எண்ணிய எண்ணியாங்கு எய்துபர்!
(எண்ணியபடியே செயலாற்றுவர்)
மனிதராகப் பிறந்த அனைவருமே பிரச்சனைகளில் நீந்தித்தான் வாழ்க்கையில் கரை சேர்ந்தாக வேண்டும். எதுவும் சுலபமாக வந்துவிடாது. யாரெல்லாம் தம்முடைய பிரச்சினைகளுக்குச் சரியான தீர்வைக் காண்கிறார்களோ, அவர்களெல்லாம் அந்தப் பிரச்சனையை சரியாக புரிந்துகொண்டவர்கள் என்று பொருள். புரிந்து கொண்டாலே பாதி தீர்வு கிடைத்தது போல்தான். இது எல்லாத் துறைகளுக்குமே பொருந்தும். இதற்கென்று தனி கல்வி, பட்டம் என்று பரந்துவிரிந்த துறை இது!
அப்படியெல்லாம் படித்துப் பெற வேண்டிய அறிவைத் தானாகவே வெளிப்படுத்தினார் 4 வயதுச் சிறுமி சாய்நிதுரா! ஒருநாள் சென்னை பெரியார் திடலுக்குத் தன் தாயுடன் வந்தார். 14 வயது கவினைச் சந்தித்தார். இருவரும் தங்கள் பெயர்களைப் பரிமாறிக் கொண்டனர். ‘சாய் நிதுரா’ என்ற பெயர் சொன்ன குட்டிப்பெண்ணின் உச்சரிப்பு கவினுக்கு, ‘சாய் நிடுதா’, ‘சாய் நிதுதா’, ‘சாய் நிருடா’ என பல வகைகளில் கேட்டிருக்கிறது. இதைக் கூட சரியாக புரிந்துகொள்ள முடியவில்லையே என்று கவினுக்குக் கவலையை ஏற்படுத்தியதோ இல்லையோ நமக்குத் தெரியாது. ஆனால், சாய் நிதுராவுக்கு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்திவிட்டது.
நமது பெயரின் சரியான உச்சரிப்பு கவினுக்கு பிடிபட வில்லையே என்று கவலைப் பட்டிருக்கிறார்! அதைப்பற்றி தனியாக சிந்தித்திருக்கிறார்! இறுதியில் நமது உச்சரிப்புதான் இந்தப் பிரச்சனைக்குக் காரணம் என்பதை அவராகவே உணர்ந்துகொண்டார்! இவ்வளவு நுட்பமாக 4 வயது குட்டிப்பெண் சிந்தித்திருப்பது அரிதுதானே? ஏன் குட்டிப்பெண் சிந்திக்க கூடாதா? சிந்திக்கும் திறன் பெரியவர் களுக்கு மட்டும் தான் பட்டா போட்டு கொடுக்கப் பட்டிருக்கிறதா என்ன? இதனால்தானே “உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெருந்தேர்க்கு அச்சாணி” என்கிறார் திருவள்ளுவர்.
ஒரு தீர்க்கமான முடிவெடுத்துவிட்ட சாய் நிதுரா, ஒரு வெள்ளைத் தாளை எடுத்துக்கொண்டு கவினுக்கு அருகில் வந்து, ”கவின் இங்க பாருங்க” என்று நிறுத்தி நிதானமாக தன் பெயரை
SAI NITHURAA என்று மழலை எழுத்துகளில் தெளிவாக எழுதிக் காண்பித்திருக்கிறார். அந்தத் தாளை வாங்கி கவின் எழுத்துக்கூட்டி வாசித்து, புரிந்து கொண்டு, “அடடே… சாய் நிதுரா வா?” என்று மகிழ்ச்சியுடன் குட்டிப்பெண்ணைப் பார்த்து அழைத்திருக்கிறார். அதைக் கேட்டவுடன் சாய் நிதுரா வெட்கமும், நிம்மதியும் ஒருசேர முகத்தில் படர, ‘ஆமாம்’ என்பது போல் தலையை அசைத்திருக்கிறார்.
‘ச்சே.. எத்தனை முறைதான் சொல்வது.
இவருக்கு புரியவே இல்லையே’ என்று சாய் நிதுரா சலிப்படைந்து விலகிச் சென்றிருக்கலாம். அவ்வாறு செய்யாமல் முதலில் அதை ஒரு பிரச்சனையாக அங்கீகரித்திருக்கிறார். இது முக்கியமான விசயம்! அதைத் தீர்க்க வேண்டும் என்று உறுதியாக ஒரு முடிவெடுத்திருக்கிறார். இது அதைவிட முக்கியமானது! இதைத்தான் வினைத்திட்பம் எனும் குறளில் “எண்ணிய எண்ணியாங்கு எய்துபர் எண்ணியர் திண்ணியர் ஆகப் பெரின்” என்கிறார் வள்ளுவர்! அதாவது, எண்ணியபடியே செயலாற்றுவதில் உறுதியுடையவராக இருப்பவர் கள் அவர்கள் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவார்கள் என்பது அதற்குப் பொருள். அப்படித் தானே இந்தச் சின்னப்பெண் எண்ணியிருக்கிறார்! அதை செயல்படுத்தி இருக்கிறார்! செயலில் சிறிதென்ன? பெரிதென்ன?