நினைவில் நிறுத்துவோம் : பிஞ்சுகளுக்கு எதிரான பாலுணர்வு வன்மங்கள்! எதிர்கொள்வது எப்படி?
நாளுக்கு நாள் பெருகிவரும் பாலுணர்வு வன்மங்கள் கொடுமைகள், பாதிப்புகள், அரசையும், பெற்றோரையும், சிறுவர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருன்றன.
பத்து வயது, அய்ந்து வயதுப் பிள்ளைகள் பாதிக்கப்பட்ட நிலையைக் கடந்து இரண்டு வயது பிள்ளையைக் கூட வல்லுறவுக்கு உட்படுத்தும் நிலை அனைவரையும் அச்சத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளது.
தப்பான சீண்டல் என்ற நிலையும் தற்போது கடக்கப்பட்டு, வல்லுறவு வன்மங்கள் அன்றாட நிகழ்வாகி வருகின்றன.
பெண் பிள்ளைகள் உயிருள்ள உணர்வுள்ள ஆற்றலுள்ளவர்கள் என்பதையெல்லாம் சிறிது கூட கருத்தில் கொள்ளாமல், அற்ப உணர்வு தினவு தீர்க்க அப்பிஞ்சுகளை அழித்தே ஒழிக்கும் கொடுமைகளும் நடக்கும் நிலை வளர்ந்து நாள்தோறும் வருகிறது.
வக்கிர எண்ணம் கொண்ட, உடற்கூறு உண்மை அறியாத சில மூடர்கள் சமூக ஊடகங்களில் பரப்பும் தப்பான செய்திகளே பச்சிளம் பிள்ளைகள் மீதான வன் செயல்களுக்கு அடிப்படையாக அமைகின்றன.
எனவே, அரசு முதலில் இத்தகைய தப்பான கருத்துக்கள், ஆபாசப் படக் காட்சிகளைச் சமூக ஊடகங்களில் அறவே தடை செய்ய வேண்டியது உடனடிக் கடமையாகும். கட்டாயக் கடமையாகும்.
20 ஆண்டுகளுக்கு முன் 20 வயதுக்கு மேல் அறியப்பட்ட பாலுணர்வு பற்றிய செய்திகள், காட்சிகள் இன்றைக்கு 10 வயதுப் பிள்ளைகளுக்குக் கூட எளிதில் கிடைத்து விடுகின்றன. எனவே, சிறு பிஞ்சுகள் முதல் 80 வயது முதியவர்கள் வரை எல்லோர் உள்ளத்திலும் வக்கிர உணர்வுகள் வலியத் திணிக்கப்படுகின்றன; தூண்டப்படுகின்றன. இந்த அப்பட்டமான உண்மைகளை நீதித்துறையும், அரசும், காவல்துறையும், ஆசிரியர்களும், பெற்றோர்களும், சமூகத் தொண்டர்களும் தீவிரமாகக் கருத்தில் கொள்ளாமல் கடந்து போவது தான் இச்சீர்கேடுகள் பெருகுவதற்குக் காரணம்.
ஆபாசக் காட்சிகளும், ஆபாசச் செய்திகளும் சமூக ஊடகங்கள் மூலம் எளிதில் எல்லா வயதினருக்கும் ஏன் கிடைக்க வேண்டும்? ஏன் இவற்றை அறவே தடை செய்யக்கூடாது? நீதிமன்றங்கள் தாமே முன்வந்து கூட இதை உடனடியாகக் கருத்தில் கொண்டு உத்தரவுகளைப் பிறப்பித்து, சமூகத்தைப் பாழ்படுத்தும் இவற்றைக் கட்டாயம் தடை செய்ய வேண்டும்.
ஆபாசக் காட்சிகள், செய்திகள் எந்த வடிவிலும் எங்கும் கிடைக்காது என்ற நிலை இந்த வன்மங்கள் பெருமளவு ஒழிய ஒரு முக்கியமான தீர்வு ஆகும்.இதில் அக்கறை காட்டாது அலட்சியப் படுத்தினால் எந்தப் பிள்ளைக்கும் வாழ்க்கை உத்தரவாதம் இருக்காது. எப்போது எங்கு, யாரால், எது நடக்குமோ என்று அஞ்சி அஞ்சி வாழ வேண்டிய அவலமே வரும்.
பெற்றோர் கடமை
பிள்ளைகள் மூன்று வயது முதற்கொண்டு தங்களை விட்டு விலகிச் செல்கின்றனர் என்பதை பெற்றோர் ஆழமாகக் கருத்தில் கொள்ள வேண்டும்.
பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளியில் பணிபுரியும், பணியாளர்கள், ஆசிரியர்கள் என்று பலர் தொடர்பில் பிள்ளைகள் வருகிறார்கள். இக்காலத்தில் வீட்டில் உள்ளவர்களாலேகூட பிள்ளைகளுக்குப் பாதிப்பு வருகிறது என்று சொல்லப்படும் நிலையில், வெளித் தொடர்பில் உள்ளவர்களிடம் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை பிள்ளைகளுக்குப் பெற்றோர்கள் கட்டாயம் அறிவுறுத்த வேண்டும்.
வக்கிர சீண்டல் பற்றிய புரிதல்
பிள்ளைகளைப் பிறர் தொடும்போதும், அவர்களிடம் பிறர் பேசும் போதும் அதில் வக்கிரம் எப்படி எல்லாம் வெளிப்படும் என்பதை தங்கள் பிள்ளைகளுக்கு, பெற்றோர்களும், பெரியவர்களும், பள்ளியில் ஆசிரியர்களும் புரியும்படி சொல்லித் தர வேண்டும். அப்படிச் செய்பவர்களை கோபத்துடன் பார்க்கவும், விலகி வரவும் கற்றுத் தர வேண்டும்.
தனிமை தவிர்த்தல்
பிள்ளைகள் தனிமையில் எங்கும் செல்ல அனுமதிக்கக் கூடாது. அப்படிச் செல்லாத வகையில் சூழ்நிலையைப் பெற்றோரும், ஆசிரியரும், அரசும் உருவாக்கித் தர வேண்டும். அப்படிச் செய்தாலே குற்றங்களுக்கான வாய்ப்பு பெரும் அளவு குறையும். தனிமையைத் தவிர்ப்பது உளப் பாதுகாப்புக்கும் உடல் பாதுகாப்புக்கும் கட்டாயம் ஆகும்.
எச்சரிக்கையாய் இருக்க வேண்டியவை
குழந்தைகளுக்குச் சாக்லேட், அய்ஸ்கிரீம் போன்றவற்றைப் பிறர் வாங்கித் தந்தால் அதைச் சாப்பிடக்கூடாது என்பதைப் பிள்ளைகளிடம் வலியுறுத்த வேண்டும். பிள்ளைகளுக்குப் பிடித்தமானவற்றை வாங்கித் தருவதாகவோ, பிடித்த இடத்திற்கு அழைத்துச் செல்வதாகவோ பிறர் அழைத்தால் செல்லக்கூடாது என்பதைக் கண்டிப்புடன் சொல்ல வேண்டும்.
அம்மா அழைத்து வரச் சொன்னார், அப்பா அழைத்துவரச் சொன்னார் என்று யார் அழைத்தாலும் அவர்களுடன் செல்ல வேண்டாம் என்பதையும் வலியுறுத்திச் சொல்ல வேண்டும்.
ஆசிரியர்கள் கடமை
ஆசிரியர்கள் பிள்ளைகளின் இரண்டாவது பெற்றோர். எனவே, பெற்றோர்கள் அறிவுறுத்த வேண்டிய எல்லாவற்றையும் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். பெற்றோர்கள் சொல்வதைக் கேட்பதைவிட ஆசிரியர்கள் சொல்வதைப் பிள்ளைகள் தவறாமல் பின்பற்றும். எனவே, பிள்ளைகளை எச்சரிப்பதிலும், நல்வழிப் படுத்துவதிலும், பாதுகாப்பதிலும் ஆசிரியர்களின் பங்கு முதன்மையானது என்பதை ஆசிரியர்கள் உணர்ந்து நடக்க வேண்டும். அதனால் ஆசிரியர்களே தப்பு செய்யாது நடக்க வேண்டும்.
எது நடந்தாலும் உடனே அதைச் சொல்ல வேண்டும்
பிள்ளைகள் அன்றாடம் தங்களைப் பாதிக்கும் வகையில் எது, எங்கு நடந்தாலும் அதைப் பெற்றோர்களிடம் உடனே சொல்ல அறிவுறுத்த வேண்டும். சொல்லக்கூடாது என்று யாராலாவது அச்சுறுத்தப்பட்டாலும், பயப்படாமல் அதைப் பெற்றோரிடம் சொல்ல வேண்டும் என்பதைக் கட்டாயம் பிள்ளைகளுக்குக் கூற வேண்டும்.
பிள்ளைகள் என்னும் போது ஆண் பிள்ளைகளுக்கும் இவை பொருந்தும். எனவே, பிள்ளைகள் பாதுகாப்பில் அனைவரும் அக்கறை செலுத்த வேண்டும் இது ஒரு கூட்டுப் பொறுப்பு. பிள்ளைகளுக்கு விழிப்பு உண்டாக்கினால் அது அவர்களைப் பாதுகாக்கும். தப்புகளைப் பெருமளவு குறைக்கும்.