கூட்டிக் கழிச்சுப் பாரு… கணக்கு சரியா வரும்!
என்ன பிஞ்சுகளே!
தேர்வுகள் முடிந்து விடுமுறை மனநிலையில் இருக்கிறீர்களா? கொண்டாடுங்கள். விடுமுறை சிறப்பாக நாம் ஒரு கணக்கு விளையாட்டு விளையாடுவோமா? ஏன்… தேர்வு முடிந்த பின்னும் கணக்கா என்று சுணக்கப்படாதீர்கள்! விளையாட்டு புதிர்க் கணக்குதான். நான் சொல்லித் தருகிறேன். நீங்கள் உங்கள் நண்பர்களோடு விளையாடுங்கள். சரிதானா?
எண்களால் விளையாடுவோம்
1. 1 லிருந்து 9க்குள் வரும் எண்கள் இருக்கும்படியாக ஒரு மூன்று இலக்க எண்ணை சொல்லுங்கள். அதாவது 0 (சுழியாக) வரக்கூடாது. அப்படி எழுதப்படும் எண்ணில் ஒரே எண் திரும்ப வரக்கூடாது. எடுத்துக்காட்டாக, 388, 464, 889 இப்படி வரக்கூடாது. 237, 465, 892 இந்த மாதிரியாக இருக்க வேண்டும்.
2. எழுதிய அந்த எண்ணை தலைகீழாக எழுதச் சொல்லுங்கள். (எ.கா.) 237 என்றால் 732.
3. இவை இரண்டில் எது பெரிதோ அதிலிருந்து மற்றொன்றை கழிக்கச் சொல்லுங்கள். (அப்படி எழுதப்பட்ட அந்த எண் முதலில் எழுதிய எண்ணைவிட பெரிய எண்ணாக இருந்தால், அதிலிருந்து முதலில் எழுதிய எண்ணை கழிக்கச் சொல்லுங்கள். அல்லது தலைகீழாக எழுதிய எண் சிறிய எண்ணாக இருந்தால் முதலில் எழுதிய எண்ணிலிருந்து கழிக்கச் சொல்லுங்கள்.)
4. அப்பொழுது விடையாகக் கிடைக்கும் எண்ணை உங்களால் கூறமுடியும். நீங்கள் விடை எந்த எண்ணில் ஆரம்பிக்கின்றது (அதாவது 100வது மதிப்பு (ஸ்தானம்)) என்பதை மட்டும் கேட்டு அது,
0 என்றால் விடை 099
1 என்றால் விடை 198
2 என்றால் விடை 297
3 என்றால் விடை 396
4 என்றால் விடை 495 எனவும் 5லிருந்து 8 வரை என்றால் இந்த எண்களே தலைகீழாகவும் அதாவது 594, 693, 792, 891 எனவும் வரும். இந்த எண்களைத் தவிர வேறு எண்கள் வர வாய்ப்பே இல்லை.
5. சரி, அந்த விடையைச் சொல்லி விட்டீர்களா? இனி மறுபடியும் அவர்களுக்கு கிடைத்த விடையையும் விடை எண்ணையும் தலைகீழாக எழுதச் சொல்லி அந்த எண்ணுடன் கூட்டச் சொல்லுங்கள். (அதாவது விடை 198 என்றால் அதன் தலைகீழான 891 உடன் கூட்டச் சொல்லுங்கள்)
6. இப்பொழுது அவர்களுக்கு கிடைக்கும் விடையையும் நீங்கள் 1089 என்று சொல்லி வியப்படையச் செய்யுங்கள்.
10க்கும் மேற்பட்ட நண்பர்கள் ஒரே இடத்தில் இருந்தாலும் அவர்களுடன் இதனைச் சொல்லி விளையாட முடியும்.