ஒலிம்பிக் 2024: நட்புக்கான விளையாட்டு
சரவணா இராஜேந்திரன்
*ஒலிம்பிக் பதக்கத்தை கடித்துப் பார்க்கும் வீரர்கள்!?
*ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக ஜிம்னாஸ்டிக் பிரிவில் தங்கம், வெள்ளி, வெங்கலம் மூன்றையுமே மூன்று கருப்பினத்தவர் பதக்கம் வென்றனர்.
*ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா (இந்தியா) வெள்ளிப் பதக்கம் வென்றவர் மற்றும் அர்சாத் நதீம் (பாகிஸ்தான்) தங்கம் வென்றவர்..
உலகில் உள்ள அனைத்து விளையாட்டுகளும் ஆசிய விளையாட்டு, அய்ரோப்பியக் கோப்பை விளையாட்டு, தென் அமெரிக்கக் கூட்டமைப்பு விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டு என பதக்கத்தைக் குறிவைத்து வெற்றி நோக்கோடு விளையாடும் விளையாட்டுகள் ஆகும்.
ஒலிம்பிக்கும் பதக்கத்தைக் குறிவைத்து விளையாடும் விளையாட்டுத்தானே என்று நினைக்கலாம். ஆனால், ஒலிம்பிக் பந்தயம் என்பது பதக்கத்தை முன்னிறுத்தி விளையாடும் விளையாட்டு அல்ல. அது நட்பை, சகோதரத்துவத்தை, ஒற்றுமையை வலியுறுத்தும் விளையாட்டு. இந்த விளையாட்டை நடத்தும் நாடுகளுக்கு பெரும் வருமானத்தை ஈட்டித் தராது.
இருந்தாலும், இந்த விளையாட்டின் மூலம் அந்த நாடுகளுக்கு முதலீடுகள் பெருகும்; சுற்றுலாவுக்காக கிட்டத்தட்ட இலவச விளம்பரம் கிடைக்கும்,
நேரடி வருமானம் இல்லை என்றாலும் மறைமுகமாக வருவாய் உண்டு.
அனைத்து நாடுகளும் ஏதோ ஒருவகையில் முரண்பட்டுப் பகை உணர்வோடுதான் இருக்கின்றன. ஆனால், இந்த ஒலிம்பிக்கில் அந்தப் பகைமையை மறந்து மக்கள் ஒன்றாக நிற்கின்றனர். எடுத்துக்காட்டாக, வட கொரியாவும் தென் கொரியாவும் எலியும் பூனையும் போன்று இருந்தாலும் ஒலிம்பிக்கில் இருவரும் ஒன்றுகூடி நிற்கின்றனர்.
இந்தியாவையும் பாகிஸ்தானையும் அரசியலுக்காக பகை நாடுகளாகவே ஊடகங்கள் எப்போதும் எழுதித் தள்ளும். ஆனால், ஈட்டி வீசுதலில் பாகிஸ்தான் தங்கமும் இந்தியா வெள்ளியும் வென்றது.
நீரச் மற்றும் நதீன் இருவரின் தாயார்களும் இரண்டு பேரையும் தங்களின் பிள்ளைகள் என்று பெருமையுடன் கூறி மகிழ்ந்துள்ளனர்..
அதே போல் சீனாவும் தைவானும் பகைமை நாடுகள். சிறு கடல் மட்டுமே இரண்டு நாடுகளையும் பிரிக்கிறது. அந்தச் சிறு கடல் பகுதியில் கூட இரண்டு நாட்டுக் கடற்படை கப்பல் வீரர்கள் அவ்வப்போது மோதிக்கொள்வார்கள். ஆனால், ஒலிம்பிக் மேடையில் சீனாவும் தைவானும் ஒருவர் தங்கம் மற்றவர் வெள்ளி என்று வாங்கி கொண்டு ஒலிம்பிக் பதக்க மேடையில் நிற்பார்கள். இப்படி பல எடுத்துக்காட்டுகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
ஒலிம்பிக் விவகாரத்தில் அரசியல் தலையீடு முற்றிலும் கூடாது என்பது சட்டம். ஆகையால் தான் எந்தப் பகை என்றாலும் மேடையில் தங்கம் வெல்லும் நாட்டின் நாட்டுப் பண் இசைக்கும் போது எதிரி நாடானாலும் எழுந்து நின்று மரியாதை கொடுப்பார்கள்.
ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் அனைத்து நாடுகளையுமே சமமாகத்தான் பாவிப்பார்கள். பல நாடுகள் நூறாண்டுகளுக்கும் மேலாக நடக்கும் ஒலிம்பிக் விளையாட்டில் பதக்கம் வாங்கியதே கிடையாது.
இருப்பினும் அவர்களையும் முதலிடத்தைப் பெற்ற அமெரிக்காவையும் ஒரே இடத்தில்தான் வைப்பார்கள்.
ஒலிம்பிக் – உலகினை விளையாட்டால் ஒன்றிணைக்கும் மாபெரும் திருவிழா. ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வென்ற வீரர்களை விட,
உலக மக்களின் மனங்களை வென்றவர்களே அதிகம்!
ஒலிம்பிக்கில் வெற்றிபெற்ற வீரர்கள் தங்கள் வெற்றிப் பதக்கத்தை ஏன் கடிக்கிறார்கள் என்பது நகைச்சுவையான ஒன்று. எப்படி தங்கத்தை கடைகளில் அடகு வைக்கும்போது உரசிப் பார்ப்பார்களோ, அதேபோல் தங்கம் உண்மையானதா என்று சோதிக்கவே கடித்துப் பார்ப்பார்கள். அது அக்காலத்திய வழக்கம் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் அப்படி ஒரு பழக்கம் இல்லை என்று ஒலிம்பிக் வரலாற்றாளர்கள் மறுக்கிறார்கள். பிறகு ஏன் சில படங்களில் வெற்றிபெற்ற வீரர்கள் பதக்கத்தைக் கடிக்கிறார்கள்? ஊடகத்துறையில் இருக்கும் ஒளிப்படக் கலைஞர்கள் தான் வெற்றி பெற்ற வீரர்களைக் கட்டாயப்படுத்துகிறார்களாம். அப்படியே இன்றும் தொடர்கிறது.
கிரேக்க நாட்டின் ஒலிம்பியாவில் பண்டைய ஒலிம்பிக் போட்டிகள் கி.மு. 776 முதல் கி.பி. 392 வரை வெற்றிகரமாக நடந்தன. பிறகு அதிலே மதம் புகுந்தது. அதாவது, கடவுள்தான் திறமைகளை உறுதி செய்கிறார் என்றும், மனிதன் தனது திறமைகளைக் காட்டுவது கடவுளுக்கு எதிரானது என்றும் கூறி, கிரேக்க அரசரான தியோடோசியஸ் கி.பி 393-இல் ஒலிம்பிக்கைத் தடை செய்தார்!
பியர் டி கூபெர்டின் என்னும் பிரான்ஸ் நாட்டுப் பிரபுவால் ஒலிம்பிக் 1896 இல் மீண்டும் புத்துணர்வு பெற்றது. இவரது கடினமான முயற்சி காரணமாக பன்னாட்டு ஒலிம்பிக் கமிட்டி (அய்.ஓ.சி) உருவாக்கப்பட்டு நவீன ஒலிம்பிக் பிறந்தது. 1896 இல் முதல் நவீன ஒலிம்பிக் கிரேக்கத் தலைநகர் ஏதென்ஸில் நடைபெற்றது. தற்போது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை ஒலிம்பிக் விளையாட்டுகள் நடைபெற்று வருகின்றன.
தொலைபேசியில் பேசினால் கூட மரண தண்டனை என்ற சட்டம் வடகொரியாவில் மட்டுமே! ஒலிம்பிக்கில் இரண்டு கொரிய வீரர்களும் ஒன்றாக நின்று செல்பி எடுக்கின்றனர்.
பண்டைய ஒலிம்பிக் போட்டிகளில் பெண்கள் பங்கேற்கவோ, போட்டிகளைக் காணவோ அனுமதிக்கப்படவில்லை. நவீன ஒலிம்பிக்கில் 1900 ஆம் ஆண்டு முதல் பெண்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். 2012இல் லண்டனில் நடந்த கோடைக்கால ஒலிம்பிக்கில் தான், போட்டியில் பங்கேற்ற 204 நாடுகளும் பெண் விளையாட்டு வீரர்களை அனுப்பின. பியர் டி கூபர்டின் 1914இல் ஒலிம்பிக் போட்டிக்கான ஒரு கொடியை வடிவமைத்தார். இக்கொடி 1920 முதல் நடைமுறையில் உள்ளது. ஒலிம்பிக் சின்னமான அய்ந்து வளையங்களும், மக்கள் வாழும் அய்ந்து பெருங்கண்டங்களைக் குறிக்கின்றன. மக்களிடையே நட்புணர்வை வெளிப்படுத்த வளையங்கள் சங்கிலி போல் ஒன்றோடொன்று இணைந்துள்ளன. வெள்ளைப் பின்னணியில் அய்ந்து வளையங்களும் அய்ந்து நிறங்கள் கொண்டவை. இடமிருந்து வலமாக நீலம், மஞ்சள், கருப்பு, பச்சை மற்றும் சிவப்பு ஆகிய வண்ணங்கள் இருக்கும். இந்த ஆறு வண்ணங்களில் ஏதாவது ஒன்று உலகின் அனைத்து நாடுகளின் தேசியக்கொடிகளிலும் இடம் பெற்றிருக்கும் என்பதே ஒலிம்பிக் வளையங்களின் சிறப்பு.
