துணுக்குச் சீட்டு – 21: தோல் நிறம் எப்படி வருது?
தோலின் நிறத்தில், கருப்பு அழகா? வெள்ளை அழகா? இல்ல மாநிறம் அழகா? என் கண்ணுக்கு, எல்லா நிறமுமே பேரழகு தான்! அது சரி, இந்த நிறம் எப்படி நமக்கு வருது?
எல்லாம், நம் தோலில் இருக்கும் மெலனோசைட்ஸ் எனப்படும் செல்லின் உதவியால் தான்! மனிதத் தோல் Wafer பிஸ்கட் மாதிரி, பல அடுக்குகளால் செய்யப்பட்டு இருக்கும். இதுல ஒரு அடுக்குதான் எப்பிடர்மிஸ் (Epidermis) இந்த அடுக்கில் தான் மெலனோசைட்ஸ் செல்கள் இருக்கும். இந்த செல்களில் மெலனின் சுரக்குது. இந்த செல்களில் எந்த அளவுல மெலனின் சுரக்குதோ, அந்த அளவுல தான் நம்மளோட தோல் நிறம் இருக்கும்.
அதிகமா மெலனின் சுரந்தால் அவர்களின் தோல் நிறம் கருமையாக இருக்கும். இதுவே குறைவாச் சுரந்தால் வெள்ளையா இருக்கும். இப்படித்தான் நம்மளோட தோல் நிறம் நமக்கு அமையுது.
ஒன்று கவனிச்சு இருக்கீங்களா? ஏப்ரல் மாதம் பள்ளி விடுமுறைவிட்டு உங்க நண்பர்களுக்கு ‘டாடா’ சொல்லும்போது அவங்க அப்போது இருந்த நிறத்தை விட, ஜூன் மாதம் அவங்களுக்கு மறுபடியும் ‘ஹாய்’ சொல்லும்போது ஒரு ‘ஷேட்’ (Shade) நிறம் குறைஞ்சு இருப்பாங்க. நீங்களும்தான்!
ஏன்னா, மே மாதம் முழுக்க எல்லோரும் “வெயிலோடு விளையாடி, வெயிலோடு உறவாடி”- ன்னு வெயிலில் சுற்றி இருப்பீங்க அல்லவா? அதனாலதான்.
வெயிலில் சென்றால் மட்டும் ஏன் அப்படி ஒரு ‘ஷேட்’ நிறம் குறைகிறோம்? அதுக்கும் மெலனின்தான் காரணம். சூரிய ஒளியில் பல கதிர்கள் இருக்கு. அதுல ஒன்னு தான் புற ஊதாக் கதிர். இது தோல் புற்றுநோய் வருவதற்கு ஒரு முக்கியமான காரணியாக இருக்கிறது. இந்தக் கதிர் நம்ம தோலுக்குள்ள ஊடுருவி எப்பிடர்மிஸ்மேலே படும் போது அங்கிருக்கும் மெலனோசைட்ஸ் செல்கள், “அச்சச்சோ, புற ஊதாக் கதிர்கள்” வந்திருச்சே என்று மெலனினைச் சுரக்குது. புற ஊதாக் கதிர் வந்த உடனே, மெலனின் ஏன் சுரக்குது? ஏன்னா, புற ஊதாக் கதிர்களிடம் இருந்து நம்முடைய தோலைக் காக்க மெலனின் முயற்சி செய்யும். எப்பிடர்மிஸ் அடுக்கில் சுரக்கும் மெலனின், கொஞ்சம் கொஞ்சமா தோலின் மேற்பகுதிக்கு வரும். அங்க வந்து தோல் மேற்பகுதிக்கு ஒரு குடை போல இருந்து மெலனின் நம்மோட தோலை புற ஊதாக்கதிர்களிடம் இருந்து ஓர் அளவுக்குக் காக்கும். திடீர்னு, வெயில் நம்ம மேல படும்போது, மெலனின் அதிக அளவில் சுரப்பதால்தான், நான், நீங்க, உங்க தோழர்கள் என, எல்லாரும், வெயிலில் போனால், ஒரு ‘ஷேட்’ நிறம் குறைஞ்சிடுறோம்.