நிறைவுடன் வாழ்வாய்!
கண்ணே மணியே அரும்பே அலரே
கனிவாய்ப் பகர்வேன் உளமதில் கொள்வாய்
எண்ணங்கள் மேன்மை வினையாய் அமைத்தல்
எழில்நிறை வாழ்வை அளிக்குமே என்றும்!
அளவோடு உணவை அமைதியாய் உண்பாய்
வளம்செய் உடற்பயிற்சி ஊக்கமாய்ச் செய்வாய்
நலம்செய் உறக்கத்தை நாள்தோறும் கொள்வாய்
நிலையான வாழ்வினை என்றும் அடைவாய்
பெரியோரைப் போற்றியே பேருவகை பெற்றிடு
பெற்றோரைப் பேணி பெருமை அடைந்திடு
பேராசை கொன்றே பெருமகிழ் வெய்திடு
பேராற்றல் வாய்த்திடும் வாழ்வினைச் செய்திடு!
கற்பதைக் காலம் முழுவதும் தொடர்வாய்
கருப்பொருள் கூறும் கருத்தினை அறிவாய்
கலைகள் பலவும் பயனுற ஏற்பாய்
கறையிலா வாழ்வை! களிப்புடன் வாழ்வாய்
இயற்கை அறைந்திடும் உண்மைகள் கேட்டிடு
இயல்பாய் அறிவியல் பார்வை வளர்த்திடு
இலக்கினை நோக்கிய தேடலைப் போற்றிடு
இளமை தொடரும் இனியவாழ் வமைத்திடு
வாழ்க்கை தருமரு வாய்ப்பினைப் பற்று
வலிமை பெறவே வலியையும் போற்று
பிழையும் தவறும் பாடமென் றொப்பு
பிணக்கிலா இன்பம் பயத்திட வாழ்ந்திடு!
வெற்றிச் செருக்கு வலிமை ஆகுமோ
பற்றி எரியும் அழலாய்ப் பொசுக்குமே
கற்றுணர் தோல்வியும் தந்திடும் பாடமே
பெற்று மகிழ்வாய் நிறைவான வாழ்வே
பயிற்சி எதனையும் எளிதென ஆக்கும்
முயற்சி அனைத்தும் ஆக்கிடச் செய்யும்
அயர்ச்சி தவிர்த்தல் வளம்தனைச் சேர்க்கும்
உயர்ச்சி தரும்நனி நல்வாழ்வு தந்திடும்
பாலின பேதமிலா நட்பினைச் செய்வாய்
பாகுபாடு இல்லா உறவினைக் காப்பாய்
ஆகூழ் கணியம் புரட்டென அறிவாய்
ஆக்கம் மிளிரும் நிறைவுடன் வாழ்வாய்
இத்தனை சொல்வதில் எத்தனை வாய்க்கும்
இரண்டொன்று இல்லை எனினும் கரும்பே
இயன்றதைச் செய்திடும் எண்ணம் சமைத்தே
இன்புற்று வாழ்ந்திட வாழ்த்து!
– இறைவி