பறவைகள் அறிவோம் – 5 : பனங்காடை
பரிணாம வளர்ச்சியில் எண்ணற்ற உயிரினர்கள் அழகாலும், திறமையாலும் நம்மை வியப்புக்கு ஆளாக்குகின்றன. அந்த வகையில் பலவகையான நீலவண்ணங்களைத் தன்னுள் கொண்ட பறவைதான் பனங்காடை.
நீலநிறம் கொண்ட பனங்காடை தன் சிறகை விரித்துப் பறக்கும் போது வானில் சிறு வர்ணஜாலமே நடக்கும் அளவிற்கு அழகானது. பனங்காடை இந்தியாவில் மட்டுமல்லாது ஈரான், தாய்லாந்து போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது. இந்தியாவில் பிகார், ஒடிசா, கர்நாடகா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் மாநிலப் பறவையாக இருப்பது இதன் சிறப்பாகும். இவை திறந்த புல்வெளிகளிலும், காட்டுப் பகுதிகளிலும் வாழ்கின்றன. நமது கிராமங்களில் சாலையோர மரங்களிலும், மின்கம்பிகளிலும் கூட அமர்ந்திருப்பதை நம்மால் காணமுடியும்.
இப்பறவை 30 – 40 செ.மீ நீளமும் சுமார் 166 கிராம் முதல் 176 கிராம் வரை எடையும் கொண்டவை.
பனங்காடை ஆங்கிலத்தில் ‘இண்டியன் ரோவர்’ என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் இப்பறவை மொட்டைப் பனைமரத்தில் துளையிட்டு வசிப்பிடமாகக் கொண்டு வாழ்வதால் பனங்காடை என்று அழைக்கப்படுகிறது. இவை வயல்வெளிகளில் பயிர்களைச் சேதப்படுத்தும் சிறு சிறு பூச்சிகளையும், தவளைகளையும், எலிகளையும் உணவாக உட்கொள்வதன் மூலம் பயிர்களைப் பாதுகாக்கின்றன. இதனால் பனங்காடையை விவசாயிகளின் நண்பன் என்று கூறுகிறார்கள். பொதுவாக தனியாகவே காணப்படும் இப்பறவை, சில சமயங்களில் இணைப் பறவையோடு சேர்ந்திருக்கும்.
மார்ச் முதல் ஜூன் வரையிலான காலம் இவற்றின் இனப்பெருக்கக் காலமாகும். இக்காலத்தில் தனக்கான இணையை ஈர்ப்பதற்காக ஆண் பறவைகள் வானத்தின் மேலே உயர, உயரப் பறந்து மேலிருந்து கீழ்நோக்கிக் குட்டிக்கர்ணம் அடித்துக்கொண்டே கீழே வந்து மீண்டும் மேல் நோக்கிப் பறக்கின்றன. இப்படியாக எந்த ஓர் ஆண் பறவை அதிக எண்ணிக்கையில் குட்டிக்கர்ணம் அடிக்கிறதோ அந்த ஆண் பறவையோடுதான் பெண் பறவை இணைசேரும். இனப்பெருக்கக் காலத்தில் பட்டுப் போன பனைமரப் பொந்துகளிலும், பாறையிடுக்குகளிலும் கூடுகட்டும். சுமார் 3 முதல் 5 முட்டைகள் வரை இட்டு அவற்றை 17 முதல் 19 நாட்கள் வரை அடைகாத்துக் குஞ்சுகளைப் பொரிக்கின்றன. அவை சுமார் 30 – 35 நாட்களில் வளர்ந்து விடுகின்றன.
முன்பு மேலைநாட்டுச் சீமாட்டிகள் உடையலங்காரத்திற்குப் பனங்காடையின் இறகுகளைப் பயன்படுத்தியதும், அதற்காக இவை வேட்டையாடப்பட்டு இறகுகள் ஏற்றுமதி செய்யப்பட்டதும், அக்காலத்தில் இப்பறவை இனம் குறைவதற்கு காரணமாக அமைந்திருந்தது இன்றைய சூழ்நிலையில் மனிதர்கள் பல்வேறு காரணங்களின் மூலம் பறவை இனத்தை அழித்துக்கொண்டே வருவதனை நாம் காணலாம். பறவை இனம் முற்றிலும் இல்லாமல் போகுமாயின், அது மனித இனத்தின் அழிவுப் பாதைக்கான அறிகுறியாகும்.
மனித இனத்தைத் தவிர வேறெந்த உயிரினத்தாலும் சுற்றுச் சூழலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. பறவைகள் நமது சுற்றுச்சூழலுக்கும் மற்றும் அதன் சமநிலைக்கும் இன்றியமையாதவை. எனவே, பறவை இனத்தைக் காப்பாற்ற வேண்டியது நமது கடமையாகும். பனங்காடை போன்ற அழகான பறவைகளும் அதில் தானே அடக்கம்.
பறவைகளைக் காப்போம்!
பசுமையை மீட்போம்!