நினைவில் நிறுத்துவோம் – மூடநம்பிக்கைகளை ஒழித்து, பிஞ்சுகளைக் காப்போம்!
மூடநம்பிக்கைகள் பெரியவர்களைக் காட்டிலும் பிஞ்சுகளையே பெரிதும் பாதிக்கின்றன. பால் பாகுபாடு, தப்பான நம்பிக்கைகள் காரணமாகப் பிறக்கும் முன் கருவிலேயும், பிறந்த பின் உருவிலேயும் பிஞ்சுகள் அழிக்கப்படும் அவலம் அன்றாடம் ஆங்காங்கே நடைபெறுகிறது.
ஆண் பிள்ளை வேண்டும் என்ற ஆவலும், பெண் பிள்ளை மீது வெறுப்பும் ஒருவகை மூடநம்பிக்கையே! ஆண் உயர்ந்தது; பெண் மட்டம் என்ற எண்ணம் மனதில் ஆழப் பாதிக்கப்பட்டுள்ளது.
வயிற்றில் வளர்வது பெண் பிள்ளை என்று தெரிந்தால் கருவிலேயே கலைத்து அழிக்கும் கொடுமை இன்றளவும் நடைபெற்று வருகிறது. நல்ல வாய்ப்பாக வயிற்றில் உள்ள குழந்தை ஆணா? பெண்ணா? என்று அறிந்து அறிவிக்கக் கூடாது என்று அரசு தடை செய்துள்ளதால் இன்று பல குழந்தைகள் பிழைத்துப் பிறக்கின்றன. இல்லையேல், பெண் குழந்தைகள் பெரும்பாலும் கருவிலேயே கலைக்கப்பட்டிருக்கும்.
பிள்ளையில் ஆண் பிள்ளை உயர்வு பெண்பிள்ளை தாழ்வு என்ற எண்ணம் எவ்வளவு கொடிய மூடநம்பிக்கை. ஆண்தான் குடும்ப வாரிசு பெண் வேறு ஒரு வீட்டுக்குப் போக வேண்டியவள் என்பது தப்பான கருத்து.
நேருவுக்கு இந்திரா என்ற பெண் தான் வாரிசு. அவரைவிட எந்த ஆண் இந்த உலகில் சாதித்தான்? சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தொப்புள் கொடியில் தப்பான நம்பிக்கை
குழந்தை பிறக்கும் போது தொப்புள் கொடி குழந்தையின் கழுத்தில் மாலை போல் மாட்டிக் கொண்டால் தாய்மாமனுக்கு ஆகாது என்ற மூடநம்பிக்கையால் அக்காலத்தில் ஆயிரக் கணக்கான பெண் பிள்ளைகள் பிறந்த உடனேயே கொல்லப்பட்டனர்.
அக்காலத்தில் அப்படி ஒரு வழக்கம் இருந்தது. அண்மைக் காலமாக வீடுகளில் பிள்ளைகள் பிறக்காமல், மருத்துவமனையில் பிறப்பதால் கழுத்தில் தொப்புள்கொடி மாட்டிக் கொண்டிருந்திருப்பது. பெற்றோருக்குத் தெரிய வாய்ப்பில்லாமல் போனதால், இன்று பல பெண் பிள்ளைகள் காப்பாற்றப்படப்பட்டுள்ளனர்.
குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் போது, அதற்குத் தேவையான உணவை தொப்புள் கொடி மூலமாகத்தான் தாயிடமிருந்து பெறுகிறது. குழந்தை பிறந்ததும் அது அகற்றப்படும். உண்மை இப்படி இருக்க, தொப்புள்கொடி குழந்தையின் கழுத்தில் சுற்றிக் கொண்டால் என்ன, காலைச் சுற்றிக் கொண்டால் என்ன? குழந்தை நலமாய் பிறந்ததா என்று தானே பார்க்க வேண்டும். மாறாக தொப்புள்கொடி கழுத்தில் சுற்றிக்கொண்டு பிறந்தால் தாய் மாமனுக்குக் கேடு என்பது எவ்வளவு பெரிய மூடநம்பிக்கை.! பிள்ளையின் கழுத்தில் தொப்புள் கொடி சுற்றிக் கொண்டால் தாய் மாமனுக்கு எப்படி கேடு வரும்? சிந்திக்க வேண்டாமா? குழந்தையின் தொப்புள் கொடிக்கும் தாய்மாமனுக்கு என்ன தொடர்பு?
ஜோதிடமும் படிப்பும்
பிள்ளைகளைப் படிக்க வைப்பதற்கு முன் அவர்களுடைய ஜாதகத்தைப் பார்க்கின்ற பெற்றோர்கள் இருக்கவே செய்கின்றனர். படிப்பு வராது என்று ஜோதிடர் சொல்லிவிட்டால் அப்பிள்ளையைப் படிக்க வைக்காமல் வீட்டு வேலையைப் பார்க்கச் சொல்லும் அவலமும் காணப்படுகிறது.