ஒலிம்பிக்கில் அதிக கவனம் ஈர்த்த துப்பாக்கி சுடும் வீரர் துருக்கியைச் சேர்ந்த
யூசுப் டுயுக். காரணம் மிகச்சாதாரணமாக வந்தார் நின்றார் சுட்டார் வென்றார்.
பொதுவாக துப்பாக்கி சுடும் போட்டியில் கண்களுக்கு சிறப்பு லென்ஸ் கண்ணாடி, காதுகளில் பாதுகாப்பு கருவி, கைகளில் துப்பாக்கி சுடுவதற்கு என்று தயாரிக்கப்பட்ட சிறப்புக் கையுறை என அணிந்து கொண்டுதான் போட்டியில் கலந்து கொள்வார்கள். ஆனால் இவரோ அப்படி எதுவும் இல்லாமல் வந்து போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றார்.
1928 ஆம்ஸ்டர்டாம் ஒலிம்பிக் போட்டியிலிருந்துதான், ஒலிம்பிக் சுடரைத் தற்போதைய வடிவில் ஏற்றிவைக்கும் நடைமுறை துவங்கியது. (பண்டைய ஒலிம்பிக் போட்டிகளில் கிரேக்கத்தின் ஒலிம்பியா ஹெஸ்டியா ஆலயத்தின் பலிபீடத்தில் ஒலிம்பிக் போட்டி தொடங்கியது முதல் முடியும் வரை ஒரு நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. இச்சுடர் சூரியனின் ஒளியிலிருந்து ஏற்றப்பட்டு,போட்டிகள் முடியும் நாள்வரை அணையாது பாதுகாக்கப்பட்டதாக கிரேக்க வரலாறு கூறுகிறது.) தூய்மை, முழுமை உள்ளிட்ட எண்ணற்ற அம்சங்களை ஒலிம்பிக் சுடர் சித்திரிக்கிறது. பழங்கால ஒலிம்பிக் நிகழ்விடமான ஒலிம்பியா’வில் குவி ஆடி மூலம், சூரியக்கதிர்கள் ஒருமுகமாகக் குவிக்கப்பட்டு, சுடர் உயிர் பெறுகிறது. பின்னர் ஒலிம்பிக் போட்டி நடக்கும் நாட்டுக்கு எடுத்துச் செல்லப்படும். போட்டி முடிவடையும்வரை அணையா விளக்காக இது சுடர் விடும்.
பண்டைய போட்டிகளில் இருந்து நவீன ஒலிம்பிக்கிற்குப் போட்டிகள் தொடர்வதைக் குறிப்பிடும் வகையில் ஒலிம்பிக் சுடர் தொடர் ஓட்டமாகக் கொண்டு செல்லப்படுகிறது.
உலகமெங்கும் சுடர் ஏந்தி உலாவரும் தொடரோட்டம் என்னும் நடைமுறை 1936 இல் அப்போதைய ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் தலைவரான கார்ல் டியெம் என்பவரால் அமலுக்குக் கொண்டுவரப்பட்டது. ஒரு வகையில் ஒலிம்பிக்கும், வாழ்க்கையும் ஒன்றுதான்.
இதைத்தான் நவீன ஒலிம்பிக்கின் தந்தையான பியர் டி கூபெர்டின் “ஒலிம்பிக் போட்டிகளில் மிக முக்கியமானது – வெற்றி பெறுவதல்ல; பங்கேற்பது! வாழ்க்கையில் இன்றியமையாதது – வெற்றி பெறுவது அல்ல; இயன்றவரை போராடுவது!” என்கிறார்.