மரத்தைக் காப்பாற்றும் சிறந்த டாக்டர் தொழிலையும் செய்து வருகிறது மரங்கொத்தி.
“அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு.”
என்ற வள்ளுவரின் வாக்குப்படி அன்பு பிறரிடத்து ஆர்வத்தைக் கொடுக்கும். அந்த ஆர்வமே நட்பு என்னும் அளவற்ற சிறப்பைக் கொடுக்கும். அதுபோல மரங்கொத்தி மற்ற பறவைகளோடு அன்போடும், நட்போடும் இருக்கக் கூடுகட்டத் தெரியாத கிளி, பனங்காடை போன்ற பறவைகளுக்கு இனப்பெருக்க காலத்திற்குத் தேவையான மரப்பொந்துகளையும் மரத்தில் ஆங்காங்கே ஏற்படுத்திக் கொடுக்கிறது. இவ்வாறு தனக்காக மட்டுமல்லாமல் மற்ற பறவைகளுக்கும் உதவி செய்யும் எண்ணமுடைய மரங்கொத்தியை நாம் போற்றிப் பாதுகாப்போம்!.
பறவைகளின் எச்சமே
காடுகளின் வளர்ச்சி!
மரங்களின் வெளிமூச்சே
மனிதர்களின் உயிர்மூச்சு!