நாம் கசடறக் கற்போமே!
பள்ளிக் கூடம் மீண்டும் திறந்தாச்சு – புதுப்
பாடப் புத்தகம் யாவும் வந்தாச்சு!
பையை முதுகில் சுமந்து செல்வோமே – நாம்
பள்ளியில் அன்பாய் சிரித்து மகிழ்வோமே!
பள்ளிக் கூட மணியும் ஒலித்திடுமே – நாம்
பறந்து விரைந்து ஓடிச் செல்வோமே!
ஆண்டுத் தேர்வில் வெற்றி பெற்றோமே – நாம்
அடுத்த வகுப்பில் துள்ளி அமர்வோமே!
புதிய புத்தகம் வாங்கிப் பார்ப்போமே – தினம்
புரட்டிப் புரட்டிப் படித்துச் சிறப்போமே!
ஆசிரியர் வருவார் சொல்லித் தருவாரே – நாம்
அய்யம் களைந்து ஊன்றிப் படிப்போமே!
கற்போம் கற்போம் பாடம் கசடறவே – நற்
காலம் கருதி இளமையில் பயின்றிடுவோம்!
நாளைய உலகம் என்றும் நமதாகும் – புது
ஞாலம் படைப்போம்! மாலைகள் பெறுவோம்!
– ஆ.சு.மாரியப்பன், புதுக்கோட்டை