வரலாறு: வெனிஸ் நகரம் உருவான கதை
இத்தாலியின் மிக முக்கியமான சுற்றுலா நகரமாகவும், யுனெஸ்கோவால் பாரம்பரிய நகரங்களில் ஒன்றென அறிவிக்கப்பட்டுள்ள மிதக்கும் நகரமான வெனிஸ், ஒரு காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட சதுப்பு நிலமாக இருந்தது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? சரி, அப்படி இருந்த சதுப்பு நிலம் எப்படி அனைவரும் விரும்பத்தக்க அழகான சுற்றுலாத் தலமாக மாறியது என்று பார்ப்போம் வாருங்கள்…
பொ.ஆ.452க்குப் பிறகு ரோமானியப் பேரரசு சரிவின் விளிம்பில் இருந்து மீண்டதைக் காட்டிலும், வெனிசியர்கள் தண்ணீரில் ஒரு நகரத்தை எவ்வாறு உருவாக்கினார்கள் என்பதைப் பற்றி அறிய எப்போதும் ஓர் ஆர்வம் நம் அனைவருக்கும் இருக்கின்றது அல்லவா!
வறுமையின் விளிம்பிலிருந்து தப்பிக்க, வெனிசியர்கள் கடற்கரைக்கு அருகிலுள்ள சிறிய தீவுகளுக்குப் படகில் தப்பிச் சென்றனர். இந்தத் தீவுகள் இயற்கையாகவே மென்மையான களிமண்ணால் ஆன சதுப்பு நிலங்களாய் இருந்தன, அதாவது ஓர் ஆளின் எடையைக் கூடத் தாங்க முடியாத அளவுக்கு நெகிழ்வுத் தன்மையுடன் இருந்தது, அந்த நிலம். ஆனால், அறைகூவலாக விளங்கிய இத்தகைய இயற்கைச் சூழலில் உலகைத் திகைக்க வைக்கும் ஒரு சாதனையை வெனிசியர்கள் நிகழ்த்த எண்ணினர். அதற்காக அவர்கள் காடுகளில் இருந்து அதிக அளவு மரக் கட்டைகளைச் சேகரித்தனர்.
சதுப்பு நிலப்பகுதியில் மரக்கட்டைகளை அடுக்கி உருவாக்கப்பட்ட தரைகள்
அய்ந்து மீட்டர் ஆழமுள்ள களிமண் அடுக்கில் மரக்கட்டைகளைச் செங்குத்தாக ஒவ்வொன்றாகச் செலுத்தினர், இது களிமண்ணை இறுக்கியது மட்டுமல்லாமல், மரக் கட்டைகளையும் உறுதிப்படுத்தியது. சீரற்ற மரக் குவியல்களைச் சமன் செய்த பிறகு, எடையின் அழுத்தத்தைத் தாங்குவதற்கு மேல் மட்டத்தில் மரப் பலகைகளை அமைத்தனர், பலகைகளின் மேற்புறத்தில் பல அடுக்குகளாகக் கற்களைக் கொண்டு நிரப்பினர். உறுதித் தன்மையுடன் அமைக்கப்பட்ட இந்த செயல்முறை திடமான அடித்தளத்தை உருவாக்கியது.
பின்னர் அதன் மேலே வீடுகளைக் கட்ட ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் மரக்கட்டைகளையே பயன்படுத்தினர். ஆனால், பல பேரழிவுகளைச் சந்தித்த பிறகு, கட்டடங்களின் எடையைக் குறைக்க செங்கற்களுக்கு மாறி, அவற்றை மூன்று அடுக்குகளாக மட்டப்படுத்தி, சிமெண்டிற்குப் பதிலாக சுண்ணாம்பு மற்றும் சாந்தைப் பயன்படுத்தினர்.
இதனால் வீடுகள் மிகவும் நெகிழ்வானதாகவும் வெளிப்புறச் சுவர்களை நிலைப்படுத்தப் பயன்படும் நங்கூரக் கம்பிகளைக் கொண்டு சற்றுத் திரும்பக்கூடியதாகவும் இருந்தது. முதல் வீடு கட்டப்பட்டதும், அதைப் பின்பற்றி நிறைய மக்கள் அதேபோன்ற வீடுகளைக் கட்டத் தொடங்கினர். இதனால் வெனிஸ் நகரம் மெல்ல மெல்ல புது வடிவம் பெற்றது.
முதல் 500 ஆண்டுகளில் இந்த நகரில் எங்கும் பாலங்கள் இருந்ததே இல்லை. போக்குவரத்து முற்றிலும் படகு மூலமாகவே இருந்தது. கட்டடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்குச் செல்ல மிதக்கும் பாலங்களும் மரப்பாலங்களும் கட்டப்பட்டன. இறுதியில் நன்னீர் ஆதாரம் இல்லாத, கடல் நீரால் சூழப்பட்ட, நூற்றுக்கணக்கான தீவுகளை இணைக்கும் கல் பாலங்களுக்கு அதுவே வழிவகுத்துள்ளது.
அதன் மேல் வீடுகள் அமைத்த முறை
மழை நீரைச் சேகரித்த முறை
மக்கள் தொகை பெருகியதால், வெனிசியர்கள் ஆரம்பத்தில் பிரதான நிலத்திலிருந்து படகு மூலம் குடிநீர் கொண்டு சென்றனர். இந்தத் தண்ணீர் அவர்களின் தேவைகளுக்குப் போதுமானதாக இல்லை. ஆகவே, அவர்கள் வெற்று இடங்களைத் தோண்டி, அவற்றை நீர்த்தேக்கத்திற்காக மணல் மற்றும் கற்களால் நிரப்பத் தொடங்கினர். மழை நீரைச் சேமிக்க ஒரு கிணற்றை அமைத்து, கூரைகளிலிருந்து வடிகால் குழாய்களையும் அந்தக் கிணற்றோடு இணைந்தனர். வெனிஸ் முழுவதிலும் உள்ள மக்களைத் தக்கவைக்கத் தேவையான மழைநீரைச் சேகரிக்கும் கிணறுகள் புனல்களைப் போலச் செயல்பட்டன. இவ்வாறாக வெனிஸ் நகரம் மக்கள் வாழ்வதற்குகந்த அழகு நகரமாக மாறியது.
மனித எடையைக் கூடத் தாங்க முடியாத சதுப்பு நிலத்தை உலகப் புகழ் பெற்ற மிதக்கும் நகரமாக வெனிஸ் மக்கள் மாற்றியது உண்மையிலேயே வியக்கத் தக்கது; பாராட்டத்தக்கது. வெனிஸைக் கட்டமைத்தவர்களின் அறிவுக் கூர்மையும், தொழில் நுட்பமும், கலை நுட்பமும் இன்றும் பாராட்டத்தக்கன.