பதிவு – 1: குதூகலமூட்டிய குழந்தைகளுக்கான கலை இலக்கியக் கொண்டாட்டம்
நான் சிறார் கலை இலக்கிய விழாவிற்கு என் குடும்பத்துடன் சென்றேன். நாங்கள் அங்கு சென்றவுடன் இனியன் மாமா எங்களை அன்புடன் வரவேற்றார். பிறகு விழியன் மாமா அவர்களின் குடும்பம் என்னை ஆரத்தழுவி பை ஒன்றைக் கொடுத்தார்கள். அந்தப் பையை ஆவலோடு திறந்து பார்த்தேன். எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி! உள்ளே இருந்த பொருட்கள் குழந்தைகள் பாதுகாப்பு புத்தகம், கதைப் புத்தகம், எனக்குப் பிடித்த பிஸ்கட், விளையாட்டுப் பொருட்கள் தாயக் கட்டை, இரண்டு கோலிக் குண்டுகள், எழுது பொருட்கள், ஸ்கிப்பிங் கயிறு ஆகியவை இருந்தன.
டாக்டர் அம்பேத்கர் அவர்கள் எழுதிய இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் முகவுரை ஒளிப்படம் தான் என்னை மிகவும் கவர்ந்தது இந்த நிகழ்ச்சியில்தான் முதன் முறையாகப் பறை இசையைக் கேட்டேன். இசையைக் கேட்டதும் ஒரு துள்ளல் வந்தது. கோமாளிகள் அட்டகாசம் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஓவியர் மருது அய்யா அவர்களின் பேச்சும் அவர் எங்களுக்கு ஓவியம் வரையக் கற்றுக் கொடுத்த விதமும் அருமை!
அக்கா மதிவதனி அவர்களின் பேச்சு எங்களைக் கவர்ந்தது. யெஸ்.பாலபாரதி அய்யா அவர்களின் பேச்சு சிறப்புக் குழந்தைகளின் மீதான என்னுடைய எண்ணத்தை மாற்றியது. குழந்தை மருத்துவர் அவர்கள் பேச்சு எனது உணவுப் பழக்க வழக்கங்களை மாற்றி உள்ளது. பாரம்பரிய உணவுகளை உண்கிறேன். நான் இதுவரை பார்க்காத பொம்மலாட்டம் நிகழ்ச்சி. பொம்மலாட்டத்தின் மூலம் நான் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும் குப்பைகளைத் தரம் பிரிப்பது பற்றியும் அறிந்து கொண்டேன். இனி எங்கள் வீட்டில் மட்கும் குப்பையைத் தனியாகவும் மட்காத குப்பையைத் தனியாகவும் கொடுப்பேன்.
பின்னர் பிரின்சு என்னாரெசு பெரியார் மாமாவின் பேச்சே எங்களைக் கலகலப்பாக வைத்தது. என்னைப் போன்ற மாணவ – மாணவிகளின் கதை சொல்லல் ஒவ்வொன்றும் சிந்திக்க வைத்தது. இந்தக் கதை சொல்லல் கேட்கும்போது அடுத்த ஆண்டில் இதே நிகழ்ச்சியில் நான் கதை சொல்ல வேண்டும் என்று ஆர்வத்தைத் தூண்டியது. இறுதியாக நாகப்பட்டினம் பள்ளி மாணவ மாணவிகள் நடத்திய பல்லி நாடகம் சொன்ன யாரும் யாரையும் அடிமைப்படுத்தக் கூடாது என்ற கருத்து சிறப்பாக இருந்தது. அனைத்தும் இனிமையாக முடிந்தன. இவற்றுக்குக் காரணமாக இருந்த இனியன் மாமாவிற்கு நன்றிகள். நிகழ்வில் விருந்தோம்பல் சொல்லவே வேண்டாம்! அவ்வளவு அருமை! இனிவரும் ஆண்டுகளிலும் நான் கலந்து கொள்வேன்.