ஒரு பிள்ளைக்குப் படிப்பு வருமா வராதா என்பதை ஜோதிடத்தால் தெரிந்து கொள்ள முடியும் என்று நம்புவது எவ்வளவு பெரிய மூடத்தனம்! நூறு ஆண்டுகளுக்கு முன் ஒரு ஜாதிக்குதான் படிப்பு வரும், மற்ற ஜாதியினருக்குப் படிப்பே வராது, அவர்கள் குலத்தொழிலையே செய்ய வேண்டும் என்ற கொடுமை நிலவியது. ஆனால், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் போன்றவர்களின் பிரச்சாரத்தால் – போராட்டங்களால் எல்லோருக்கும் படிக்கும் வாய்ப்பு கிடைத்த பின், படிப்பே வராது என்று ஒதுக்கப்பட்ட சமுதாயப் பிள்ளைகள் தான் இன்று கல்வியில் முதல் தரத்தில் சாதிக்கின்றனர். எனவே, பிறப்பின் அடிப்படையில், பிறந்த நேரத்தின் அடிப்படையில், ஒருவரின் வாழ்வும் திறமையும் அமையும் என்று பெரியவர்கள் நம்பி அந்த மூடநம்பிக்கையால் பிள்ளைகளின் வாழ்வைப் பாழாக்குவது மிகக் கொடிய கண்டிக்கப்பட வேண்டிய _ களையப்பட வேண்டிய குற்றமாகும். இது குறித்துப் பெற்றோர்களுக்கு விழிப்பு உருவாக்க வேண்டும்.
விஜயதசமி
விஜயதசமி அன்று பிள்ளைகளைப் பள்ளியில் சேர்த்தால் படிப்பு நன்றாக வரும் என்ற நம்பிக்கையில் பள்ளியில் சேர்ப்பதைத் தள்ளிப் போடுகிறார்கள். பள்ளிகள் ஜூன் மாதம் திறக்கப்படும் நிலையில் விஜயதசமி நம்பிக்கையால் நான்கு மாதங்களுக்கு மேல் படிப்பு பாழாகிறது. இந்த மூடநம்பிக்கை அடிப்படையில் விஜயதசமி வரை பள்ளியில் சேர்க்கலாம் என்ற தளர்வும் நடப்பில் உள்ளது. இத்தளர்வுகளை அரசு உடனடியாக நீக்கி, ஜூன் மாதத்திலேயே பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பதைக் கட்டாயப்படுத்த வேண்டும். மத நம்பிக்கை அடிப்படையில் கல்வி நிலைய வழிமுறைகளை அமைக்கும் நடைமுறை ஒழிக்கப்பட வேண்டும்.
அண்மையில் நடந்த அதிர்ச்சி அளிக்கும் நிகழ்வு!
மூடநம்பிக்கை ஒரு மனிதரை எந்த அளவு பாழாக்கும் என்பதற்கு அண்மையில் அரியலூர் மாவட்டத்தில் நடந்த செயலே சரியான சான்று ஆகும்.
குழந்தைகள் மீது பெற்றவர்களை விட தாத்தா, பாட்டிகள்தான் அதிக பாசத்தோடு இருப்பர். அப்படிப்பட்ட தாத்தா, தன் பேரப் பிள்ளையையே மூடநம்பிக்கையால் கொலை செய்துள்ள கொடுமை நடந்துள்ளது.
பிறந்து சில மாதங்களே ஆன தனது பேரக்குழந்தையை தண்ணீர்த் தொட்டியில் மூழ்கடித்துத் தாத்தா கொலை செய்துள்ளார். ஏன் கொலை செய்தார் என்று விசாரித்த போது, சித்திரை மாதத்தில் அக்குழந்தை பிறந்துள்ளதால் குடும்பத்திற்குக் கேடு வரும் என்றும் அதைத் தடுக்கவே குழந்தையை கொன்றதாகக் கூறியுள்ளார்.
இதைவிட உலக மகா மூடத்தனம் வேறு உண்டா? சித்திரை மாதத்தில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பிறக்கின்றன. அந்தக் குடும்பங்களுக்கு எந்தக் கேடும் வரவில்லையே! பிள்ளை பிறக்கும் மாதத்திற்கும், அந்த குடும்பத்திற்கும் வரும் நல்லது கெட்டதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அப்படி இருக்க, மூடநம்பிக்கையால் தன் பேரப் பிள்ளையையே தாத்தா கொலை செய்துள்ளார் என்றால், அப்படிப்பட்ட மூடநம்பிக்கைகளைத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து ஒழித்தாக வேண்டும். மூடநம்பிக்கைகளால் பெரியவர்களைவிட பிள்ளைகளே அதிகம் பாதிக்கப்படுவதால், மூடநம்பிக்கையால் பிள்ளைகள் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல், அவர்களைப் பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமையாகும். ஆசிரியர்களுக்கு இதில் அதிகக் கடமை உண்டு. பெற்றோர்களுக்கு அறிவார்ந்த ஆலோசனைகள் வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.