படிச்சுட்டு நகருங்க…வரிக்குதிரை வண்டி
மாட்டு வண்டி பார்த்திருப்பீக… குதிரை வண்டி பார்த்திருப்பீக… அம்புட்டு ஏன் பனிப்பிரதேசத்தில நாய் வண்டி கூட பார்த்திருப்பீக… ஆனா, வரிக்குதிரை வண்டி பார்த்திருக்கீகளா?” என்று திரைப்பட வசனம் போல ஆச்சரியப்படத் தக்க செய்திதான் இது.
கொல்கத்தாவில் (1844-1894) வாழ்ந்த கொடை வள்ளல்களில் ஒருவரான ஜாதுலால் முல்லிக் என்பவரின் இளைய மகன் மன்மத நாத் ஆவார். துணிச்சலான காரியங்களைச் செய்வதில் ஆர்வம் அதிகம் இருக்குமாம் அவருக்கு! புதிய முயற்சிகளைச் செய்வதற்கும் அஞ்சாதவர். ஏராளமான குதிரைகளைத் தானே வளர்த்து, அவற்றைப் பராமரிப்பதற்கென பெரிய லாயத்தையும் வைத்திருந்தார்.
குதிரைகள் மனிதர்களால் பழக்கப் படுத்தப்பட்டுப் பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன.
ஆனால், மனிதர்களால் பழக்கப்படுத்தப்படாத காட்டு விலங்குதான் வரிக்குதிரை. அதனைக் கொண்டுவந்து, பழக்கி, தன்னுடைய கட்டுக்குள் வைத்து, கல்கத்தா (இன்றைய கொல்கத்தா) நகர வீதிகளில் வண்டி ஓட்ட வேண்டும் என்று அவருக்கு ஆசை ஏற்பட்டுவிட்டது. இதைச் சவாலாக ஏற்றுக் கொண்டு, அலிப்பூர் விலங்குக் காட்சி சாலையிலிருந்து இரண்டு வரிக் குதிரைகளை வாங்கிக் கொண்டுவந்து சொன்னபடியே 1936-இல் கல்கத்தா வீதிகளில் வண்டி ஓட்டியிருக்கிறார்.
அந்தக் குதிரைகளையும், வண்டியையும், கொல்கத்தாவின் மய்யப் பகுதியில் உள்ள பெலியாகட்டாவின் ராஜா ராஜேந்திர லால் மித்ரா சாலையில் இருந்த தனது தோட்ட இல்லத்தில் அனைவரும் பார்க்கும்படி வைத்திருந்தாராம்.
‘காசிருந்தது; வரிக்குதிரை வாங்கினார்’ என்று இப்போதெல்லாம் வாங்க முடியாது. வனவிலங்குகளைப் பாதுகாக்கச் சட்டம் இருக்கிறது. அதனால் நாமளும் வரிக்குதிரை வாங்குற முயற்சியை விட்டுட்டு, செய்தியை மட்டும் படிச்சுட்டு நகர்ந்து போவோம்.