ஜூலை 15 – கல்வி வள்ளல் காமராசர் பிறந்தநாள் – கல்வி வளர்ச்சி நாள்
பகுத்தறிவே அறிவியல்!
எந்தப் பொருளைக் கண்டாலும்
எத்தன் மைத்தோ ஆனாலும்
அந்தப் பொருளின் மெய்ப்பொருளை
ஆய்ந்தே அறிதல் அறிவியலாம்!
எவர்தம் உரையைக் கேட்டாலும்
ஏற்கும் முன்னர் அவ்வுரையில்
தவறும் சரியும் கண்டாய்தல்
தம்பி, தங்காய், அறிவியலாம்!
நம்பிக் கைகள் பலவாக
நாட்டில் எங்கும் இருந்தாலும்
தம்பி அவற்றை நம்பும்முன்
தலையால் சிந்தித் திடுவாய்நீ!
மூடம் நிறைந்த நம்பிக்கை
முடக்கும் உனது வாழ்வினையே;
தேட வேண்டும் தெளிவைநீ;
தெரிந்தால் அதுவே அறிவியலாம்!
பாரில் இங்கே யாவருக்கும்
பகுத்தே அறியும் திறனிருந்தால்
வேரின் எல்லை கண்டிடலாம்;
வெற்றி யாவும் கொண்டிடலாம்!
அரிய ஆறாம் அறிவாலே
ஆக்கத் திற்காய்ச் சிந்தித்தல்
சரியாய் ஆன அறிவியல்காண்;
சரித்தி ரத்தைப் படைத்திடலாம்!!
– கே.பி.பத்மநாபன்,
கோவை.