இன்றைய உலகின் ஆய்வுகள்
பூமியின் வயது : புதிய செய்தி
பூமியின் தோற்றம் பற்றி புதிய ஆய்வு ஒன்றை அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக அறிவியலாளர்கள் மேற் கொண்டிருக்கிறார்கள். பூமி தோன்றி 500 கோடி ஆண்டுகள் ஆகியிருக்கும் என்பதுதான் இவர்கள் வெளியிட்டிருக்கும் புதிய செய்தி.அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கொண்டு இதைக் கண்டறிந்துள்ளதாக இவர்கள் கூறியுள்ளனர். இந்த ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ள செய்திகள்: பூமி தோன்றிய உடனே அதில் உயிரினங்கள் தோன்றிவிடவில்லை. பூமி தோன்றி பல கோடி ஆண்டுகளுக்குப் பின்னரே உயிரினங்கள் தோன்றியிருக்க முடியும். இந்த உயிரினத் தோற்றமும் இப்போது உள்ளது போல இருந்திருக்க முடியாது. பூமி தோன்றி ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்குப் பின்னரே முதன்முதலாக கடல் நீரில் பாசி (ALGAE) போன்றவை தோன்றின. அக்காலத்தில் கார்பன் கூட்டுப் பொருட்கள் அதிகமாக இருந்ததால், பாசி தோன்றியிருக்கக் கூடும். இதற்குப் பின்னர் 50 கோடி ஆண்டுகள் கடந்த பிறகுதான் உயிரினங்கள் தோற்றம் பெறத் தொடங்கின. அதுவும்கூட பலவித மாறுதல்களை அடைந்தன. கிளிஞ்சல்கள் (OYSTER) போன்ற திடமான கூடுகளில் உயிரினங்கள் வசிக்க ஆரம்பித்தன. இதனையடுத்து 50 கோடி ஆண்டுகள் கழித்து படிப்படியாக சில உயிரினங்கள் தோன்றி வளர ஆரம்பித்தன,என்று கலிபோர்னியா அறிவியலாளர்களின் புதிய ஆய்வு முடிவு கூறுகிறது. என்றாலும் இது முழுமையான முடிவுகள் அல்ல; இன்னும் முக்கியமான சில ஆய்வுகளைச் செய்யவேண்டியுள்ளது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
விண்வெளியில் ரோபோக்கள்
ரோபோக்கள் பற்றி அறிந்திருப்பீர்கள். மனிதர்களுக்கு உதவும் வகையில் வேலை செய்யும் இயந்திர மனிதர்கள் இவர்கள். இப்போது இந்த ரோபோக்கள் விரைவில் விண்வெளி யிலும் வேலை செய்யப் போகின்றன. ஏற்கெனவே ஒளிப்படங்கள் எடுப்பதற்காக விண்வெளியில் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், அவை உருவ அமைப்பில் மற்ற ரோபோக்களைப் போல இருக்காது. அண்மையில் அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசா விண்வெளி ஓடங்களில் எரிபொருட்களை நிரப்பும் பணிக்காக முதன்முறையாக ரோபோக்களை பயன்படுத்துவது குறித்து சோதனை ஒன்றைச் செய்து பார்த்துள்ளது. Robotic Refueling Mission(RRM) என்று பெயரிடப்பட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் தயாரிக்கப்படும் ரோபோக்கள் 250 கிலோ எடையைக் கொண்டது. 83 x 109 x 114 cm என்ற அளவில் இருக்கும். ஒரு முறையில் தமக்குள் 1.7 லிட்டர் எரிபொருளை எடுத்துச் செல்லக்கூடிய இந்த ரோபோக்களின் சோதனைத் திட்டம் 2013ஆம் ஆண்டு வரையும் தொடர்ந்து செய்யப்படும் என நாசா கூறியுள்ளது.