தீயன நாடாதே
கல்விச் சாலையில் தூங்காதே – வீணாய்க்
காலம் கழித்தே ஏங்காதே!
பள்ளியில் சோம்பல் தீங்காமே! – கெட்ட
பெயரினை என்னும் வாங்காதே!
வஞ்சம் கபடம் எண்ணாதே – மிக
விரைவாய் உணவை உண்ணாதே!
அஞ்சும் செயலைப் பண்ணாதே – பெற்ற
அன்னை நெஞ்சம் புண்படுமே!
வாழ்வில் கவலை கொள்ளாதே – வாழ்ந்தோர்
வார்த்தை அமுதம் தள்ளாதே!
தாழ்வாம் கள்ளம் கல்லாதே – எங்கும்
தகவிலார் இல்லம் செல்லாதே!
தீயன காதில் கேட்காதே – நீ
தெருவில் குறுக்கே ஓடாதே!
தீயோர் உறவை நாடாதே – வீண்
திண்ணைப் பேச்சுக் கூடாதே!
இளமையில் சோம்பல் சிறக்காதே – கனியாம்
இன்சொல் தேனாம் மறக்காதே!
வளமைக்கு உழைப்பைத் துறக்காதே – தீயோர்
வாழ்வில் இன்பம் பிறக்காதே!!
– ஆ.ச.மாரியப்பன், புதுக்கோட்டை.